Translate

Monday, 16 January 2012

வீரத் தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வீரவேங்கைகளின் 19ம் ஆண்டு நினைவேந்தல்.

பன்முகப்பட்ட ஆளுமையின் வடிவம் கேணல் கிட்டு.

வீரத் தளபதி கேணல் கிட்டு உட்பட
பத்து வீரவேங்கைகளின் 19ம் ஆண்டு நினைவேந்தல்.



தளபதி கிட்டு, ஒரு விடுதலைப் போராளிக்குரிய அத்தனை தகுதிநிலைகளையும் தன்னகத்தே உள்ளடக்கிவைத்திருந்த ஒரு ஆளுமை. 
களத்தின் நாயகனாக மட்டுமன்றி காலத்தின் நாயகனாகவும் கேணல் கிட்டு விளங்கினார். பன்முகப்பட்ட ஆளுமையின் வடிவம் அவர். 


களமாடுவதிலும், கட்டளை பிறப்பிப்பதிலும், நிர்வாகச் செயற்திட்டங்களிலும், செயற்பாடுகளிலும், சாதாரண வாழ்வியல் ரசனையிலும், அதனை வெளிபடுத்தும் தன்மையிலும் தனக்கே உரித்தான சிறப்பியல் பண்புகளுடன் அவர் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் வெளிப்பட்டார். 
ரசனை மிக்க ரசிகனாய், ஓவியனாய், எழுத்தின் மீது ஆளுமை செலுத்தும் எழுத்தாளனாய், பேச்சாளனாய், பேச்சுவார்த்தையாளனாய், வீரசாதனை படைத்த பல களங்களின் தளபதியாய், உருக்குறுதி வாய்ந்த போராளியாய், உள்ளம் உருகக்கசியும் அன்புடை மனிதனாய், இப்படிப் பல பண்புகளையும் தகுதிகளையும் கொண்டியங்கியவர் வீரத்தளபதி கேணல் கிட்டு அவர்கள். 

தாயகத்தில், பலப்பல களச்சாதனைகளைப் படைத்த கேணல் கிட்டு, தாயகத்தை விட்டு, புலம்பெயந்த பொழுதும், புலத்தில், வேறொரு தளத்தில், தனது செயற்பாடுகளில் முத்திரை பதித்தவர்.
தனக்கே உரித்தான, சளைக்காத அதிதீவிர ஈடுபாட்டுடன், விடுதலைப் போராட்டக் கட்டமைப்பை ஒழுங்குபடுத்தி, பலப்படுத்தி, போராட்டப்பணிகளை விரிவுபடுத்தினார். புலத்தில், போராட்டப்பணிகள் விரைவுபட்டமைக்கு, கேணல் கிட்டு அவர்களின் ஓயாத உழைப்பு முக்கிய காரணம். 
சற்றேனும் ஓய்வுகொள்ளச் சம்மதிக்காத தீவிர போராளியாய், மக்கள் தொண்டனாய் அவர் மக்கள் மத்தியில் வலம் வந்தார். 
தேசியத் தலைவரைத் தந்தைக்கும் மேலாயும், போராளிகளைத் தன் உடன்பிறப்புக்களாயும், மக்களை தன் குழந்தைகளாயும் உண்மையுடன் நேசித்தார் கேணல் கிட்டு.  

அவர் வாழ்ந்த காலத்திலும், வாழ்ந்த இடத்திலும் தனது காத்திரமான பதிவை, பாதிப்பை எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் பதித்துச் சென்றிருக்கின்றார். 
ஒரு வழிகாட்டியாக எம்மத்தியில் விட்டுச்சென்ற பாதை வழியே, இறைந்த கிடக்கும் விடுதலைக்கான பெரும் பணி சுமத்தலே அர்த்தம் நிறைந்த அவருக்கான நினைவேந்தலாகும்.


தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். 
தமிழர் நடுவம் - பிரான்ஸ்

http://www.youtube.com/watch?v=M5x6mJxHo0g

No comments:

Post a Comment