Translate

Sunday 29 January 2012

காணி, காவல்துறை அதிகாரங்களைக் கோரும் தீர்மானம் – கிழக்கு மாகாணசபை நிறைவேற்றியது


காணி, காவல்துறை அதிகாரங்களைக் கோரும் தீர்மானம் – கிழக்கு மாகாணசபை நிறைவேற்றியது

மாகாணசபைக்கு காவல்துறை, காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கோரும் தீர்மானம் ஒன்று முதல்வர் சந்திரகாந்தன் தலைமையிலான கிழக்கு மாகாணசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தின் பிரதி சிறிலங்கா அதிபர் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

காணி அதிகாரங்களை பகிராது போனால், காணி மீதான அதிகாரமில்லாமல் வீட்டை வைத்திருக்கும் நிலையைப் போன்றே இருக்கும் என்றும் இந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் பெரும்பாலான காணிகளை தொடருந்து திணைக்களம். பாதுகாப்புப் படைகள், வனப் பாதுகாப்புத் திணைக்களம், சுற்றுலாசபை, மகாவலி அதிகாரசபை ஆகியனவே கொண்டுள்ளதாகவும் இந்தத் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாகாணசபைக்கு அதிகாரமில்லாததால், வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் வளமான நிலங்கள் சுற்றுலாத் திட்டங்களுக்காக சுவீகரிக்கப்படுவதாகவும் கூறும் இந்தத் தீர்மானத்தில் மாகாணசபைக்கு காவல்துறை அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை தற்போது சுவிற்சர்லாந்து சென்றுள்ள கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன், நாடு திரும்பியதும் காணி, காவல்துறை அதிகாரங்களை கோருவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் கலந்துரையாடுவார்.
இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் கிழக்கு மாகாணசபை பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஆங்கில வாரஇதழிடம் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment