Translate

Sunday, 11 December 2011

விலகிச் செல்லும் சர்வதேச நேசக்கரம்!


விலகிச் செல்லும் சர்வதேச நேசக்கரம்!
-வி.தேவராஜ்
 
அமெரிக்க உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட 9/11 உலக ஒழுங்கமைப்பில் பெரும் மாறுதல்களை கொண்டு வந்தது. அந்த மாறுதல்களுக்கு இலங்கை வாழ் தமிழர்களும் பலிக்கடா ஆக்கப்பட்டு அநாதைகளாக்கப்பட்டனர்.
இடையில் முள்ளிவாய்க்கால் போருடன் தமிழ் மக்களை நோக்கி சர்வதேசத்தின் கரங்கள் நீண்டன.
சர்வதேசம் நீட்டிய அந்தக் கரங்கள் தமிழ் மக்களை அரவணைக்க போவதாகவே இலங்கை வாழ் தமிழ் மக்களும், புலம்பெயர் தமிழ் மக்களும், மனிதவுரிமை ஆர்வலர்களும் நம்பினர். இந்த நம்பிக்கையிலும் தற்பொழுது மண் விழுந்துள்ளது. 
உலக வர்த்தக மையத் தாக்குதலையடுத்து உலக ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றம் போல் தற்பொழுது அமெரிக்க இந்திய கூட்டுடன் சீனாவுடன் தொடங்கப்பட்டுள்ள பனிப்போருக்குள் தமிழர் விவகாரம், மனிதவுரிமை மீறல் விடயம் பலிக்கடாவாகிப் போய்விடும் போல் தெரிகிறது.
மனிதவுரிமை மீறல் குறித்து அதிகமாக பேசி வந்த அமெரிக்கா தற்பொழுது அந்த விடயத்தை சற்று அடக்கி வாசிக்கத் தொடங்கி விட்டது. இலங்கை அரசாங்கத்துடனான உறவினை வலுப்படுத்தும் வேலைகளை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் முடுக்கி விட்டுள்ளது.
நண்பர் ச. கிருபாகரன் தொலைபேசியில் உரையாடும் பொழுது ஒருகருத்தினை முன்வைத்தார்.
சர்வதேச அரங்கில் மனிதவுரிமை மீறல் குறித்து பேசப்பட்டபோதும் மனிதவுரிமை பற்றி பேசுகின்ற நாடுகளுக்கு எதைச் செய்ய வேண்டும், எந்த வழியில் அதனை வெற்றி கொள்வது என்பது குறித்து இலங்கை அரசாங்கம் சரியான வழியில் கணக்கிட்டுள்ளது. அதனை நோக்கி காய்களையும் நகர்த்தி வருகிறது. இலங்கை அரசாங்கத்தின் இந்த வெற்றிக்குத் துணை போவதாக எம்மவரிடையே காணப்படும் ஒற்றுமையின்மையும் துணைபோகின்றது என்று தெ வித்தார்.
மொத்தத்தில் இலங்கை அரசாங்கம் அமெரிக்க இந்திய கூட்டுடனான சீனாவுக்கு எதிரான பனிப் போரினை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முனைகின்றது.
இதன் பின்னணியிலேயே இன விவகாரத்தையும் தனது நிகழ்ச்சி நிரல்களுக்கேற்ப கையாளத் தொடங்கியுள்ளது.
தொடர்ந்தும் சர்வதேச கள நிலைவரம் இலங்கைக்கு சாதகமாகவே அமைந்து விடுகின்றது அல்லது கள நிலைவரத்தை இலங்கை அரசாங்கம் தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்கின்றது.
தமிழர் தரப்பு தோல்விக்கு மேல் தோல்வியைச் சந்திப்பதற்கு இதுவே காரணமாகவும் அமைந்துள்ளது.
இதனை மேலும் ஊக்குவிப்பதாக தமிழர் தரப்பிடையே காணப்படும் ஒற்றுமையின்மை, காட்டிக் கொடுப்புகள் என்பன இலங்கை அரசாங்கத்தின் கரங்களை பலப்படுத்துவதாக அமைகின்றன.
அண்மையில் இலங்கையில் உள்ள தமிழ் ஊடகங்கள் இன விவகாரம் குறித்து பேசாது அமைதி காக்குமேயாயின் அரசாங்கம் இன விவகாரத்திற்கான தீர்வை விரைவில் கண்டுவிடும் என்று கருத்துகள் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டுள்ளன.
இலங்கையிலுள்ள தமிழ் ஊடகங்கள் இன விவகாரத் தீர்வுக்கு எதிராக செயற்படவில்லை.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷை குறித்துப் பேசுவதோ அல்லது தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்தோ பிரச்சினைகள் குறித்தோ பேசுவதானது இலங்கையின் ஐக்கியத்திற்கு எதிரானதோ அல்லது இலங்கையின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாகவோ அல்லது அரசாங்கத்திற்கு எதிரானதோ அல்லது இனவாதமானதோ அல்ல.
தமிழ் ஊடகங்கள் இவை குறித்து பேசக் கூடாது என்றால் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்போர் யார்? சிங்கள ஊடகங்கள் தமிழர்களுக்கு உரிமை கொடுக்க வேண்டுமென்பதை நியாயப்படுத்தி தீர்வைப் பெற்றுத்தர முன்வருமா? அல்லது அரசாங்கம் முறையான தீர்வுக்கு வழி வகுக்குமா? என்பதே கேள்வியாகும்.
தற்பொழுது கூட்டமைப்புடன் நடத்துகின்ற பேச்சுவார்த்தையே அரசாங்கம் இதய சுத்தியுடன் நடத்துவதாக தெரியவில்லை.
காலத்திற்கு காலம் ஏதோ கூறி பேச்சுவார்த்தையை திசை திருப்பும் கைங்கரியங்களையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேடையில் அரங்கேற்றி வருகின்றது.
இந்த ஒரு நிலையில் தமிழ் ஊடகங்கள் அமைதியாக இருந்தால் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமென கூறுவதில் எவ்வித நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை.
அரசாங்கம் இதயசுத்தியுடன் இன விவகாரத்திற்கான தீர்வைக் காணுமாக இருந்தால் தமிழர்களையோ தமிழ்க்கட்சிகளையோ தமிழ் ஊடகங்களையோ குறை கூறிக் கொண்டிருக்கத் தேவையில்லை.
இறுதியாக நண்பன் இதயச்சந்திரன் அனுப்பி வைத்துள்ள கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஆயுதப்போராட்டத்தை அழித்ததன் ஊடாக, மேற்குலகமும் இந்தியாவும் இலங்கைப் பிரச்சினையை தமது கையில் எடுத்துள்ளன. இலங்கை மீதான புலம்பெயர் அமைப்புக்களின் போர்க்குற்ற அழுத்தங்களை மட்டுமே இவ்வல்லரசுகள் அனுமதிக்கும். அதற்கு அப்பால் தீர்வு மேசையில் இவர்களை உட்கார விடாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மட்டுமே அந்த அரங்கில் இடம் கிடைக்கும். அடுத்ததாக, புவிசார் அரசியலில் இலங்கையின் பங்கு என்ன? அதனை இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் ஏற்படும் மாற்றங்களே தீர்மானிக்குமென நம்புகிறேன்.
இந்தியாவைச் சுற்றி சீனா விரிக்கும், துறைமுக முத்துமாலையை உடைக்கும் நகர்வுகளில், தற்போது இந்தியாவும் அமெரிக்காவும் தீவிரமாக ஈடுபடுகின்றன.
மியன்மாரோடு புதிதாக உறவுகளை மேற்கொள்வதும், பாகிஸ்தானின் மீது அழுத்தங்களைக் கொடுத்து, அதனை இந்திய, அமெரிக்க, பாகிஸ்தான் என்கிற இணைக்கப்பட்டு அச்சுக்குள் கொண்டு வர முயற்சிப்பது இதனை வெளிப்படுத்துகிறது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தைச் சார்ந்த வில்லியம்ஸ் என்பவர் புதுடெல்லி செல்கிறார். சீனாவின் இந்துசமுத்திரம் மீதான ஆளுமையை உடைப்பதற்கு இவர்கள் திட்டங்களை வகுப்பார்கள்.
ஆகவே, அப்பிராந்தியத்தில் உள்ள நாடுகளை சீனாவின் பொருண்மியப் பிடிக்குள் இருந்து விடுவித்தால், இலங்கையின் நிலை என்ன?
மத்திய கிழக்கில் ஈரான் தனிமைப்படுவது போன்று, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையும் தனிமைப்படலாம்.
அமெரிக்க இந்திய நகர்வுகளை நாம் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.
வி.தேவராஜ் 

No comments:

Post a Comment