(1955 டிசம்பர் மாதம் 15-ம் நாள் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் நேசமணி ஆற்றிய உரை)
சென்னை மாநில சட்டமன்ற அவைக் கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது நிதியமைச்சர் திரு. சுப்பிரமணியம் கூறுகையில், திருவிதாங்கூர் - கொச்சி மாநிலத்தில் தமிழர்கள் பெருவாரியாக வாழ்கின்ற தேவிகுளம் - பீர்மேடு பகுதிகளை உள்ளடக்கிய ஒன்பது தாலுகாக்களும் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்று கோரி மாநிலங்கள் புனரமைப்புக் குழுவிடம் தமிழ்நாடு அரசு மனு கொடுத்திருப்பதாகக் கூறியிருக்கிறார். திரு. கொச்சி முன்னாள் முதலமைச்சரான திரு. பட்டம் தாணுபிள்ளை எர்ணாகுளத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் இது குறித்து இவ்வாறு பேசியுள்ளார்.
"இந்தியத் திருநாட்டில் நடுவண் அரசு என்ற ஒரு அமைப்பு இல்லாதிருக்குமேயானால், திரு. காமராஜ் நாடாரும், திரு. சுப்பிரமணியுமாகச் சேர்ந்து திரு.கொச்சி நாட்டின் மீது படையெடுத்திருப்பர்'' என்று குறிப்பிட்டார். திரு.கொச்சியில் தமிழர்கள் பெருவாரியாக வாழ்கின்ற தாலுகாக்கள் அனைத்தையும் தமிழகத்துடன் இணைத்துவிட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டதால் அதன்மீது திரு.கொச்சி அரசின் மனப்போக்கை எடுத்துக்காட்டுவதாக உள்ளது பட்டம் தாணுபிள்ளையின் மேலே எடுத்துரைக்கப்பட்ட பேச்சு.
எங்களது இன்றைய கோரிக்கைதான் என்ன? இக்கோரிக்கையை வரலாறுகளுக்கும், நியதிகளுக்கும் எதிரான ஒரு பூதாகர கோரிக்கையாக விளக்கம் தரப்படுகிறது. இப்பகுதிகள் அனைத்தும் 1889க்கு முன்பு வரையில் திருவிதாங்கூருக்குச் சொந்தமான பகுதிகளாக இருந்ததில்லை. திரு.கொச்சி சட்டமன்றத்தில் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும்போது திரு.நடராஜபிள்ளை அன்று கூறியதற்குத் திரு. எ.எம்.தாமஸ் இவ்வாறு குறிப்பிட்டார். "திருவிதாங்கூர் நாட்டு விவரச்சுவடியை எழுதிய திரு.ற்றி.கே. வேலுப்பிள்ளை, பூஞ்சாற்று அரசர் பாண்டிய மன்னர் பரம்பரையைச் சார்ந்தவர்'' என்று கூறினார்.
பூஞ்சாறு ராஜா திருவிதாங்கூர்காரராவார்.
திரு. நேசமணி :
இக்கூற்று திருவிதாங்கூர் நாட்டு விவரச்சுவடியில் தரப்பட்டுள்ள வரலற்றின் அடிப்படையில் கூறப்பட்டதாகும். ஆனால் திரு.கொச்சியைச் சார்ந்த வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும் பூஞ்சாறு மன்னர் பாண்டிய மரபினர் என்றும், அன்னார் கையொப்பமிடுகின்ற தருணங்களில் "மீனாட்சி சுந்தரம்'' என்றே அவர் ஒப்பமிடுவதாகவும் குறிப்பிடுகின்றனர். மன்னாடியர் என்று அழைக்கப்படுகின்ற நாட்டுப் பிரதானிகளைக் கொண்டு நாட்டில் தீர்வைகள் தண்டினான் என்றும், அத்தகைய தீர்வை வசூலுக்கு அளிக்கப்படுகின்ற பற்றுச்சீட்டில் "மதுரை மீனாட்சி துணை'' என்ற முத்திரை பதிக்கப்பட்டுள்ளதாகக் காணப்படுகிறது. ஆகையால் இந்த தேவிகுளம்-பீருமேடு பகுதிகள் அனைத்தும் பாண்டியர்களின் இறையாண் மைக்கு உட்பட்டு மதுரை நாயக்கர்களின் அதிகார வரம்பிற்குள் 1889 வரையிலும் இருந்துள்ளன. எனவே மேற்படி பகுதிகள் அனைத்தும் 1889-க்கு முந்திய காலம் வரையிலும் திருவிதாங்கூருக்குச் சொந்தமானதாக இருந்ததில்லை என்பதே வரலாறு கள் கூறுகின்ற உண்மை. இன்று, மாடோன் கே.டி.கெச்.பி.தேவன் கம்பெனியாரின் முன்னோடிகள் 1879-ல் பூஞ்சாற்று மன்னருடன் செய்துகொண்ட முதல் உடன்படிக் கையின் அடிப்படையில் இப்பகுதிகள் அவர்களது அனுபவத்திற்கு வந்துள்ளது.
பெரியாறு நீர்த்தேக்கத் திட்டத்திற்காகப் பிரிட்டிஷ் இந்திய நடுவண் அரசின் செயலாளர் திருவிதாங்கூர் மன்னருக்காக நின்று ஆவணத்தில் கையொப்ப மிட்டுள்ளார். 1889இல் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு, குத்தகை உரிமையின் காலக்கெடுவை நீட்டித்த வேளையில், அது திருவிதாங்கூர் மன்னருக்குச் சாசனம் செய்யப்பட்டுள்ளது. எனவே 1879 முதல் 1889 வரையிலான பத்தாண்டு கால இடைவேளையில் மட்டுமே. இப் பரிவர்த்தனங்கள் நடந்திருக்கிறது என்பது தெள்ளத்தெளிவு. தவிரவும், திருவிதாங்கூர் மன்னர் இப்பிரதேசங்களைப் பூஞ்சாறு மன்னரிடமிருந்து நீண்ட காலக் குத்தகையின் அடிப்படையிலேயே பெற்றிருக்கிறார். எது எவ்வாறாயினும், 1935 வரையிலும் திருவிதாங்கூர் பிரதேசங்களிலிருந்து தேவிகுளம்-பீருமேடு பகுதிகளுக்கு வந்து போக எத்தகைய போக்குவரத்து வசதிகளும் இருந்ததில்லை.
இப்பிரதேசங்களுக்கு மதுரை மாவட்டத்திலுள்ள தேவாரம், கூடலூர், போடி நாயக்கனூர், கம்பம் மற்றும் சிவகிரி போன்ற கணவாய்கள் வழியாக மட்டுமே வந்தடைய முடியும் என்று 1951-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த கணவாய்கள் வாயிலாக மட்டுமே அன்று வணிகமும் நடந்து வந்துள்ளது. இவைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப் பட்ட உண்மைகளாகும். எனவே இப்பிரதேசங்கள் அனைத்தும் சென்னை மாநிலத் தின் ஒரு பாகமாக இருந்தமையால் தமிழ் மக்கள் அவ்விடங்களுக்கு எத்தகைய தடங்களுமின்றிக் குடியேறி நிரந்தரமாக அங்கே தங்கியும் விட்டனர். அதனால் இவ்விடங்கள் அனைத்தும் தமிழர்களின் சொந்த நாடாக இன்று காட்சி தருகிறது.
இவ்விடங்களில் வாழ்கின்ற மக்களைக் குடியேறியவர்கள் என்றும், நிரந்தரமாக அங்கு தங்காமல் வந்தும் சென்றும் இருப்பவர்கள் என்றும் மாநிலங்கள் புனரமைப்புக் குழு கூறி யிருக்கிறது. இருப்பினும் இத்தகைய விவரங் களையெல்லாம் அவர்களுக்கு யார் அளித்தனர் என்றோ, அல்லது எங்கிருந்து அவைகளைத் திருடினர் என்றோ குழுவினர் விளக்கம் தரவில்லை. இது போன்ற அனேக காரியங் களைக் குறித்து வேறு சந்தர்ப்பங்களில் இக்குழு கூறும்போது இன்ன மாநிலங்கள் தந்தன என்றோ இன்ன இன்ன அமைப்புகள் தெரிவித்தன என்றோ கூறுவதை அது வழக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் இங்கே அப்படிக் கூறவில்லை. எனவே இவைகளை ஆதாரமின்றிக் கூறியதாகவே கருத வேண்டும். தமிழ்த் தொழிலாளர்களின் கடின உழைப்பால் மட்டுமே செல்வந்தர்களாகிவிட்ட சில மலையாளி முதலாளிகளும், அன்று திருவிதாங்கூர் - கொச்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்த தமிழர் விரோத பிரஷஜாசோஷலிஸ்டு அரசும் இத்தகைய தவறுதலான திசை திருப்புகின்ற விவரங் களையெல்லாம் இக்குழுவுக்கு அளித்திருக்கலாம் என நாங்கள் நம்ப வேண்டி யுள்ளது. தவிரவும், கடலோரப் பகுதி மக்கள் நெருக்கத்தைக் குறைப்பதற்கு இவ்விடங் கள் உதவும் எனவும் கூறியுள்ளனர். இன்று கேரள மாநிலத்தின் பரப்பளவு குறிப்பிடும் அளவுக்குப் பெருகியிருக்கிறது. இன்றைய கேரளம் 14,800 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்டுள்ளது.
ஆனால் திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்தின் பரப்பளவு வெறும் 9.154 சதுர மைல்கள் மட்டுமே. இந்த புணரமைப்பால் கேரள மாநிலத்துக்கு 5000 சதுர மைல்கள் பரப்பளவு கூடுதலாகக் கிடைத்திருக்கிறது. எனவே தேவிகுளம்-பீருமேடு பகுதிகளில் மட்டுமே மக்களைக் குடியேற்றுவதற்கான தேவை எதுவும் எழவில்லை.
தேவிகுளத்தின் வட எல்லையாக அஞ்சநாடு அமைந்திருக்கிறது. அஞ்சநாடு என்பது மறையூர், கிழாந்தூர், கோட்டைக்கோம்பர், வட்டவாடா, காந்தனூர், நாச்சிவயல் போன்ற பல கிராமங்களை உள்ளடக்கிய நாடாகும். அதன் மொத்த பரப்பளவு 112 ச. மைல்கள் ஆகும். தவிரவும்.
1. கண்ணன் தேவன் கம்பெனி 215 ச.மைல்கள்
2. ஏலக்காய் தோட்டப்பகுதிகள் 215 ச. மைல்கள்
3. வனவிலங்குகள் சரணாலயம் 305 ச. மைல்கள்
4. தேயிலை தோட்டங்கள் 97 ச. மைல்கள்
5. பெரியாறு நீர்த்தேக்கப் பரப்பு 13 ச. மைல்கள்
6. பெரியாறு நீர்த்தேக்க நீர்ப்பிடிப்பு பகுதிப்பரப்பு 305 ச. மைல்கள்
(இது வனவிலங்கு சரணாலய பரப்பையும் உள்ளடக்கிய பரப்பளவு ஆகும்.)
இவைகளைத் தவிர இங்கு எஞ்சி நிற்பது சிறு அளவிலான காடுகளும், புல்வெளிகளும் மட்டுமே. எனவே கடலோர மக்களின் நெருக்கத்தைக் குறைப்பதற்கு இப்பகுதிகள் உதவும் எனக் கூறுப்படுகின்ற வாதத்தில் எத்தகைய உண்மைகளோ, ஆதாரங்களோ இல்லையென்பதைத் தெளிவாகக் காணலாம். உண்மைகள் இவ்வாறிருக்க, பிரஜாசோஷலிஸ்டு அரசு அஞ்சு நாட்டில் மறையூர் கிராம வாழ் மக்களான தமிழர்களை வெளியேற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் அப்பகுதிகளில் மலையாளிக் குடியேற்ற காலணிகளை உருவாக்குவதற்கு முயன்று வருகிறது. கல்லாறு - ஏலக்காய் தோட்டப் பகுதிகளிலும் இது போன்ற குடியேற்ற காலணிகளை அரசு அமைத்து வருகிறது. இத்தகையச் செயல்களினால் மண்ணின் மைந்தர்களான தமிழர்களை அவ்விடயங்களிலிருந்து முற்றிலுமாக வெளியேற்றிவிட வேண்டும் என்பதே இன்றைய அரசின் திட்டமாகும்.
திரு.கொச்சி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான திரு.பட்டம் தாணுபிள்ளை அம்மாநில சட்டமன்றத்தில் அன்று தெளிவுபடுத்திக் கூறுகையில், "பிரஜாசோஷலிஸ்டு அரசாங்கத்தின் குடியேற்ற திட்டம் முன்னம்மேயே அமல்படுத் தப்பட்டிருந்தால், காமராஜ் நாடார் இப்பகுதிகளை இன்று கோரியிருக்கமாட்டார்'' என்ற அவருடைய பேச்சு எனது வாதத்திற்கு மேலும் வலுசேர்ப்பதாகவும், அதை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்து உள்ளது. அந்நாட்களில் ஆட்சிக் கட்டிலில் இருந்த சோசலிஸ்டு அரசின் மனநிலை அத்தகையதாக இருந்தது என்பதற்கு இது எடுத்துக்காட்டாக உள்ளது. அத்துடனே அவைகள் முடிந்துவிட்டனவா என்றால் அதுவுமில்லை. மாநில புனரமைப்புக் குழுவின் பரிந்துரை மீது திருவிதாங்கூர் - கொச்சி சட்டமன்றத்தில் அன்று விவாதம் எழுந்தபோது பட்டம் தாணுபிள்ளை கூறியது யாதெனில்:- "மதுரையிலிருந்து வருகின்ற தொழிலாளர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். இன்று மட்டுமல்ல. என்றென்றைக்குமாக தடுத்தாக வேண்டும். ஏனெனில், மலையாளிகளுக்கும், திரு.கொச்சியைச் சார்ந்த மற்றைய மக்களுக்கும் அங்கு வேலை வாய்ப்புகள் அளித்திட வேண்டியுள்ளது'' எனக் கூறினார். இவைகள் அனைத்திற்கும் பின்னால் ஒளிந்து நிற்கின்ற மனப்போக்கு இதுவேயாகும். இத்தகைய மனப்பாங்கே தேவிகுளம்-பீருமேட்டை அவர்கள் கோருவதற்குத் தூண்டுதலாக அமைந்திருக்கின்றது.
(நன்றி : முனைவர் மு. ஆல்பன்ஸ் நத்தானியல் கவிஞர் இரா. அரிகரசுதன் எழுதிய மார்ஷல் நேசமணி என்னும் நூலிலிருந்து)
No comments:
Post a Comment