Translate

Tuesday, 29 November 2011

அரசியல் தீர்வு வழங்க இதுவே சரியான சந்தர்ப்பம் யசூசி அகாஷி


தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வழங்கி அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை அடைய சிறிலங்காவுக்கு இது அரிய சந்தர்ப்பம் என ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு வருகை தந்துள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இன்று மதியம்  சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று முற்பகல் 11.30 தொடக்கம் 12.30 மணிவரை மதிய போசனத்துடன் இடம்பெற்ற இச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பு தொடர்பாக எமது ஒன்லைன் உதயனுக்கு கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்,
இன்றைய இந்தச் சந்திப்பின் போது தற்போதைய அரசியல் சூழ்நிலை, அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, தமிழர்களுக்கான தீர்வு வழங்கப்படுவதில் அரசாங்கம் கொண்டுள்ள அக்கறையின்மை வடக்கு, கிழக்கில் இராணுவப் பிரசன்னம், தமிழர் பகுதிகளில் ஏற்படுத்தப்படும் சிங்களக் குடியேற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து அகாஷியிடம் விளங்கப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
தமது தரப்பு கருத்துக்களை செவிமடுத்த அகாஷி, யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழர்களுக்கான நியாயமான தீர்வு ஒன்றை முன்வைப்பதற்கு அரசாங்கத்திற்கு இது சரியான சந்தர்ப்பம் எனவும் தமிழர்களுக்கு தீர்வு வழங்குவதன் ஊடாகவே சிறிலங்கா பொருளாதார நிலையில் உயர முடியும் எனவும் தெரிவித்ததாக பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் அரசியல் தீர்வு விடயத்தில் விரைந்து செயற்பட வேண்டியமை குறித்து தான் சந்திக்கவுள்ள அமைச்சர்கள் மற்றும் அரச பிரதிநிதிகளுக்கு வலியுறுத்தவுள்ளதாகவும் தீர்வு விடயத்தில் தாமும் தமது அரசாங்கமும் சகலவிதமான ஆதரவினை வழங்கத் தயாராக உள்ளதாக அகாஷி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன்
இந்த சந்திப்பு மிகவும் திருப்திகரமானதாக அமைந்ததென தெரிவித்துள்ளார். அகாஷியுடனான இச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், பொன்.செல்வராசா, அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment