Translate

Thursday, 26 January 2012

அச்சத்தில் வாழும் தமிழ் கைதிகளை புனர்வாழ்வு நிலையங்களுக்கு மாற்றி உங்கள் நல்லெண்ணத்தை காட்டுங்கள் - மனோ கணேசன் ஜனாதிபதியிடம் கோரிக்கை


மகசின் சிறைக்கலவரம் நாடு முழுக்க வாழ்கின்ற தமிழ் மக்கள் மத்தியில்  ஒரு பதட்டத்தை  ஏற்படுத்தியது. குறிப்பாக சிறைக்கைதிகளின் குடும்ப  உறவுகள் மிகவும் பீதியடைந்த நிலையில் இருந்தார்கள். உண்மையில் தமிழ் கைதிகள் தாக்கப்படுகிறார்கள் என்றே ஆரம்பத்தில் தமிழ் மக்கள் மத்தியில் வதந்தி பரவியது. கடந்த காலங்களில் சிறைகளுக்குள் இனரீதியாக நடைபெற்ற சம்பவங்களை எண்ணி இந்த பதட்டமும், பீதியும் ஏற்பட்டது என்பது புரிந்துகொள்ள கூடியது. அதிஷ்டவசமாக நடந்த கலவரம் இன ரீதியானதாக இருக்கவில்லை. 
என்றாலும் இந்த சம்பவம்  தமிழ் கைதிகளின் பரிதாப நிலைமையை படம் பிடித்து காட்டுகின்றது. அரசாங்கத்தின் உடன் நடவடிக்கை காரணமாக தமிழ் கைதிகள் வேறு சிறை கூடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.  இது தமிழ் கைதிகளின் விசேட பிரச்சினையை அரசாங்கம் அறிந்து சிந்தித்துள்ளது என்பதை காட்டுகின்றது. இந்த சிந்தனை தொடரவேண்டும். இது அரசியல் காரணங்களுக்காக குற்றம் புரிந்தார்கள் என்ற சந்தேகங்களின் அடிப்படையில் நீண்ட காலமாக சிறைவைக்கப்பட்டிருக்கும் கைதிகள் தொடர்பில்  புதிய ஒரு கொள்கை மாற்றத்தை கொண்டு வரவேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலை   திணைக்களத்திலிருந்து அகற்றப்பட்டு புனர்வாழ்வு திணைக்களத்தின் கீழ் புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட வேண்டும். இதை  செய்வதன்  மூலம்   தமிழ் கைதிகளின் குடும்பத்தவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் உங்கள் உங்கள் நல்லெண்ண சமிக்ஞையை காட்டுங்கள்  என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கோரியுள்ளார். 
தலைவர் மனோ கணேசனின் கடித பிரதிகள் கொழும்பிலுள்ள முன்னணி தூதகங்களுக்கும் ஆவன செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி  ஊடக  செயலகம் விடுத்துள்ள  செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
அரசியல் காரணங்களுக்காக குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டுகளின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றும் தண்டனை வழங்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் மீது சிறை கூடங்களுக்குள் தாக்குதல்கள்  நடத்தப்படுவது மிக நீண்ட காலமாக நடந்து வருகிறது.

1983ல் வெலிக்கடை, 1987ல் பூசா, 1997ல் களுத்தறை, 1997ல் மகசின், 2000ல் களுத்தறை, 2001ல் பிந்துனுவெவ, 2009ல் மகசின், 2011ல் போகம்பரை, 2011ல் பதுளை, 2011ல் கொழும்பு சிஆர்பி, 2011ல் வெலிகடை பெண்கள் பிரிவு  ஆகிய ஆண்டுகளில் மேற்கண்ட சிறை கூடங்களில் தமிழ் கைதிகள் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன என எனக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெர்விக்கின்றன.  இதைவிடவும் சம்பவங்கள் நடைபெற்று இருக்கலாம்.
விடுதலை  புலிகளின் அங்கத்தவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை ஆகும் பொழுது அவை நல்லெண்ண சமிக்ஞைகளாக அமைகின்றன. இந்த கைதிகள் மிக நீண்ட காலமாக சிறை வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். எனவே அவர்களுக்கும் புனர்வாழ்வு பயிற்சிகள் அளிக்கும் வண்ணம் புனர்வாழ்வு நிலையங்களை அமையுங்கள்  என கேட்டுக்கொள்கிறேன். இதற்கான சட்ட திருத்தங்கள்  அவசியமானால் அவற்றை பாராளுமன்றில் கொண்டுவர ஆவன செய்யும்படி கேட்டுகொள்கிறேன்.

தமிழ் கைதிகளின் குடும்பங்கள் நாடு முழுக்கவும் வாழ்கிறார்கள். கொழும்பிலும், வடக்கிலும், கிழக்கிலும்,  மலையகத்திலும் தமிழ் பெற்றோர்களும், பெண்களும், குழந்தைகளும் நீண்ட காலமாக தமது உறவுகளை எண்ணி துயரில் துவள்கிறார்கள். போர் முடிந்ததன் பலாபலன் அவர்களுக்கு இன்னமும் கிடைக்கவில்லை. எனவே இது உள்ளே இருக்கும் கைதிகளின் பிரச்சினை மட்டும் அல்ல, வெளியே இருக்கும் அவர்களது குடும்பவத்தவர்களது பிரச்சினையும்கூட.  எனவே தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவது, கைதிகள் தொடர்பில் மட்டும் அல்ல, ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திகும் உங்களது ஒரு நல்லெண்ண செய்தியாக இருக்கும் என்பதையும் உங்கள் கவனத்திற்கு  கொண்டு வருகிறேன்.

No comments:

Post a Comment