Translate

Sunday, 11 December 2011

அமெரிக்க-இந்திய உறவுக்குள் உடையும் சீனாவின் முத்துமாலை

அமெரிக்க-இந்திய உறவுக்குள்
உடையும் சீனாவின் முத்துமாலை


-இதயச்சந்திரன்
 
சீன அரசின் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட தகவல்களின் பிரகாரம், இலங்கையுடனான  பொருளாதார வர்த்தகமானது 2.1 பில்லியன் டொலர்களை கடந்த வருடம் எட்டியுள்ளதெனக் கூறப்படுகிறது.
அதாவது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நிதி நெருக்கடிக்குள் சிக்குண்டு இருப்பதால், சீனாவின் முதலீடுகள் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் அதிகரிக்கிறது.

ஆகவே, ஆசியாவிலுள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை, மியன்மார், பங்களாதேஷ் போன்ற நாடுகளைக் குறிவைத்தே சீனாவின் நகர்வுகள் அமைகிறதெனலாம்.

இருப்பினும் துறைமுக அபிவிருத்தி என்கிற போர்வையில் இந்தியாவைச் சுற்றி முத்துமாலை தொடுக்கும் சீனாவின் வியூகத்தை உடைக்கும் முயற்சியினை, இந்தியாவும் அமெரிக்காவும் மேற்கொள்வதனை கடந்த சில மாதங்களாகக் காணக்கூடியதாகவிருக்கிறது.
ஆகவே, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையைச் சூழ அமைந்துள்ள நாடுகளில், அமெரிக்க - இந்திய அணிக்கும், சீனாவிற்குமிடையே ஆரம்பித்திருக்கும் பனிப்போரில் இலங்கை எங்கே தள்ளப்படப் போகிறது அல்லது பலவீனமானதொரு புள்ளியாக மாறப்போகிறது என்பதனை தமிழ் மக்கள் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.
அமெரிக்க  -இந்திய கூட்டு, மியன்மார் மற்றும் பங்காளதேஷத்துடன் இணக்கப்பாட்டு அரசியலையும், பாகிஸ்தானுடன் முரண்நிலை அரசியலையும்  கையாள்கிறது.

அடுத்ததாக பாகிஸ்தான், சீன எல்லையோடு அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் குறித்து, இந்திய -அமெரிக்காவின் பார்வையையும், முதலீட்டு ஆதிக்க நகர்வுகளையும் நோக்கலாம்.
நவம்பர் 26ஆம் திகதி அமெரிக்க விமானப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 26 பாகிஸ்தான் இராணுவத்தினர் கொல்லப்பட்டதால், இருநாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.
அபோதாபாத்தில் அல்கொய்தா தலைவர் ஓசாமா  பின்லாடன் அமெரிக்க கொமாண்டோக்களினால் கொல்லப்பட்டதைத்
தொடர்ந்து உருவான நெருக்கடிகள், அமெரிக்க எதிர்ப்புணர்வை பாகிஸ்தானில் அதிகரிக்க உதவின.
26 இராணுவத்தினர் கொல்லப்பட்டவுடன், ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராகப் போரிடும் அமெரிக்கப் படைகளுக்கான ஆயுத வழங்கல் பாதையை பாகிஸ்தான் அரசு மூடி, தனது எதிர்ப்பினைத் தெரிவித்தது.
அத்தோடு கடந்த 5ஆம் திகதி ஜேர்மனி பொன் நகரில் (BONN) நடைபெற்ற சர்வதேச ஆப்கானிஸ்தான் மாநாட்டில் கலந்துகொள்ள பாகிஸ்தான் அதிபர் சர்தாரி மறுத்துவிட்டார்.

அண்மைக்காலமாக அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டுகளினால் பாகிஸ்தான் அரசு சினமடைந்ததைக் கவனிக்கலாம்.
தலிபான்களுக்கு ஆயுத உதவிகளையும், பயிற்சியையும் பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. வழங்குவதாக அமெரிக்காவும், இந்தியாவும் தொடர்ச்சியாகக் கூறிவரும் நிலையில், 26 இராணுவத்தினரின் கொலையோடு முறுகல் நிலை உச்ச நிலையைத் தொட்டிருக்கிறது.

இந் நிலையில் தலிபான்களுக்கு எதிரான போரில் அதிபர் ஹமிட் கர்சாய்க்கு பொருண்மிய மற்றும் இராணுவ ரீதியிலான உதவிகளை அமெரிக்கா வழங்கிவரும் அதேவேளை, ஆப்கானிஸ்தானின் உட்கட்டுமான அபிவிருத்தியிலும், கனிமங்களை அகழ்வு செய்யும் வேலையிலும் பலகோடி டொலர் முதலீடுகளை இந்தியா உட்செலுத்தியுள்ளது. 
அத்தோடு சீனாவின் முதலீட்டு ஆதிக்க நகர்வினை முறியடிக்கும் வகையில், இரும்புத்தாதினை (IRON ORE) அகழ்ந்தெடுக்கும் ஒப்பந்தத்திலும் இந்தியா கைச்சாத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காபூலிலிருந்து மேற்கே 130 கி.மீற்றர் தொலைவிலுள்ள பம்யன் மாகாணத்தின் மலைப் பிரதேசமான ஹஜிகக் (Hajigak) இல் காணப்படும் இரும்புத்தாது படிமத்தை அகழ்ந்தெடுக்கும் ஒப்பந்தத்தில், ஆப்கான் இரும்பு மற்றும் உருக்கிரும்பு கூட்டமைப்பில் (AFISCO) இணைந்துள்ள செயில் (Steel Authority India Ltd), மொனே இஸ்பட் எனர்ஜி லிமிட்டட், ராஷ்ட்ரீய இஸ்பட் நிக்காம் லிமிட்டெட், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் லிமிட்டெட் மற்றும் ஜே.எஸ் டபிள்யூ  ஸ்டீல் லிமிட்டட், ஜின்ரால் ஸ்டில் பவர் லிமிட்டெட் மற்றும் கே.எஸ்.டபிள்யூ ஸ்பட் ஸ்டீல் லிமிட்டெட் என்கிற இந்திய நிறுவனங்கள் கைச்சாத்திட்டுள்ளன. இதில் "பி', "சி', "டி' என்கிற பகுதிகளை இந்திய நிறுவனமும், "ஏ' பகுதியை கனேடிய நிறுவனமான கிலோ கோல்ட் கம்பனியும் பெற்றுள்ளது.

60களில் மேற்கொண்ட ஆய்வுகளில், 1.8 பில்லியன் தொன் இரும்புத்தாது இந்த ஹஜிகக் இல் இருப்பதாகவும், இதிலிருந்து சராசரியாக 64 சதவீத இரும்பினை பெறலாமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வொப்பந்தத்தின் பிரகாரம், சுரங்கங்களை நிர்மாணிப்பதோடு, உருக்கிரும்பினை (STEEL) உருவாக்கும் தொழிற்சாலையையும் இந்நிறுவனங்கள் நிறுவ வேண்டும்.

ஆப்கான் சுரங்க கைத்தொழில் அமைச்சின் திட்டப் பணிப்பாளர் அப்துல் ஜலீல் யும்ரியானியின் எதிர்பார்ப்பானது, அடுத்த 30 வருடங்களில் 14.6 பில்லியன்  டொலர்களை வெளிநாட்டு முதலீடுகளாக கொண்டுவர வேண்டும் என்பதில், 10.7 பில்லியன் டொலர் முதலீடு இந்தியாவிலிருந்து கிடைக்குமென்கிற நம்பிக்கையைக் கொண்டிருக்கிறது.

இருப்பினும் அமெரிக்க புவியியல் ஆய்வுத் திணைக்களம், சென்ற வருடம் வெளியிட்ட அறிக்கையில், ஏறத்தாழ ஒரு ரில்லியன் டொலர் பெறுமதியான அகழ்ந்தெடுக்கப்படாத கனிம வளங்கள் ஆப்கானில் புதைந்து கிடக்கிறதென குறிப்பிட்டுள்ளது.
ஆகவே அடுத்த 30 வருடங்களில், வெளிநாட்டு முதலீடாக 14.6 பில்லியன் டொலர்களையே ஆப்கானிஸ்தான் எதிர்பார்ப்பதாகக் கூறப்படுவது பணிப்பாளரின் முதிர்ச்சியற்ற எதிர்கூறலைக் காட்டுவதாகவே அமைகிறது.

இவைதவிர, சீன அரசால் நடாத்தப்படும், தாதுக்களிலிருந்து உலோகங்களைத் தயாரிக்கும் கூட்டுத்தாபனமானது, ஆப்கானின் அய்னக் (AYNAK) செப்புச் சுரங்கத்தில் தனது அகழ்வுப் பணியை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.
இருப்பினும் இந்த இரும்புத்தாது அகழ்வு ஒப்பந்தத்தை, கையிருப்பில் 3 ரில்லியன் வெளிநாட்டு நாணயத்தை வைத்திருக்கும் சீனாவால் பெறமுடியாமல் போனது ஏன் என்கிற கேள்வி எழுகிறது.

இங்குதான் சீனாவுடனான அமெரிக்க பனிப்போரின் பரிமாணங்களைப் பார்க்கலாம்.
2002இலிருந்து இதுவரை ஒரு பில்லியன் டொலர்களை, அபிவிருத்தித் திட்டங்களுக்கும் உட்கட்டு நிர்மாண வேலைகளுக்கும் இந்தியா வழங்கி வந்தது.
ஆகவே 2014இல் அமெரிக்கப்படைகள் ஆப்கானிலிருந்து முற்றாக வெளியேறு முன்பாக, சீனா, பாகிஸ்தானிற்கு எதிரான சக்திகளின் முதலீடுகளை அங்கு குவித்துவிட  வேண்டுமென்கிற தந்திரோபாயத் திட்டத்தோடு அமெரிக்கா செயற்படுவது போலுள்ளது.

அதேவேளை, சீனாவுடன் நீண்ட எல்லைக்கோட்டினைக் கொண்டிருக்கும் மியன்மாருடனான (பர்மா) அமெரிக்க, இந்திய உறவுகள் குறித்தும் நோக்க வேண்டும். 
ஒக்டோபர் 12 முதல் 15 வரை இந்தியாவிற்கான பயணமொன்றினை மேற்கொண்டார் மியன்மாரின் அதிபரும் முன்னாள் இராணுவ ஜெனரலுமான தெயின் செயின். விடுபட்டுப்போன உறவினை மீளவும் புதுப்பித்துக் கொள்வதற்கான தருணமாக தெயின் செயினின் விஜயத்தை இந்திய சாதகமாகப் பார்த்தது.
 ஏற்கெனவே அரகன் (ARAKAN) மாநிலத்திலுள்ள சிவே எரிவாயு வயல்களிலிருந்து, வாயுவைக் கொண்டு செல்லும் நீண்ட பாரிய குழாய்களை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவிற்கு கிடைக்கவில்லை என்பது பெரும் பின்னடைவாகவே முன்பு நோக்கப்பட்டது.  2009 இல் இவ்வொப்பந்தத்தை பெற்றோசைனா நிறுவனம் கைச்சாத்திட்டது குறிப்பிடத்தக்கது.
 இருப்பினும் ஒக்டோபர் விஜயத்தின் போது இருதரப்பு உறவுகளும் சீராகக்கூடிய  வகையில் பல உடன்பாடுகள் எட்டப்பட்டதை கவனிக்கலாம்.
 
மியன்மாரின் ரயில் பாதை, வீதி மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பிற்கென கடந்த வருடம் இந்தியா வழங்கிய 300 மில்லியன் டொலர் கடனிற்கு மேலதிகமாக, 500 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் முன்வந்ததை குறிப்பிட்டுச் சொல்லலாம். 
 
 2010-2011 ஆண்டிற்கான இருதரப்பு வர்த்தகம் 1.077 பில்லியன் டொலர்களை எட்டினாலும், இந்தியாவிற்கான மியன்மாரின் ஏற்றுமதி 876.91 மில்லியனாகவும், இந்தியாவிலிருந்து மியன்மாரின் இறக்குமதி வர்த்தகம் 194.92 மில்லியன் டொலர்களாக வும் இருப்பது, வர்த்தகப் பற்றாக்குறை இந்தியா பக்கம் இருப்பதை சுட்டிக் காட்டுகிறது. 
மியன்மாரிலிருந்து எரிவாயுவை இறக்குமதி செய்தல் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை இன்னமும் அதிகரிக்கும் என்பது உண்மை.  ஆனால் சீனாவின் பொருண்மிய ஆதிக்கத்தை எப்பாடுபட்டாவது குறைக்க வேண்டுமென்ற கோணத்தில் அணுகும் போது, வர்த்தக பற்றாக்குறையை வேறொரு வகையில் சமப்படுத்தி விட இந்தியா முயலும். 

அதே வேளை, எரிவாயு மற்றும் எண்ணெய் அகழ்விற்கான நீண்ட கால ஒப்பந்தமொன்றினை சீனாவுடன் மியன்மார் செய்து கொண்டதை இங்கு நினைவுப்படுத்த வேண்டும். இவற்றினைக் கொண்டு செல்வதற்கான கியாக்குறுமி (kyaukryu) துறைமுகத்திலிருந்து சீனாவின்  யுனான்  வரை 1100 கி.மீற்றர் நீளமான குழாய்களை தரைக்கு மேல் அமைக்கும் பணியினை சீன நிறுவனம் ஆரம்பித்தது. 
இந்தக் குழாய் நிர்மாணிப்பானது, மலாக்கா நீரிணையூடான செல்லும் தூரத்தை விட 1200 கி.மீற்றர் குறைவானதோடு அப்பிராந்தியத்தின் தேவையை நிராகரிக்கும் என்று சீனா கணிப்பிட்டது. 

தென்சீனக்கடலில் அமெரிக்கக் கடற்படையின் நட மாட்டம் அதிகரிப்பதால், பங்காளதேஷின் சிட்ட கோங் மற்றும் மியன்மாரின் சிட்வே போன்ற துறைமுகங்களிலிருந்து தரைவழிப் பாதையை அமைப்பதிலும், எண்ணெய்யை காவிச் செல்ல பாரிய குழாய்களை நிர்மாணிப்பதிலும் ஏன் அதிக முதலீடுகளை சீனா செய்கின்றது என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். 

அத்தோடு உட்கட்டுமான நிர்மாணிப்பு மற்றும் கனிமவளத் தேவைக்கான முதலீடுகளில் ஈடுபடும் சீனா, ஆயுத வர்த்தகத்திலும் அதிகளவில் இறங்கியுள்ளது. வட கொரியாவிலிருந்து ஆட்டிலெறிகளை வாங்கி அதற்கு பண்ட மாற்றாக அரிசியை அனுப்பலாமென்ற அறிவுரையையும் சீனா கூறியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
அதேவேளை, பாகிஸ்தான் மற்றும் சீனாவின் உதவியுடன், வட கொரியாவிலிருந்து அணு ஆயுதங்களை அல்லது அதற்கான தொழில்நுட்பங்களையும் பெற, மியன்மார்  ஆசைப்படுவதாகவும் ஒரு செய்தி உண்டு. 
 இவை தவிர மியன்மாரின் மேற்குக் கரையில் சீனா நிறுவியுள்ள ராடர்கள், இந்தியாவின் ஏவுகணைப் பரிசோதனைகளைக் கண்காணிக்கிறது என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது. 

ஆகவே, எவ்விதத்திலாவது மியன்மாரைத் தம் வசப்படுத்தும் நகர்வினை விடுத்து, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு, பொருளாதாரத் தடை என்கிற நெருக்குவாரங்களைப் பிரயோகித்தால் ஆசியாவில் இன்னொரு வட கொரியா உருவாகி விடுமென்று அமெரிக்க-இந்தியத் தரப்பினர் கவலையடைந்து தமது நிலைப்பாட்டினை மாற்றிக் கொள்வதில் அர்த்தமுண்டு.
 செப்டம்பர் 30 ஆம் திகதியன்று மியன்மார் அதிபர் தெயின் செயின் அவர்கள் விடுத்த செய்தியொன்று அமெரிக்கத் தரப்பினருக்கு ஒரு முக்கிய செய்தியைச் சொன்னது. 
அதாவது சீனாவின் அனுசரணையோடு முன்னெடுக்கப்பட்ட மையிஸ் ரோன் (MYITSTONE) அணைக்கட்டு நிர்மாணத்தை நிறுத்துகிறோம் என அதிபர் செயின் பிரகடனம் செய்தார்.
 இறாவடி (IRRAWADDY) ஆற்றினைக் குறுக்கறுத்து உருவாக்கப்படவிருந்த இந்த அணை மூலம், நீர் மின் உற்பத்தியை பெறலாமென்பதே அத் திட்டம். இதனை ஒரு சாதகமான சமிக்ஞையாகப் பார்த்த ஒபாமா, ஆங்சாங் சூகியின் விடுதலையையும் அதனோடு இணைத்து, ஜனநாயக வழிக்கு மியன்மார் திரும்புகிறது என்கிற முழக்கத்தோடு, நவம்பர் 30 ஆம் திகதியன்று இராஜாங்க செயலர் கிளாரி கிளின்டன் அம்மையாரை சமாதானப்புறாவாக அங்கு அனுப்பி வைத்தார். 

அத்தோடு அமெரிக்க ஆதரவு நாடுகளை உள்ளடக்கிய ஆசியான் (ASEAN) மாநாட்டிற்கு, 2014 இல் தலைமை வகிப்பதற்கு பாலியில் நடைபெற்ற மாநாட்டில், மியன்மார் தெரிவாகிய விடயத்தையும் கவனிக்க வேண்டும்.
 அணைக்கட்டு விவகாரத்தில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்ததால், சீனா சினமடைந்திருக்கும் என்பதனை விளக்கத் தேவையில்லை.  இந்த அணைக்கட்டு திட்டத்தினூடாக பெறப்படும் 90 வீதமான மின்சாரம், தென் சீனாவிற்கு கடத்தப்படுமென்பதே இம் முதலீட்டுக்கான முக்கிய காரணி. 

இது போன்ற மாற்றங்கள் வட கொரியா, திபேத் மற்றும் உய்குர் போன்ற இடங்களில் சங்கிலித் தொடராக நடைபெறலாமென சீனா அஞ்சுகிறது.
 
ஆகவே, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவுடன் நெருக்கமான உறவு கொள்ளும் நாடுகளிடையே பெரும் மாறுதல்கள் நிகழ்த்தப்படுவதைக் காணக்கூடியதாகவிருக்கின்றது.
இயற்கை அழிவுகளை தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் பாகிஸ்தானும் மேற்குலம் மீதான தனது இறுக்கமான நிலைப்பாட்டினை எத்தனை காலத்திற்கு தொடருமென எதிர்வு கூற முடியாது. 
ஆதலால் அமெரிக்கா- இந்தியா- பாகிஸ்தான் என்கிற இணக்கப்பாட்டு அச்சில், பாகிஸ்தான் இணையும் வரை மேற்குலகின் பொருளாதார அழுத்தங்கள் அதன் மீது தொடர்ச்சியாக இருக்கும். 

அதேவேளை, யூரோ வலய நாடுகளில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடிகளால், சீனாவின் ஏற்றுமதி வர்த்தகம் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. யூரோ நாணயம் தக்க வைக்கப்பட வேண்டுமென ஆறுதல் கூறும் சீனா, அந் நாடுகளின் அரச முறிகளை வாங்குவதற்குத் தயங்குகிறது.
 பொருண்மிய வளர்ச்சி மந்தமடைவதால் நகர்ப்புறங்களுக்கு  இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான,மக்களுக்கு, எவ்வாறு தொழில் வாய்ப்பினை வழங்குவதென சீனா திண்டாடுகிறது. 

ஸ்டான்டாட் அன்ட் புவர் (Standard & Poor] என்கிற அமெரிக்க கடன் மதிப்பீட்டு முகவரமைப்பு, யூரோ வலய நாடுகளின் கடன் பெறும் தகைமையைக் குறைக்கப் போவதாக அச்சுறுத்துகிறது. போதாக்குறைக்கு சீனாவில் மிகப்பெரிய கடன் மதிப்பீட்டு முகவரமைப்பான டாகொங் குளோபல் ரேட்டிங் கம்பனியானது,  பிரான்ஸின் கடன் பெறும் தகைமை குறையுமென்று சில புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது. 

அதாவது 2011 இல் 1.7% மாக இருந்த பிரான்ஸின் பொருளாதார வளர்ச்சி 2012 இல் 0.3% மாக குறைவடையுமென டாகொங் கணிப்பிடுகிறது. வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை நிமிர்த்தி விடுவோமென ஜேர்மனிய அஞ்செலா மேர்க்கல் அம்மையாரும், பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சார்க்கோசியும் சவால் விட்டவாறு, யூரோ வலய நாடுகளுக்கிடையே நடைபெறும் நிதிப் பரிவத்தனைக்கு வரி விதிக்கும் (Tax on Financial Transaction)  திட்டமொன்றினை முன் வைக்கிறார்கள். 
இதனை மிகக் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்துள்ளது பிரித்தானியா.
 இந் நிலையில் ஆசியாவின் பாரிய பொருளாதாரம் யூரோ சிக்கலால் பாதிப்படையும் என்பதை சீனாவாலும் நிராகரிக்க முடியாது.
 ஆகவே, ஏற்றுமதி வர்த்தகத்தில் பெரிதும் தங்கியுள்ள சீனா போன்ற நாடுகள் உள்நாட்டிலும் எல்லையோர நாடுகளிலும்     பெரும் சவால்களை எதிர்க்கொள்ளப்போகிறது 
.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அதற்கான எதிர்வினைகள் நிகழ ஆரம்பித்து விட்டன.  ஆகவே சீனா சார்பாக தமது வெளியுறவுக் கொள்கையை திடமாக வகுத்திருக்கும் இலங்கை அரசானது, இப் பிராந்தியத்தில் ஒரு சிறு புள்ளியாக மாறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment