Translate

Sunday, 4 December 2011

ஓட்டம் பிடித்தார், ம.பொ.சி.! மலையாளிகளை துணிவுடன் எச்சரித்தவர் பெரியார்!!

குமரி மாவட்ட மீட்புப் போராட்டத்தில் பெரியாரின் பங்கு
கன்னியாகுமரி தமிழகத்தோடுதான் இணைக்கப் பட வேண்டும் என்று தளபதி நேசமணி தலைமையில் நடந்த போராட்டத்தில் பெரியாரின் பங்கு இருட்டடிக்கப்படுகிறது. பெரியார் மீது அவதூறுகளை வீசவும் ஒரு கூட்டம் காத்திருக்கிறது.

குமரி மாவட்ட மீட்புப் போராட்டத் தளபதி நேசமணி பற்றி - ‘நேசமணி ஒரு சரித்திரத் திருப்பம்’ என்ற நூலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரசாக் எழுதியுள்ளார். அந்நூலுக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.சுவாமிதாஸ் எழுதிய அணிந்துரையை இங்கு வெளியிடுகிறோம். அடக்கு முறைகளைக் கண்டு அஞ்சி, ம.பொ.சி., அரசுக்கு பயந்து சொற்பொழிவு ஆற்றாமலே ஓட்டம் பிடித்தார் என்ற உண்மையையும், பெரியார் மலையாளிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துப் பேசியதையும் இந்த அணிந்துரையில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.சாமிதாஸ் பதிவு செய்துள்ளார். அவர் எழுதிய அணிந்துரை:
“‘பெரியவர்’ என்றும், ‘வக்கீல்’ என்றும், ‘மார்ஷல்’ என்றும் ‘குமரித் தந்தை’ என்றும் அழைக்கப் பெறும் சிறப்புக்கு உரியவர் திரு.ஏ. நேசமணி. அவர் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை உருவாக்கிப் போராடும்போது நான் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தேன். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசில் செயற்குழு உறுப்பினராகவும் பிரச்சாரக் குழு உறுப்பினராகவும் இருந்தேன்.
கண்ணில் கண்டவர்களை, ‘கண்டால் அறியாம் பள்ளி’ என்று கூறிக் கைது செய்தனர். நான் போலீசுக்குப் பிடி கொடுக்காமல் வாழ்ந்தேன். திருவிதாங்கூரில் நடந்த தமிழகப் போராட்டத்தில் போலீஸ் அத்துமீறிச் செயல்பட்டது. பலரைத் துப்பாக்கிக்கு இரையாக்கியும் பலரைச் சித்திரவதை செய்தும் பலரைத் துன்புறுத்தியும் கைது செய்தனர். தமிழ்க் கூட்டங்களில் சொற்பொழிவு ஆற்ற வந்த ம.பொ.சி. சொற்பொழிவு ஆற்றாமலேயே அரசுக்குப் பயந்து திரும்பிச் சென்றார்.
ஆனால், பெரியார் ஈ.வெ.ரா. மட்டும் திருவிதாங்கூர் தமிழ் மக்கள் நிலைமையை மார்ஷல் நேசமணியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். இதன் பின்னணியாகச் சென்னை மெரினா கடற்கரையில் ஒரு கூட்டத்தைப் போட்டு, “திருவிதாங்கூரில் போலீஸ் அடக்கு முறையை உடனடியாக நிறுத்தா விட்டால், தமிழகத்தில் வாழும் மலையாளிகளை நாங்கள் இங்கிருந்து அடித்துத் துரத்துவோம்” என்று பொதுக் கூட்டத்தில் அறிக்கை விட்டார். மலையாள அரசு தமிழனைத் துன்புறுத்தியதை நிறுத்தியது.
மார்ஷல் நேசமணி தன் கையால் மாலை அணி வித்த ஒரே தலைவர் பெரியார் தான். பெரியாரும் மார்ஷல் நேசமணி மீது மிக்க மதிப்பு வைத்திருந்தார். திருவிதாங்கூர் தமிழர் போராட்டத்தில் மார்ஷல் நேசமணிக்குப் பொருளுதவி செய்தவர் பயோனியர் குமாரசுவாமி. டாக்டர் மத்தியாஸ், கட்டுக்கடை தேவசகாயம் ஆசான் ஆகியோர் மருத்துவ உதவி செய்தனர்.
திரு. கோலப்பா பிள்ளை நாஞ்சில் நாடு வங்கி நிறுவனர். இவருடைய நெருங்கிய நண்பர். குமரித் தந்தை வழி நாம் போராடி தமிழ் நாட்டுடன் இணைந்தோம். அந்தப் போராட்டத்தைப் பற்றி அவருடன் இணைந்து போராடிய ஜனாப் அப்துல் ரசாக் முன்னாள் எம்.பி. எழுதிய ‘நேசமணி ஒரு சரித்திரத் திருப்பம்’ என்ற நூல் வெளி வருவதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். அதனைப் பல்வகை சிரமத்தின் மத்தியில் பதிப்பித்து வெளியிடும் பேராசிரியர் டாக்டர் மு. ஆல்பென்ஸ் நதானியேல் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன். இந்நூல் நறுமணம் மிக்கதாக அமைய எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக.
- ஏ. சுவாமிதாஸ், பி.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., நுள்ளிவிளை, 15.08.1998.
1998 நவம்பர் மாதம் நாகர்கோயில் பயோனியர் குமாரசாமிக் கல்லூரி பேராசிரியர் முனைவர் மு.ஆல்பென்ஸ் நதானியேல், தமது ‘தமிழ்க்குடில்’ பதிப்பகத்தின் சார்பில் இந்த நூலை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment