Translate

Monday, 5 December 2011

தமிழீழ மக்களாகிய நாங்கள் யாரும் யாருக்கும் எதிரிகள் அல்ல!


ஒரு வகையாக பாரிய அசம்பாவிதங்கள் எவையும் இல்லாமல், இந்த வருட மாவீரர் தினமும் வெகு சிப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. சில நாடுகளில் ஏட்டிக்குப் போட்டியான மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெற்றாலும், தமிழ் மக்கள் தமது தேசத்தின் புனிதர்களுக்குத் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
புலம்பெயர் தமிழர்களைப் பிளவு படுத்தும் நோக்கிலான சிலரது நகர்வுகளைத் தமிழ் மக்கள் நிராகரித்திருப்பது மனதுக்குப் பெரும் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்குள் ஏற்பட்ட அதிகாரம் போட்டிக்கு மாவீரர் தினம் பலியாகிவிடக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருப்பது இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும். இரு தரப்பாகப் பிரிந்து நின்று மோதல் போக்கைத் தொடர்வதற்குத் தாம் ஆதரவு வழங்கப் போவதில்லை என்றே பெரும்பாலான தமிழர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளார்கள்.

போட்டி மாவீரர் தினத்தை நடாத்தியவர்கள். அதனைத் தமக்குக் கிடைத்த தோல்வியாக எண்ணி மோதல் போக்கைத் தொடராமல், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும், ஜனநாயக முடிவுகளுக்கும் கட்டுப்பட்டுத் தமிழீழ விடுதலை நோக்கிய பாதையில் தம்மையும் இணைத்துக் கொள்ள வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இயங்கு சக்தியாக இருக்கும் புலம்பெயர் தமிழ்த் தேசிய கட்டமைப்புக்களைச் சிதைக்கும் சிங்களச் சதிக்குள் வீழ்ந்துவிடாமல், அதனூடாக இணைந்து செயற்படுவதே காலத்தின் கட்டாயம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
போட்டி மாவீரர் தினத்தைக் கைவிடும்படி விடுத்து அத்தனை கோரிக்கைகளையும் நிராகரித்து, அதை நடாத்தியதன் மூலம் தலைமைச் செயலகமும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தங்களைத் தாழ்த்திக்கொண்டுள்ளன. அனைத்துலகச் செயலகமும், தலைமைச் செயலகமும் இணைந்து செயற்படுவதன் அவசியம் இரு தரப்பிற்கும் உணர்த்தப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்களது உச்ச அரசியல் பீடமாக இருக்கவேண்டிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு குழுவுக்கான சிறு அமைப்பாகத் தன்னைச் சுருக்கிக் கொண்டுள்ளது. போட்டி மாவீரர் தினத்துக்கான அழைப்பை விடுத்த இரு அணியினரையும் தமிழ் மக்கள் புறக்கணித்திருப்பதனை ஒரு படிப்பினையாகக் கொண்டு, இந்த இரு அமைப்புக்களும் தம்மை சுய மதிப்பீடு செய்வதும், பாதைகளைச் செப்பனிடுவதும் அவசியமானதாக உள்ளதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
புலம்பெயர் நாடுகளில் தளப் பரிமாணம் அற்ற தலைமைச் செயலகமும், தளத்தைக் குறுக்கிக் கொண்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தமக்கான கடமைகளை வேகமாகச் செய்வதன் மூலமாகவே தம்மைப் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் நிலை நிறுத்திக்கொள்ள முடியும். அதற்கான கால அவகாசம் இன்னமும் இருப்பதாகவே நம்புகின்றோம். மக்கள் சந்தேகப்படும்படியான கருத்துக்களை விதைப்பதை இந்த இரு அணிகளும் கைவிட்டு, தேசியத் தலைவர் அவர்களது சொல்லுக்கு முந்திய செயலில் கவனம் செலுத்த வேண்டும். இந்த இரு அணிகளுக்கும் கொம்பு சீவிவிடுவதற்கு சிங்களப் புலனாய்வாளர்களால் பலர் களத்தில் இறக்கப்பட்டுள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழீழ மக்களாகிய நாங்கள் யாரும் யாருக்கும் எதிரிகள் அல்ல. எங்களுக்குள் உள்ள முரண்பாடுகள் பேசித் தீர்க்கக்கூடியவை. ஒன்றாக இணைந்து பணியாற்றும்போது காணாமல் போகக் கூடியவை. 2009 மே 18 வரை தமிழீழ விடுதலைப் போரை முன் நகர்த்தி மாவீரரான எங்களது தேசியப் புதல்வர்களது கனவைச் சிதைக்காமல் பயணிப்பதே நம் முன்னுள்ள ஒரே தெரிவு. அதற்காக மட்டுமே அர்ப்பணிப்புடன் செயற்படுவது மட்டுமே எமக்கான கடமையாக அமைந்தவிட்டால், எமக்குள் முரண்பாடுகள் உருவாகக் காரணமே இல்லை.
- ஈழநாடு
URL simplifié: http://www.eelanadu.info/?p=1456

No comments:

Post a Comment