எமது சுதந்திர வாழ்வை மீட்டுத்தர எமக்கு உதவிடுவீர்
இன்று மாவீரர் நாள். இன்றைய புனித நன்னாளில் எமது மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலையில் நாம் இருக்கின்றோம். தமிழீழ பிரதேசத்தில் சுதந்திரமாக வாழ்ந்து சுதந்திரக் காற்றை சுவாசித்து ஒருவருக்கும் சுமையில்லாது எமது காலில் வாழ்ந்த நாம், இன்று மண்ணை இழந்து, எமது உறவுகளை, குடும்ப உறுப்பினர்களைக்கூட இழந்து நாதியற்ற நிலையில் நாடு நாடாக ஏதிலிகளாக அலைந்து திரிகின்றோம். எமது சுதந்திர வாழ்வு மீண்டும் மலர வேண்டும். நாம் எமது சொந்தக் காலில் நிற்க வேண்டும். எமது உறவுகளுடன் சேர்ந்து எமது மண்ணை நாமே ஆள வேண்டும். சிங்கள அரசின் கோர முகத்திரையைக் கிழிக்க வேண்டும். அவர்களை நீதியின் முன் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். இதற்கு புலம்பெயர் உறவுகளான நீங்களே உதவ வேண்டும்.
தற்போது நாம் குரல் கொடுக்க முடியாத நிலையில் இருக்கின்றோம். எமது மண்ணிலிருக்கும் மாவீரச் செல்வங்களின் கல்லறைகளில் ஓர் தீபம் ஏற்றவோ அல்லது அவர்களின் காலடியில் மண்டியிட்டு அஞ்சலி செலுத்தி, 1நிமிடம் அழுது ஆறுதலடையவோ முடியாத துர்ப்பாக்கியசாலிகளாக இருக்கின்றோம். அவர்களின் தியாகங்களை வெளியில் சொல்லவோ நினைத்து அழவோ முடியாது எமது மண்ணில் நாம் அனுபவிக்கும் மனவேதனைகளை சொல்லில் வடிக்க முடியாது. இதை அனுபவித்தாலே எமது நிலை விளங்கும். அந்த மாவீரர்களுடன் வாழ்ந்தவர்களும், அவர்களுடன் உறவாடியவர்களுமே இதை அறிவர்.
நாம் எமது தேசத்தில் சுதந்திரமாக வாழ்ந்த அந்தக் காலம், இவ்வேளையில் எமது போராட்டத்திற்கு புலம்பெயர் உறவுகளாகிய நீங்கள் செய்த உதவிகள், ஒத்தாசைகள். இதனாலேயே நாம் கம்பீரமாக எமது மண்ணில் போராடினோம். ஆனால் இன்றைய நிலையோ நாம் உங்களுக்கு சுமைகளாக மாறி உங்களை வேதனைப்படுத்துகின்றோம். நாம் அனுபவித்த சுதந்திரம் பற்றி சில வரிகள் சொல்ல ஆசைப்படுகின்றேன். எமக்கென்று சொந்தமான மண், எமக்கென்று நீதித்துறை, நிர்வாகம், நிதித்துறை, போக்குவரத்து, காவல்துறை, கல்வித்துறை, மருத்துவத்துறை போன்ற ஒரு அரசிற்குத் தேவையான எல்லாத் துறைகளையும் கொண்டிருந்தோம். எமது மண்ணை நாமே ஆண்டோம். சுதந்திரமாக உலாவினோம். நிம்மதியாக உறங்கினோம். உறவுகளுடன் சந்தோசமாக இருந்தோம். யுத்தம் என்று வந்த போதும் சிங்களத்தின் பக்கம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை நாங்கள் கொண்டிருக்கவில்லை. இதை எமது மே 17 முள்ளிவாய்க்கால் இடப்பெயர்வின் மூலம் நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவ்வளவு மக்கள் கொல்லப்பட்டும் நாம் சிங்களத்திடம் செல்ல விரும்பவில்லை. இறுதியில் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலை வரும்வரை எமது மண்ணில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். அதன்படியே இருந்தோம்.
சிறிலங்கா பொருளாதாரத்தடை ஏற்படுத்திய போதும் நாம் உணவிற்கு கஸ்டப்படவில்லை. மருந்தை தடுத்த போதும் மருத்துவத்தில் திருப்தி கண்டோம். சிங்களத்தின் தடைகளை எதிர்த்துப் போராடினோம். வெற்றி கண்டோம். இதனாலேயே சிங்களம் உலக நாடுகளின் உதவியை நாடி அவர்களின் காலடியில் மண்டியிட்டது. அவர்கள் கொடுத்த உதவியினால் துரோகத் தனத்தின் மூலம் எம்மை சிதைத்தது. எமது மண்ணை, மக்களை அழித்ததுடன் எம்மை ஏதிலிகளாக்கி தனது பகுதிக்குள் உள்வாங்கியது. சிங்களம் செய்தது துரோகமே ஒழிய யுத்தம் அல்ல. இது உங்களுக்கு நன்கு புரியும்.
அதன் பின்னர் நலன்புரி முகாம்கள் என திறந்தவெளி சிறைச்சாலைகளை திறந்து எம்மை அதிலடைத்தது. அங்கு நடந்த கொடுமைகளை நான் சொல்லத் தேவையில்லை. அது பல ஊடகங்களில் வெளிவந்தது. விடுதலைப் புலிகளைக் களைகின்றோம் என்று கூறிக்கொண்டு, எம்மைக் கொன்றொழித்தது. பெண்கள் சீரழிக்கப்பட்டனர். சிறுவர்கள் அநாதைகளாக்கப்பட்டனர். எமது இனமே சீரழிக்கப்பட்டது. இந்தமுகாம்களில் இருந்து கொண்டு அங்கு நடக்கும் அநீதிகளை ஊடகங்களுக்கு தெரிவித்த மக்கள் குடும்பங்களாக காணாமல் போயினர். நானும் இந்த திறந்தவெளி சிறைச்சாலை அனுபவங்களைப் பெற்றிருக்கின்றேன். அங்கு எமது மக்கள் சொல்லவொண்ணா துயரங்களை அனுபவித்தனர். எமது மண்ணிலே நாம் அகதியானோம்.
மீண்டும் மீள்குடியேற்றம் என்ற போர்வையில் எமது சொந்த மண்ணில் எம்மை வாழ விடாது வேறோர் இடத்தில் வேறு வடிவில் முகாம் அமைத்து அங்கு குடியேற்றியது. அங்கும் இதே போன்ற துன்பங்களைத் தொடர்ந்து அனுபவித்த வண்ணம் இருக்கின்றோம். இயற்கையின் சோதனை ஒருபுறம், இரும்பு மனிதர்களின் (இராணுவத்தினரின்) துன்பங்களை ஒருபுறம் சுமந்த வண்ணம் இன்றும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலில் உயிர் மட்டுமே எஞ்சியிருக்கின்றது. நாம் சேர்த்த சொத்துக்களோ, உறவுகளோ, எம்மிடமில்லை. இவற்றை இழந்து நாம் இன்று நடைப்பிணங்களாகவே திரிகின்றோம்.
சிங்களத்தை ஆள வேண்டுமென்று நாம் கேட்கவில்லை. எமது மண் எமக்கு வேண்டும். நாம் அனுபவித்த தன்னிறைவு பொருளாதாரம், தன்னிறைவு வாழ்க்கை எமக்கு வேண்டும். இந்தக் கட்டத்தில் நாம் குரல் கொடுக்க முடியாத நிலையில் இருக்கின்றோம். எமது கால்கள் கட்டப்பட்டு, சிறகுகள் வெட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். இவ்வேளையில் புலம்பெயர்ந்த எமது உறவுகளாகிய நீங்களே குரல் கொடுக்க முன்வர வேண்டும். சிங்களத்திடமிருந்து எமக்கு விடுதலை வேண்டும். சிங்களத்துடன் உலக அரசாங்கங்கள் சில செய்த துரோகத் தனத்தால் நாம் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எமக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்கு நீங்கள் உதவ வேண்டும். சிங்கள அரசின் துரோகத் தனத்தை உலகறிய செய்ய வேண்டும். சிங்கள தலைமைகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். இதற்கு உலக நீதிமன்றில் குரல் கொடுக்கும் பாரிய பொறுப்பு புலம்பெயர் எங்கள் சகோதரர்களாகிய உங்களுக்கே உண்டு. சிங்களத்தின் துரோகத் தனத்தை வெளியுலகிற்கு தெரியப்படுத்த குரல் கொடுக்கும் வாய்ப்பு உங்களுக்கு மட்டுமே உண்டு.
மாவீரர் நாளாகிய இன்று எமது நாடு, எமது உறவுகள் எமது மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க நாம் எம்மாலான பங்களிப்பை செய்வோம் என்று உங்கள் மனதில் உறுதியெடுத்துக் கொள்ளுங்கள். முன்னர் நாம் அனுபவித்த சுதந்திர தாயகம் எமக்கு வேண்டும். அதை நாம் மீட்டெடுக்க வேண்டும். உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் புலம் பெயர் எம் உறவுகள் தாங்கள் வாழும் நாடுகளிலுள்ள அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எமது போராட்டத்தின் நியாயத் தன்மையை விளங்கப்படுத்துங்கள். சிங்களத்தை சிறையிலிட உதவுங்கள். இதுவே இந்த மாவீரர் நாளில் உங்கள் உறவுகளான மாவீரர்களுக்கு நீங்கள் செய்யும் அஞ்சலியாக அமைவதுடன், உங்கள் தாயக தேசத்தில் வாழும் உங்கள் உடன்பிறப்புகளுக்கு நீங்கள் செய்யும் உதவியாகவும் அமையும்.
No comments:
Post a Comment