Translate

Wednesday 22 February 2012

மார்ச் 5 அன்று ஐநா வில் அணிதிரண்டு நீதி கேட்போம்-திரு ஜெயானந்தமூர்த்தி

மார்ச் 5 அன்று ஐநா வில் அணிதிரண்டு நீதி கேட்போம்-திரு ஜெயானந்தமூர்த்தி

ஐரோப்பிய நாடாளுமன்றத்திலிருந்து ஐ.நா நோக்கி இடம் பெற்று வரும் மூன்று இளைஞர்களின் இலட்சியப் பயணம் எமது இனத்திற்கு சிறிலங்கா அரசால் நடத்தப்பட்ட கொடுமையை சர்வதேசம் மீண்டுமொருமுறை திரும்பிப் பார்க்க வைக்கும் அம்மூவருக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு அவர்களின் உயரிய இலட்சியத்தில் புலம்பெயர் மக்கள் அனைவரும் கைகோர்த்துக் கொள்ள வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஜெயானந்தமூர்த்தி அவர்கள் சங்கதிக்கு தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: “



தாயகத்தில் எமது தேசிய விடுதலைப்போராட்டத்தை இந்தியாவினதும் சில உலக நாடுகளினதும் உதவியுடன் சிறிலங்கா அரசாங்கம் நசுக்கிக் கொண்டிருந்தபோதும் அப்பாவிப் பொதுமக்கள் மீது இன அழிப்பைச் செய்து கொண்டிருந்தபோதும் அதைத் தடுத்து நிறுத்துமாறு புலம்பெயர் மக்கள் அந்தந்த நாடுகளில் இரவு பகல் பாராது வீதிகளில் இறங்கிப் போராடினார்கள்.

தமிழகத்தில் முத்துக்குமாரனில் தொடங்கி ஐ.நா திடலில் முருகதாசன் வரை தீக்குழிப்புகளும் நடந்தன. மேலும் தொடர்ந்தன. எனினும் எந்த உலக நாடுகளோ ஐக்கிய நாடுகள் சபையோ இப்போராட்டங்களைக் கவனத்தில் எடுக்கவில்லை. எனினும் எமது மக்கள் தொடர்ந்து போராடினார்கள்.

2009 மே 19 ஆம் திகதியுடன் போர் முடிவுக்கு வந்ததாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்ததுடன் இனிமேல் தலையிடி தீர்ந்ததென சிங்கள பேரினவாத அரசு போர் வெற்றியில் துள்ளிக் குதித்தது. ஆனால் சிறிலங்கா அரசோ சர்வதேசமோ சற்றும் எதிர்பார்க்காதவகையில் எமது புலம் பெயர் மக்கள் அப்போராட்டத்தைத் தமது கையில் எடுத்துக் கொண்டனர்.

தமிழினப் படுகொலையை சர்வதேசம் ஏற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்கான சர்வதேச விசாரணைக்குழு அமைத்து அதில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும், தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை கொண்ட தமிழீழமே தீர்வு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சர்வதேச சமுகம், ஐ.நா, மற்றும் மனித உரிமை அமைப்புகள் என்பனவற்றுக்கு தொடர்ந்து அழுத்தங்களை பல வகையிலும் கொடுக்கத் தொடங்கினர்.

புலம் பெயர் தமிழ் மக்களின் ஒற்றுமையும் அதன் பலத்தையும் கண்டு சிறிலங்கா அரசு திணறிப்போனதுடன் சர்வதேசம் எமது இனத்தின் மீது தனது பார்வையைத் திருப்பத் தொடங்கியுள்ளது.

இதில் ஒரு ஆரம்பப் புள்ளியாக எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் முக்கிய தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.

இம்முக்கியமான தருணத்திலேய எமது மூன்று இளைஞர்கள் ஐரோப்பிய நாடாளுமன்றத்திலிருந்து ஐ.நா நோக்கி நீதிக்கான நடைப்பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர். எமது மக்களுக்கு நடந்த படுகொலைக்குத் தீர்வு வேண்டும் எமது இனம் சுதந்திரமாக தம்மைத் தாமே ஆழக்கூடிய சுயநிர்ணய உரிமை கொண்ட தனிநாடு அமைய வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தியும் சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் இந்நடைப்பயணத்தை இவர்கள் மிகவும் துணிச்சலுடன் தொடர்ந்து வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் தற்போது நிலவும் கடும் பனிக்குளிரான காலநிலையின் மத்தியிலும் உயரிய இலட்சியத்தைத் தமது தோள்களில் சுமந்து செல்கின்றனர்.

எமது தேசியத் தலைவரின் சிந்தனையும், மாவீரர்களின் தியாகமும் மக்களின் உயிர்கொடையும் இவர்களை மேலும் வீச்சுடன் முன்னேறிச் செல்ல வைத்திருக்கின்றது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மக்களும் தினமும் இவர்களுடன் இணைந்து தமது ஆதரவையும் உற்சாகத்தையும் வழங்கி வருகின்றனர்.

அன்பான எனது புலம்பெயர் உறவுகளே!

இன்றைய காலகட்டம் எமக்கானது. இச்சந்தர்ப்பத்தை நாம் தவறவிடாமல் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவரை காலமும் நீங்கள் நடத்திய போராட்டங்களும் ஒத்துழைப்புகளும் பெறுமதியானவை. அதே வீச்சுடன் தொடர்ந்து போராடவேண்டியது எமது காலத்தின் தேவை. இதற்கு சர்வதேசம் என்றோ ஒரு நாள் பதில் சொல்லியே ஆகவேண்டும். எனவே இம்முறையும் மனித உரிமைக் கூட்டத்தொடர் நடைபெறும் வேளையில் எமது மக்களின் பலத்தையும் போராட்ட வீச்சையும் ஐ.நா திடலில் காட்ட வேண்டும்.

ஆகவே இவர்களின் நடைப்பயணம் ஐ.நா. மன்றத்தின் முன்னால் முருகதாசன் திடலில் எதிர்வரும் 05.03.2012 ஆம் திகதி முடிவடையும் தினத்தன்று எமது புலம் பெயர் மக்கள் பெரும் தொகையில் அங்கு ஒன்று கூடி நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திலும் கலந்து கொண்டு எமது பலத்தைக் காட்ட வேண்டும்.

நிட்சயமாக எமது புலம் பெயர் உறவுகளாகிய நீங்கள் அன்றைய தினம் எமது பலத்தை அங்கு காட்டுவீகள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. நாம் இன்னும் வீழ வில்லை. எமது இலட்சியத்தை அடையும் வரை முழு மூச்சுடன் போராடுவோம் என்ற செய்தியை சர்வதேசம் மட்டுமல்ல எமது இனத்தை அழித்த இந்தியா இலங்கை போன்ற நாடுகளுக்கும் காட்ட வேண்டும். எனவே அன்றைய தினம் அனைத்து மக்களும் அணிதிரண்டு வாருங்கள் என்று அறை கூவல் விடுத்துள்ளார் ஜெயானந்தமூர்த்தி.

எமது பிரமாண்டமான ஒன்று கூடல் குறிப்பிட்ட தினமான 5 ஆம் திகதியே நடைபெறும் அத்துடன் இம்மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஐ.நா திடலில் சுழற்சி முறையில் நடைபெறும். இப்போராட்டங்களில் தினமும் அனைத்து நாடுகளில் இருந்தும் தேசிய செயற்பாட்டாளர்கள், தமிழின பற்றாளர்கள் தொடர்ச்சியாக கலந்து கொள்ளவுள்ளனர்.
இதைவிட எமது மக்களின் பலத்தையும் எமது உயரிய இலட்சியத்தையும் சிதைக்கும் வகையிலும் புலம்பெயர் மக்கள் தொடர்பாக சர்வதேசம் கொண்டுள்ள நல்லெண்ணத்தைக் குழப்பும் வகையிலும் இடம் பெற்று வரும் மற்றுமொரு போட்டி நடைப்பயணம் தொடர்பாகவும் ஐக்கிய நாடுகள் சபை திடலில் இம்மாதம் நடைபெறவுள்ளதாகச் சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பற்றியும் எமது மக்கள் எவரும் குழப்பமடையத் தேவையில்லை என்றும் புலம்பெயர் மக்கள் தமது ஒற்றுமையை மார்ச் 5 ஆம் திகதி காட்டுவோம் வாருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment