Translate

Sunday, 13 November 2011

சொந்த வீடுகளுக்குத் திரும்பக் காத்திருக்கும் யாழ்ப்பாண மக்கள்


சொந்த வீடுகளுக்குத் திரும்பக் காத்திருக்கும் யாழ்ப்பாண மக்கள்
இடம்பெயர்ந்த 95 வீதமான மக்கள் மீளக்குடியேற்றப்பட்டு விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் கூறிவரும் நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் இடம்பெயர்ந்த 34,000 பேர் தமது சொந்த வீடுகளுக்குத் திரும்பிச் செல்லமுடியாமல் இருப்பதாக, ‘சண்டே ரைம்ஸ்‘ வாரஇதழில் வெளியான செய்திக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

‘சண்டே ரைம்ஸ்‘ செய்தியாளர் என்.பரமேஸ்வரன் எழுதிய இந்தக் கட்டுரையை ‘புதினப்பலகை‘க்கான மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 

சிறிலங்காவின் வடக்கு, கிழக்கில் போர் முடிவுக்கு வந்து இரு ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும், தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் 34,000 பேர் அல்லது 2000 குடும்பங்கள் வரை நலன்புரி நிலையங்கள் மற்றும் வாடகை வீடுகளில் தங்கி வாழ்கின்றனர்.

இதைவிட மேலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இடம்பெயர்ந்த 7100 மக்கள் இந்தியாவில் உள்ள அகதி முகாம்களில் வாழ்வதாக யாழ்.மாவட்ட செயலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – பளைப் பகுதியைச் சேர்ந்த 150 தொடக்கம் 200 குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் குடியேறுவதற்காகக் காத்திருப்பதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஏழு கிராம அதிகாரி பிரிவுகளில் குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

யாழ்ப்பாணத்தில், சிறிலங்கா இராணுவத்தினரின் வடபகுதிக்கான பிரதான தளம் மற்றும் விமான நிலையம் அமைந்துள்ள பலாலிப் பகுதியைச் சேர்ந்த மக்களே பெருமளவில் இடம்பெயர்ந்தோர் பட்டியலில் உள்ளனர்.

44,300 பேர் அல்லது 12,500 குடும்பங்கள் பலாலியில் இருந்து 1990 இல் இடம்பெயர்ந்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்த பலாலி வாழ் மக்கள் சுன்னாகம், மல்லாகம், பருத்தித்துறை போன்ற இடங்களில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாங்களில் வாழ்கின்றனர்.
மத்திய வகுப்பைச் சேர்ந்த குடும்பங்கள் வாடகை வீடுகளில் குடியிருக்கும் அதேவேளை, மாதகல், காரைநகர் போன்ற கரையோரப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தற்போதும் மீள்குடியமர்வுக்காகக் காத்திருக்கின்றனர்.

மாதகலில் இருந்து 410 குடும்பங்களும், காரைநகரிலிருந்து 400 தொடக்கம் 450 வரையான குடும்பங்களும் இடம்பெயர்ந்தனர்.

தற்போது இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள யாழ். மாவட்டத்தின் வேறு பிரதேசங்களைச் சேர்ந்த 3500 குடும்பங்கள் தமது சொந்த வீடுகளுக்குச் செல்வதற்காகக் காத்திருக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான இடம்பெயர்ந்தோர் முகாமாக சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையம் அமைந்துள்ளது. இங்கு 270 குடும்பங்கள் தங்கியுள்ளனர். ஆனால் இந்த மக்களுக்காக வழங்கப்பட்டுள்ள அடிப்படை சுகாதார வசதிகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.

இடம்பெயர்ந்து வாழும் இந்த மக்கள் தமது பிரச்சினைகளை ‘சண்டே ரைம்ஸ்‘ வாரஇதழுடன் பரிமாறிக் கொண்டனர்.
இந்த நலன்புரி முகாமில் உள்ள மலசலகூடங்களின் குழிகள் மழைகாலத்தில் நிரம்பி வழிகின்றன. அத்துடன் இவை பன்படுத்த முடியாமலும் உள்ளதாக கௌரி என்பவர் தெரிவித்தார்.

ஒரு ஆண்டுக்கு முன்னர் சிறிலங்கா அரசாங்கம் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான உலருணவுப் பொருட்களை வழங்குவதைத் தடைசெய்தமை உள்ளடங்கலாக இந்த மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருவதாக ராஜேஸ்வரி என்பவர் தெரிவித்தார்.

நாட்டின் தென்பகுதியிலிருந்து மேசன் வேலை செய்வதற்கான ஆட்கள் கொண்டு வரப்படுவதால் வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக மேசன் வேலை செய்கின்ற பொன்னுத்துரை என்பவர் தெரிவித்தார்.

பெரும்பாலும் இவர் மாதம் ஒன்றில் 15-20 நாட்கள் மட்டுமே வேலையை எதிர்பார்த்திருக்க முடியும் எனக் கூறுகிறார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் பவானி தனது கணவரை இழந்துள்ளார். பவானியும் இவரது இரு பிள்ளைகளும் இவரது தாயாருடனேயே வசிக்கிறார்கள்.

பாடசாலைக்கு அணிந்து கொண்டு போவதற்கு, தனது இரு பிள்ளைகளுக்கும் சப்பாத்துக்களைக் கூட வாங்கத் தன்னால் முடியவில்லை என இவர் தெரிவித்தார்.

தெல்லிப்பளை, மாவிட்டபுரம், கொல்லன்கலட்டி, கீரிமலை, கருகம்பனை போன்ற இடங்களைச் சேர்ந்த மக்களுக்கு சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டு விட்டது. இந்த மக்களின் பெரும்பாலான வீடுகள் யுத்தத்தால் அழிவடைந்துள்ளன.

அவர்களுடைய வீடுகள் மிகவும் மெதுவாகவே கட்டப்படுகின்றன. கொல்லன்கலட்டியில் உள்ள இந்திராணியின் வீடு யுத்தத்தின் போது தரைமட்டமாக்கப்பட்டது.

தனக்கான புது வீட்டைக் கட்டும் காலப்பகுதியில் இந்திராணி தற்காலிகமாக கிடுகினால் அமைக்கப்பட்ட குடிசையிலிருந்தே தனது பிற அலுவல்களைக் கவனிக்க வேண்டியுள்ளது.

அத்துடன் இரவில் தங்குவதற்காக இவர் தனது சொந்த ஊரிலிருந்து ஆறு கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள உடுவிலில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்குச் செல்ல வேண்டியுள்ளது.

இந்திராணி போன்றே கொல்லன்கலட்டியைச் சேர்ந்த பல மக்களின் நாளாந்த வாழ்வு கழிகிறது. அதாவது பகலில் தமது சொந்த வீடுகளைக் கட்டுவதில் செலவிடும் இந்த மக்கள் இரவில் வேறு இடங்களுக்குச் செல்கின்றனர்.

No comments:

Post a Comment