Translate

Tuesday, 6 December 2011

நம்பிக்கை இன்னும் சாகவில்லை...!!!!


MAAVEERAR-FAMILY-5.jpg

வழமைக்கு மாறாக அன்று வானம் கறுத்துக்கிடந்தது.தூரத்தில் கார்முகில்கள் திரண்டு மழைக்குணமாய் இருந்தது.

கார்த்திகை 27.இது கல்லறைகள் பூப்பூக்கும் மாதம்.அதனால்த்தான் என்னவோ வானம் இப்பிடி கிடக்குது.

சந்திரன் போன கிழமைதான் தடுப்பில இருந்து வெளியில வந்திருந்தான்.கிட்டத்தட்ட இரண்டு வருசம் இருண்ட உலகத்தில் அவனது வாழ்க்கை கரைந்துபோனது.சந்திரன் கடைசி நிமிசம் வரை வெளியில வருவன் எண்டு நம்ப இல்லை.எல்லாம் கெட்ட கனவு போல நடந்து முடிந்து விட்டது.


"என்னப்பா யோசிச்சு கொண்டு இருக்கிறியள்?அதுதான் எல்லாம் முடிஞ்சு போச்சுதே.. இனிமெல் எண்டாலும் உங்கட எதிர்காலத்தை நினைச்சு நடவுங்கோ.."சந்திரனின் மனைவி இதை சொல்லும் போது அவளது கண்களில் ஏதோ வெறுமை தெரிந்தது.

"இல்லடி இண்டைக்கு ஏதோ மனம் ஒருமாதிரி இருக்கு.மனசு வலிக்குது.நான் ஒருக்கா கடற்கரைப்பக்கம் போட்டு வாறன்."என்று சொன்ன சந்திரன் மனிசியின் பதிலுக்கு காத்திராமல் ...
"டேய் சிலம்பரசன் அப்பான்ர சேட்டை ஒருக்கா எடுத்து வா" என்றான்.

சிலம்பரசன்... அவன் சந்திரனின் ஒரே மகன்.ஆனையிறவு சண்டை நடக்கும்  போது பிறந்தவன்.அவன் பிறந்து ஒரு மாதத்துக்கு பிறகுதான் சந்திரன் விடுமுறையில வந்து பார்த்தான்.சந்திரன் தான் அவனுக்கு சிலம்பரசன் எண்டு பெயர் வைத்தான்.

 சிலம்பரசனும் சந்திரனும் ஒண்டா படிச்சு பிறகு ஒண்டா இயக்கத்தில சேர்ந்தவங்கள்.சிலம்பரசன் வீரச்சாவு அடைஞ்ச போது மட்டும் தான் சந்திரன் கண் கலங்கி அழுதிருக்கிறான்.

கிட்டத்தட்ட 15 வருசம் சந்திரனின் வாழ்க்கை போராட்டத்தோடு மட்டுமே கரைந்துபோனது.அவனின் உடம்பில் காயம் இல்லாத இடமே இல்லை.முல்லைத்தீவு சண்டையில கடும் காயம் அடைந்து சந்திரன் செத்துப்பிழைத்திருந்தான்.இப்பவும் அவன்ர இடது காலில செல் துண்டு கிடக்குது.

 வெளியில போக வெளிக்கிட்ட சந்திரன் படலை திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான்.மாஸ்ரர் படலை திறந்து உள்ளே வந்தார்.

சிவா மாஸ்ரரும் சந்திரனைப்போலத்தான் ஆனால் அவர் தடுப்பில இருக்க இல்லை.
ஊடகப்பிரிவில இருந்த படியால் அவரை தனியா கொண்டு போட்டாங்கள்.பிறகு அவர் இப்ப அவங்கட கட்டுப்பாட்டில தான் ஏதோ வேலை செய்யுறார் எண்டு கேள்வி.

"வாங்கோ மாஸ்ரர் உங்களை வந்து பாக்க வேணும் எண்டு நினைச்சன். நீங்களே வந்திட்டியள்" என்றான் சந்திரன்.
"இல்லடா தம்பி நீ வெளியில வந்திட்டாய் எண்டு கேள்விப்பட்டன்.சந்தோசம்டா.எப்பிடி இருக்கிறாய்" மாஸ்ரர் கேட்டபடியே முற்றத்து மண்ணில் சப்பாணி கட்டி இருந்தார்.சந்திரனும் அவரின் பக்கத்தில் இருந்தான்.

"பிள்ளை தேத்தண்ணி ஒண்டும் போடாதா.நான் இண்டைக்கு ஒண்டும் சாப்பிட மாட்டன்."என்றார் மாஸ்ரர்.

மாஸ்ரருக்கு மூண்டு ஆம்பிளைப்பிள்ளைகள்.அதில மூத்தவன் ஆனையிறவு சண்டையில வீரச்சாவு.இரண்டாவது மகன் முள்ளிவாய்க்கால் வரை உயிரோடதான் இருந்தவன்.அதுக்கு பிறகு எந்த தொடர்பும் இல்லை.கடைசி மகனுக்கு ஒரு கால் இல்லை.முப்பது வருசமா போராட்டத்தோடுதான் இவரின் வாழ்க்கையும் ஒயாமல் உருண்டோடியது.

"என்ன மாஸ்ரர் இப்ப எப்பிடி போகுது?உவங்களோட வேலை செய்யுறதிலும் பாக்க பேசாமல் வெளிநாடு எங்கேயும் போக வேண்டியது தானே" என்றான் சந்திரன்.

"தம்பி நான் குப்பி கடிச்சிருப்பன்.என்ர கடைசி மகனுக்காகவும் மனிசிக்காகவும் தான்ர இப்பவும் இயிரோட இருக்கிறன்.செத்தாலும் வாழ்ந்தாலும் இந்த மன்ணில தாண்டா."மாஸ்ரரின் குரலில் தெளிவும் உறுதியும் தெரிந்தது.

"எத்தின பேரை இந்த கையால விதைச்சிருப்பன்.துண்டுதுண்டாய் இரத்ததில மிதந்து வந்த எங்கட சனத்தை கூட்டி அள்ளி தாட்டிருப்பன்.அப்ப எல்லாம் மனசு வலிக்க இல்லையடா தம்பி ....ஆனால் எங்கட ஆக்களிண்ட பேச்சை கேக்கும் பொது தாண்டா செத்துப்போகலாம் எண்டு இருக்கு." மாஸ்ரர் கண் கலங்கி சொன்னார்.

 "ஏன் மாஸ்ரர் என்ன பிரச்சினை?"

" ஒவ்வொரு நிமிசமும் எங்கட நினைப்பும் செயலும் இந்த போராட்டதோடு தான்ரா போனது.எங்களுக்கு எங்கட குடும்பத்துக்கு எண்டு எதுவுமே சேர்த்து வைக்கவும் இல்லை.அப்பிடி உயிரையே குடுத்து இந்த மண்ணில கடைசி வரையும் நிண்டம்.அது பிழையோடா தம்பி.எங்களையெல்லாம் துரோகிகள் எண்டு பேசுறாங்கள் .எழுதுறாங்கள்.இதை இந்த மண்ணில கடைசிவரையும் நிண்டவன் சொல்லட்டும்.போனவன் வந்தவன் எல்லாம் கண்டபடி பேசுறாங்கள் ..அதுதாண்டா கவலையா இருக்கு."

மாஸ்ரர் இதை சொல்லும் போது அவரது குரலில் வெறுப்பும் கோபமும் தெரிந்தது.

"விடுங்கோ மாஸ்ரர்.. இத்தனை விலை குடுத்தும் இவ்வளவு தியாகம் செய்தும் இன்னும் எங்கட ஆக்கள் திருந்த இல்லையெண்டா இனி திருந்தவே மாட்டாங்கள்"
என்றான் சந்திரன்.

"நாப்பது ஆயிரம் எங்கட பிள்ளைகளிண்ட ஆன்மாக்கள் ஒண்டா நிண்டு கண்கலங்கிற இந்த நாளில அந்த பிள்ளைகளின்ர தியாகங்களையும் இலட்சியங்களையும் இரண்டா மூண்டா கூறு போட்டு பாக்குதுகள் சிலதுகள்.நினைக்கும் போது கோபத்தில நெஞ்சு எரியுதடா தம்பி".மாஸ்ரர் சொல்லுவதிலும் உண்மை இருக்கிறது.

"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....எல்லா நம்பிக்கையும் போட்டுது மாஸ்ரர்" என்றான் சந்திரன்.

"ஆறு மணியாகுது விளக்கு ஏத்துறன்.வீட்டுக்குள்ள வாங்கோ" சந்திரனின் மனைவி இருவரையும் கூப்பிட்டாள்.

சாமித்தட்டில் விளக்கு ஏத்திப்போட்டு கண்ணை மூடி எல்லோரும் இரண்டு நிமிசம் அமைதியாய் இருந்தார்கள்.

கண்ணை திறந்து பார்க்கும் போது சாமித்தட்டில் விளக்குக்கு பக்கத்தில் மெழுகுதிரி ஒன்று எரிந்து கொண்டிருந்தது.அதற்கு அடியில் கார்த்திகை பூ ஒண்டு இருந்தது.

எல்லோரும் ஒன்றும் புரியாமால் முகத்தை முகத்தை பார்த்தார்கள்.
மெழுகுவர்த்தியின் சுடர் காற்றுக்கு அணைவது போல இருந்தது.

சந்திரனின் சின்னப்பொடியன் சிலம்பரசன் ஓடிப்போய் இரண்டு கைகளாலும் அணையவிடாமல் வைத்துக்கொண்டு திரும்பி பார்த்து சிரித்தான்.


"தம்பி என்ர நம்பிக்கை இன்னும் சாக இல்லையடா.."
மாஸ்ரர் சொல்லி முடிக்கும் போது வெளியில் மழை கொட்டத்தொடங்கியது.


குறிப்பு: (கனவுகளில் வாழ்பவர்களுக்கு இது கற்பனை கதை.யதார்த்தங்களை உள்ளார்த்தமாய் உணர்ந்தவர்களுக்கு இது நிஜம்).


தமிழ்ப்பொடியன்
06/12/2011

No comments:

Post a Comment