Translate

Sunday, 4 December 2011

மேற்குலகத்திற்கு தமிழ் மக்கள் தேவையா?

மறுபக்கத்தில் தமிழ் மக்கள் தமது இருப்பைப் பாதுகாப்பதற்கான விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்தனர். அது சமத்துவக் கோரிக்ககை, சமஸ்டிக் கோரிக்கை என வளர்ந்தது. இறுதியில் தனிநாட்டுக் கோரிக்கை என்ற நிலைக்குச் சென்றது. அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டம் என்ற வகையில் ஆயுதப் போராட்டமாக வளர்ந்தமையினால் சிங்கள தேசத்தின் அதிகாரக் கட்டமைப்பு பெரும் நெருக்கடிக்குள்ளானது. இன்னோர் பக்கத்தில் அது பிராந்திய மட்டத்திற்கும், சர்வதேச மட்டத்திற்கும் வளர்ந்து சென்றது. இதனால் இன விவகாரம் பிராந்திய நலன்கள், சர்வதேச நலன்களுடனும் இணைய வேண்டியதாயிற்று.


இந்த வரலாற்றுப் பின்புலத்தினை மேற்குலக நாடுகள் ஒழுங்காக உள்வாங்கவில்லை. அதற்குள்ளேயுள்ள சிக்கல்பாடுகளையும் புரிந்து கொள்ளவில்லை. எல்லாவற்றிற்கும் புலிகளே காரணம் என்ற ஒற்றைப் பார்வையின் அடிப்படையில் புலிகளை ஓரங்கட்டத் தொடங்கின. இறுகிப்போன சிங்கள அதிகாரக் கட்டமைபிடமிருந்து அதிகாரப் பகிர்வை பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை அவற்றிற்கு இருந்தது. இதற்கு புலிகளின் சுயாதீனத்தன்மையும் சுயநிர்ணய உரிமைப் பாதையும் இடைஞ்சல் என அவை கருதின.

புலிகள் பற்றிய தவறான பிம்பங்களை இலங்கை அரசு மட்டுமல்ல இந்திய அரசு, அரச சார்பற்ற நிறுவனங்கள், தமிழ் புத்திஜீவிகள் கூட்டம் என்பவையும் வழங்கியிருந்தன. இவையெல்லாம சேர்த்து புலிகளை அழிப்பதற்கான ஊக்கத்தினை மேற்குலகத்திற்கு கொடுத்தன. 

இன்னோர் பக்கத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினை இலகுவாக அதிகாரப் பகிர்வுப் பாதைக்குள் வைத்திருக்கலாம் என்பதற்காகவும் அதனிடம் உறுதியான கொள்கைத் திட்டம், உறுதியான வேலைத்திட்டம், உறுதியான கட்டமைப்பு, மக்கள் பங்கேற்பு என்பன இல்லாததினால் இலகுவாகக் கையாளலாம் என்பதற்காகவும், புலிகள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வினை விட குறைந்த தீர்வினை ஏற்பார்கள் என்பதற்காகவும் புலிகளின் இடத்திற்கு கூட்டமைப்பினர் வருவதை விரும்பிருந்தன. புலிகள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வினையே, கூட்டமைப்பினர் முன்வைப்பர் என அறிந்திருந்தால் புலிகளை வைத்துக்கொண்டே பிரச்சினையை தீர்க்க அவை முயற்சித்திருக்கும். 

தற்போது அதிகாரச் சமநிலை குழம்பியுள்ளதால் தமிழ் அரசியலுக்கு சர்வதேச சக்தியை அளித்து வலுவூட்டுவதைத்தவிர மேற்குலகத்திற்கு வேறு தெரிவு இல்லை. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை செயற்பட விடுவதற்கும் கூட்டமைப்பினரை மேற்குலக நாடுகளுக்கு கூட்டிச் செல்வதற்கும் இதுவே காரணம்.

எனினும் தமக்கு நெருக்கடிகள் அதிகம் வரக்கூடாது என்பதற்காகவும் அதிகாரப் பகிர்வுப் பாதையினையே அவை தேர்ந்தெடுத்துள்ளன. இதற்கேற்ற வகையில் கூட்டமைப்பு உள்ளதனால் அதனையே ஊட்டி வளர்க்க விரும்புகின்றன. நோர்வே சமாதானத் தூதுவர் சொல்கெய்மின் உரை அதனையே வெளிக்காட்டியிருந்தது.

அதிகாரப் பகிர்வுப் பாதை ஒரு போதும் சாத்தியமாகப் போவதில்லை. சிங்கள அதிகாரக் கட்டமைப்பு அதற்கு ஒரு போதும் இடம்கொடுக்கப் போவதில்லை என்பதே யதார்த்தம். 

சுயாதீனமுள்ள தமிழர் அரசியல் இயக்கம் தனி நாடல்லாத சுயநிர்ணய உரிமைப் பாதையை முன்வைக்கும்போது அதனை மேற்குலகத்தினால் ஒருபோதும் நிராகரிக்க முடியாது.

இன்று தமிழ் மக்களுக்கு மேற்குலகம் தேவை என்பதை விட மேற்குலகத்திற்குத்தான் தமிழ் மக்கள் தேவை.

http://www.pongutham...c1-415a7de8de1d 

No comments:

Post a Comment