Translate

Wednesday, 25 January 2012

வெலிக்கடையில் கட்டுக்குள் அடங்கவில்லை கலவரம் – விடுதலைப் புலிக் கைதிகள் அவசரமாக இடமாற்றம்



வெலிக்கடை- மகசின் சிறைச்சாலைக்குள் ஏற்பட்டுள்ள கலவரம் இன்னமும் கட்டுக்குள் வரவில்லை என்று பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு கைதிகளை அடக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பயனளிக்கவில்லை என்றும் அங்கு தொடர்ந்தும் மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரியவருகிறது.

சட்டத்தைப் பேணும் அதிகாரிகளால் சிறைச்சாலைக்கள் செல்லமுடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
சிறைக்குள் ஏற்பட்டுள்ள பதற்றநிலையை அடுத்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் அனைவரும் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 180 தமிழ்க் கைதிகள் களுத்துறை மற்றும் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதேவேளை இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகா பாதுகாப்பாக இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கலவரத்தை அடக்க கைதிகள் மீது சிறிலங்கா காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதாகவும், அவற்றை கைதிகள் காவல்துறையினர் மீது திருப்பி வீசியதாகவும் இதனால் சிறைச்சாலையின் சுற்றுப் புறத்திலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சிறைக்கட்டடம் ஒன்றின் கூரையில் ஏறியுள்ள கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 30 இற்கும் அதிகமான கைதிகள் பேருந்து ஒன்றில் பாதுகாப்புடன் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.
அந்தப் பகுதிக்கு மற்றொரு நீர்ப்பீரங்கி வாகனம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மோதல்களில் காயமடைந்த 26 சிறைக்கைதிகளும் 4 காவலர்களும், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே விளக்கமறியல் கைதிகளாவர்.
காயமுற்ற கைதிகள் அனைவரும் முழங்காலுக்குக் கீழ் சுடப்பட்டுள்ளதாகவும், ஒருவர் தலையில் சுடப்பட்டுக் காயமடைந்துள்ளதாகவும், மூன்று சிறை அதிகாரிகளும் தலையில் காயமடைந்துள்ளனர் என்றும் மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலவரத்தை அடுத்து வெலிக்கடைச் சிறைச்சாலையின் முகப்பு அமைந்துள்ள பேஸ்லைன் வீதி மூடப்பட்டுள்ளது.
சிறைச்சாலையைச் சுற்றி சிறிலங்கா இராணுவம், சிறப்பு அதிரடிப்படை, கலகம் அடக்கும் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கவசவாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
முந்திய செய்தி
வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் கலவரம், துப்பாக்கிச்சூடு
வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் துப்பாக்கிச் சூட்டுச்சத்தங்கள் கேட்பதாகவும், அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறைக்கைதிகள் கற்களை வீதித் தாக்குதல் நடத்திய போது அவர்கள் மீது சிறைக்காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் 19 சிறைக்கைதிகளும் ஒரு சிறைக்காவலரும் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல நோயாளர் காவு வண்டிகள் சிறைச்சாலைக்கு விரைந்துள்ளன. சிறைச்சாலைக்குள் உள்ள கட்டடம் ஒன்றை கைதிகள் தீவைத்து எரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கு தீயணைப்புப் படையினர் விரைந்துள்ளனர். அதேவேளை சிறப்பு அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment