இன்று 21ம் திகதி சனிக்கிழமை, தமது வருடாந்த பொங்கல் விருந்துபசார வைபவத்தை கனடிய தமிழர் பேரவையினர் ரொரன்ரோவில் கொண்டாடுகின்றனர்.
பல அரசியல் மற்றும் சமூக பிரமுகர்கள் கலந்துகொள்ளும் இவ்விழாவில் 1986ம் ஆண்டு கனடாவுக்கு அகதிகளாக புகலிடம் தேடிவந்த 155 தமிழர்கள் நியபவுண்லாந்து கடலில் அனாதரவாக உயிருக்கு தத்தளித்தபோது தன்னலம் பாராது உடனடி உதவிகளைப் புரிந்து அவர்களைக் காப்பாற்றிய கப்பல் காப்டன் திரு. கஸ் டால்டன் அவர்களுக்கு சிறப்புக் கௌரவம் அளிக்க கனடிய தமிழர் பேரவையினர் தீர்மானித்துள்ளனர்.
இவ் வைபவத்தில் காப்டன் திரு. கஸ் டால்டன் அவர்களோடு அவரது குடும்பத்தினரும் நியபவுண்லாந்து மாகாணத்தில் இருந்து வந்து சிறப்பிப்பர் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு கடந்த ஆண்டு காலமான முன்னாள் கனடிய எதிர்கட்சித் தலைவரும், கனடிய புதிய ஜனநாயகக் கட்சியின் முன்னாள் தலைவரும், கனடியத் தமிழர் சமூகத்தின் மேம்பாட்டுக்கு அயராது பாடுபட்டவருமான அமரர் திரு. ஜாக் லேட்டன் அவர்களுக்கும் சிறப்பு சேவை விருது ஒன்று வழங்கப்படவிருக்கின்றது.
அமரர் திரு. ஜாக் லேட்டனின் மைந்தன் ரொரன்ரோ நகர சபை உறுப்பினர் திரு. மைக் லேட்டன் இவ்விருதினை கையேற்று உரையாற்றவிருக்கிறார்.
பல கலை நிகழ்ச்சிகளும் சிறப்புரைகளும் நடைபெற உள்ள இவ்வைபவம் கனடா வாழ் தமிழர்களின் வலுவான திறன்கள் மற்றும் இறுக்கமும் ஒற்றுமையும் வாய்ந்த வாழ்க்கை நிலைகளை எடுத்துக்காட்டுவதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment