தடுப்புக் காவலில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாத கட்டத்தை அடைந்துவிட்டது. இது தொடர்பாக அனைத்துத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து அழுத்தம் தர வேண்டும். என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஆளுந்தரப்பு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான் ஆகியோரும் எதிர்த்தரப்பில் கூட்டமைப்பும் இணைந்து செயற்பட வேண்டும். இதன் மூலம் நீண்டகாலமாக இழுபறிப்படும் இப்பிரச்சினைக்கு இறுதி தீர்வு காணவேண்டியதற்கான அவசர தேவையை அரசாங்கத்தின் உயர்பீடத்திற்கும், சர்வதேச சமூகத்திற்கும் உணர்த்த முடியும். எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் தமிழ் சிறைக்கைதிகள் தாக்கப்பட்டும், நிர்வாணப்படுத்தப்பட்டும் அவமதிக்கப்பட்டும் உள்ளார்கள். அதற்கும் மேலாக சிறைச்சாலையிலிருந்த இந்து ஆலயம் சேதமாக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் செய்துவிட்டு “இன்றைய தினத்திற்கு உங்களுக்கு நாங்கள் தருகிற பரிசு இது” என சொல்லி இத்தகைய கீழ்த்தரமான நடவடிக்கையை சில இனவாத அதிகாரிகளும், சக கைதிகளும் நியாயப்படுத்தி உள்ளார்கள்.
இது முதன் முறையாக நடைபெறும் சம்பவமல்ல நீண்டகாலமாக நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் தமிழ்க் கைதிகள் மீது வன்முறை தாராளமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அனுராதபுரத்தில் இதற்கு முன்னரும் இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளது. கண்டி போகம்பரை, நீர்கொழும்பு, கொழும்பு மகஸின், களுத்துறை என நீண்ட வரிசையில் இத்தகைய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. என மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
சரணடைந்த புலிகள் இயக்க உறுப்பினர்கள் ஏதோ ஒரு அடிப்படையில் புனர்வாழ்வு பயிற்சி வழங்கப்பட்டு கட்டங்கட்டமாக விடுவிக்கப்படுவதாக சொல்லப்படுகின்றது. இந்த விடுவிப்புகளை கருணா அம்மான், கேபி ஆகியோர் கண்காணிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் புலிகள் இயக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள் என்ற சந்தேகங்களின் அடிப்படையில் பெரும்பாலானோர் நீண்டகாலமாக சிறைவாசம் அனுபவிப்பது நியாயமாகாது. இவர்களில் தீர்ப்பு வழங்கப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படலாம். விசாரணைகள் முடிவடையாத தரப்பினரை புனர்வாழ்வு முகாம்களுக்கு மாற்றி படிப்படியாக விடுவிக்கலாம். இதற்கு புதிய சட்டதிருத்தங்கள் தேவையானால் பாரளுமன்றத்தில் அனைத்து கட்சிகள் ஆதரவுடன் அவற்றை கொண்டுவரலாம். என்றார்.
அத்:துடன், தேசிய இனப்பிரச்சினை தொடர்பிலே கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேசுகின்றது. இப்பேச்சுவார்த்தைகள் ஒரு கட்டத்தினை அடைந்த பிறகு அதில் அரசாங்கத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இருக்கின்ற ஏனைய தரப்பினர்களும் இணைந்துகொள்வார்கள். ஆனால் தமிழ் தடுப்புக் காவல் கைதிகள், காணாமல்போனோர் ஆகியோரது பிரச்சினைகள் தொடர்பில் அனைத்துத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்றே இணைந்து செயற்படவேண்டிய நிலைமை தற்போது உருவாகியுள்ளது. ஏனென்றால் இவை இன்று எரிந்துகொண்டிருக்கும் அவசர மனிதாபிமானப் பிரச்சினைகளாகும்.
தடுப்புக்காவல் கைதிகளாக வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு ஆகிய அனைத்துப் பிரதேசங்களை சேர்ந்த தமிழர்களும் இருக்கின்றார்கள். ஆண்களும், பெண்களும், வயோதிபர்களும், மதகுருமார்களும் இருக்கின்றார்கள். கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் சில தமிழ்ப்பெண் கைதிகள் தங்களது குழந்தைகளுடன் சிறைவாசம் அனுபவிக்கிறார்கள் கடுமையான சுகயீனமான கைதிகளும் இருக்கின்றார்கள்.
எனவே ஆளுந்தரப்பிலும், எதிர்த்தரப்பிலும் இருக்கின்ற அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது அரசியல், பிரதேச பேதங்களை கடந்து ஒரேகுரலில் ஜனாதிபதியை வலியுறுத்தவேண்டும். இது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை என்பதால், இத்தகையதொரு கூட்டுக் கோரிக்கையை அரசாங்கத்தால் சுலபமாக நிராகரிக்க முடியாது. இன்று நிலவுகின்ற சர்வதேச சூழலைப் பயன்படுத்தி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதை ஆளுமையுடன் சாத்தியமாக்க வேண்டும்.
No comments:
Post a Comment