Translate

Monday, 16 January 2012

தமிழர் மரபுரிமைத் திங்கள்


அன்புமிகு தமிழ் மக்களே!

உலகமெலாம் பரந்து வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். இந்தப் புத்தாண்டு நீதியையும் , சமாதானத்தையும், வளத்தையும் உலகத்தமிழ் மக்களுக்கு வழங்கும் ஆண்டாக அமையட்டும்! இவ்வாண்டுப் பொங்கல் விசேடமாக “அஜாக்ஸ்”, “பிக்கரிங்”, “மார்க்கம்” ஆகிய நகரசபைகளினால் பிரகடனப்படுத்தப்பட்ட ”தமிழர் மரபுரிமைத் திங்களினால்”  மேலும் முக்கியப்படுத்தப்பட்டமையை “தமிழர் மரபுரிமைத் திங்கள்” அமைப்புக் குழு சிறப்பானதாகக் கருதுகிறது.
இதனைத் தொடர்ந்து ரொறொன்ரோ மாநகரசபை , பிறாம்ரன் நகரசபை , ஒன்ராறியோ மாகாணப் பாராளுமன்றம் ஆகியனவும் இவ்வாறாகத் “தமிழர் மரபுரிமைத் திங்களைப்” பிரகடனப்படுத்துவதற்கான சூழ்நிலை நெருங்கி வருவதையும் இங்கு குறிப்பிட்டுக் கூற விரும்புகின்றோம். அதற்கான வேலைத்திட்டத்தில் “தமிழர் மரபுரிமைத் திங்கள்” அமைப்புக்குழு தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது.



இந்தப் பொங்கல் நாள் குறித்து இரு சிறிய விடயங்களைச் செய்யுமாறு தமிழ் மக்களை நோக்கி தமிழர் மரபுரிமைத் திங்கள் அமைப்புக்குழு பணிவாக வேண்டுகோள் விடுக்கின்றது. உங்கள் மீது அன்பு கொண்டோருக்கும், நீங்கள் நேசிப்பவர்களுக்கும், சிறுவர்களுக்கும் “தமிழ்” சார்ந்த பொருட்களை இந்நாளில் வழங்குவது அவற்றில் ஒன்றாகும். இது தமிழ் பொம்மை, தமிழ் நுால், சிறந்த தமிழிசை இறுவட்டு, தமிழ் திரைப்படம் என்ற வகையில் அமையலாம். அடுத்ததாக எம்மத்தியில் தமிழ் மொழியின் பிரயோகத்தை அதிகரிக்கும் வகையிலான ஈடுபாட்டை முன்னெடுத்தல் வேண்டும்.

இரண்டாவதாக இந்த ஆண்டு “தமிழர் மரபுரிமைத் திங்கள்” கொண்டாடப்படுகின்ற அதேவேளை தமிழ் மொழி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களைக் கௌரவித்தலையும் அதன் முக்கிய செயற்பாடுகளில் ஒன்றாகக்  கருதுகிறோம். எனவே தமிழ் பெற்றோர்கள் தங்களது சிறார்களை அவர்களுக்குத் தமிழ் கற்பித்த, கற்பிக்கின்ற  ஆசிரியர்களுக்கு இப்பொங்கல் நாளின்போது அழைத்து நன்றி கூறுமாறு கோரி அதனை நடைமுறைப்படுத்த உதவிடுமாறும் வேண்டுகின்றோம். எங்களது தமிழ் அடையாளத்தைப் பேணுவதில் தமிழ் ஆசிரியர்கள் ஆற்றுகின்ற தியாக மனப்பான்மையுடனான பணி இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் போற்றுதற்குரிய ஒன்று.

2010 இல் ஆரம்பிக்கப்பட்டுக் கடந்த மூன்று வருடங்களாகத் தமிழர் மரபுரிமைத் திங்களைக் கொண்டாடி வருகின்றோம்.  இச் செயற்பாடானது தமிழ்  மக்கள் மத்தியில் அதுவும் குறிப்பாகத் தமிழ் இளையவர்கள் மத்தியில் தமிழ் மொழி, பண்பாடு, அடையாளம் தொடர்பாக விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கும் மேலாகத் தமிழர்கள் அல்லாதவர்கள் தமிழ் மக்கள தொடர்பாகப் பல்வேறு விடயங்களை அறிந்து கொள்வதற்கும் இது ஏதுவாக அமைகிறது.

“தமிழர் மரபுரிமைத் திங்கள்” தமிழ் மக்களுடைய சரித்திர , வரலாற்று நிகழ்வுகளை அடையாளப்படுத்த விரும்புகிறது. மற்றும் தமிழ் சமூகம் கனடாவுக்கும், உலகுக்கும் சமூக, பண்பாட்டு, அரசியல், பொருளாதாரத் தளங்களில் ஆற்றி வருகின்ற பங்களிப்பையும், உழைப்பையும் அதனால் எற்படும் விளைவுகளையும் பதிவாக்கி உலகுடன் தொடர்ந்து உரையாட விழைகின்றது.

''தமிழர் மரபுரிமைத் திங்கள்'' அமைப்புக் குழு

No comments:

Post a Comment