Translate

Thursday, 2 February 2012

மனந்திறந்து பேசுவோமே


மே 2009 க்குப் பின்னர் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் ஒரு அமைப்பின் ஏகத் தலைமைத்துவம் என்ற நிலையினைக் கடந்து பன்முகப்படுத்தப்பட்டதாக மாறி வருகிறது.

இப் பன்முகப்பட்ட தன்மை காரணமாக அமைப்புக் களுக்கிடையே அரசியல் நிலைப்பாடுகளிலும் அணுகுமுறைகளிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. சில சமயங்களில் முரண்பாடுகளாகவும் இவை வெளிப்படுகின்றன.

இதனால் தமிழ் அமைப்புக்களிடையே ஒற்றுமை இல்லை என்று கருத்தும் பரவலாகக் காணப்படுகிறது.
தமிழர் தேச அமைப்புக்கள் ஒருமைப்பாட்டுக்கு அல்லது புரிந்துணர்வுக்கு வருவது சாத்தியமா? அவ்வாறு வருவதாயின் ஒற்றைப்புள்ளியில் அனைத்து அமைப்புக்களும் சந்திப்பது அவசியம்தானா?
மே 2009 க்குப் பின்னர் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் தலைமை களத்திலும் புலத்திலும் ஒரே அமைப்பின் கையில் இல்லை. இங்கே களம் எனக் குறிப்பிடப்படுவது தமிழீழத் தாயகப் பகுதி ஆகும்.
மே 2009 க்கு முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பே களத்திலும் புலத்திலும் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் தலைமையாக விளங்கியது.
தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே களத்தில் ஈழத் தமிழர் தேசத்தின் தலைமையாக உள்ளது. நடைபெற்ற தேர்தல்களில் மக்கள் ஆதரவைப் பெற்ற அமைப்பாகத் தன்னை நிலை நிறுத்த முடிந்த காரணத்தாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் ஈழத் தமிழர் தேசத்தின் தலைமையாக எழுச்சிபெற முடிந்தது.
ஈழத் தமிழ் அரசியல் அமைப்புக்கள் ஒரே புள்ளியில் சந்திப்பது அவசியம்தானா?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாட்டில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியும் அதன் ஊடாக பின்னர் உதயமாகிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழர் தேசம் சார்ந்து காத்திரமான அரசியல் நிலைப்பாட்டைக் கெண்டிருந்தாலும் போதிய மக்கள் ஆதரவை தேர்தல்கள் மூலம் வெளிக்காட்டி மக்கள் பிரதிநிதிகளாக தம்மை நிலைநிறுத்துவதில் இதுவரை வெற்றியடையவில்லை.
இருந்தபோதும் தாயகத்தைப் பொறுத்தவரை ஈழத் தமிழர் தேசத்தின் இரு முக்கிய அரசியல் அமைப்புக்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் நாம் அடையாளம்காண முடியும்.
இவ் இரண்டு அமைப்புக்களுக்குள்ளும் அரசியல் ரீதியல் முரண்பாடுகள் நிலவுகின்றன. இவ் இரண்டு அமைப்புக்களும் தமிழீழம் பற்றித் தற்போது பேசுவதில்லை. அதற்குரிய சூழலும் அங்கு கிடையாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழீழம் எனும் அரசியல் நிலைப்பாட்டைத் தாம் கைவிட்டு விட்டதாகப் பகிரங்கமாக அறிவித்தும் விட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இத்தனைய அறிவிப்புக்கள் எதனையும் வெளியிடவில்லை. எந்த ஒரு அரசியல் தீர்வு முயற்சியும் ‘ஒரு நாடு – இரு தேசங்கள்’ என்ற நிலையில் இருந்தே அணுகப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை பகிரங்கமாக முன்வைத்து அதற்கு ஆதரவு தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசம் என்ற நிலைப்பாட்டில் நின்று சுயநிர்ணயப்பாதையில் பயணிக்கவில்லை – தம்மை ஆதரித்து நிற்கும் மக்களுக்கு துரோகம் இழைக்கிறது என்பதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் குற்றச்சாட்டாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாம் மக்களுக்குத் துரோகம் செய்ய மாட்டோம் எனவும் அனைத்துலக அரசுகளுடன் அந்நியப்படும் அணுகுமுறையினைக் கடைப்பிடிக்காமல் அவர்களின் ஆதரவுடன் உரிமைகளை வென்றெடுக்கும் வகையிலேயே தமது செயற்பாடுகள் அமைந்து வருகிறது என்ற வகையிலான கருத்துக்களை முன்வைத்து வருகிறது.
இதற்கு எதிர்வினையாக ஈழத் தமிழர் தேசத்துக்கு அனைத்துலக ஆதரவு தேவைப்படுவதுபோல அனைத்துல சமூகத்துக்கும் தமது நலன்களை எட்டிக் கொள்வதற்கு ஈழத் தமிழர் தேசத்தின் ஆதரவு தேவைப்படுகிறது – இதனால் தேசம் – சுயநிர்ணய உரிமை விடயங்களில் விட்டுக் கொடுப்பற்ற நிலையைப் பேணி இந் நிலைப்பாட்டுக்கு அனைத்துலக ஆதரவினைப் பெற்றுக் கொள்ளல் அவசியம் என்ற கருத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்து வருகிறார்.
புலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலகத் தமிழர் பேரவை, மக்கள் அவைகள் போன்ற அமைப்புக்கள் அரசியல் இராஜதந்திர வழிமுறைச் செயற்பாடுகளில் உள்ளன.
இவற்றைவிட விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டமைப்புகளான அனைத்துலகத் தொடர்பகம், தலைமைச் செயலகம் ஆகியன தமது செயற்பாடுகளைப் புலத்தில் மேற்கொள்கின்றன.
இங்கு புலத்தில் அரசியல் செயற்பாடுகளில் இருக்கும் அனைத்து அமைப்புக்களும் குறிப்பிடப்படவில்லை. மே 2009 க்கு முன்னர் விடுதலைப் புலிகள் தலைமையிலான தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து நின்று தற்போது வெவ்வேறு அரசியல் அமைப்புக்களாக இயங்கும் முதன்மை அமைப்புக்கள் பற்றியே குறிப்பிடப்படுகிறது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஈழத் தமிழர் தேசத்தின் தேசியப் பிரச்சினைக்கு சுதந்திரமும் இறைமையுமுடைய தமிழீழத் தனியரசுதான் தீர்வு என்பதனை தனது அரசியல் அமைப்பில் பிரகனடப்படுத்தியுள்ளது. ஈழத் தமிழர் தேசம் சிங்கள அரசால் இனஅழிப்புக்கு (Genocide) உள்ளாக்கப்படுகிறது என்ற நிலைப்பாட்டை முன்வைத்துச் செயற்படுகிறது.
ஒரு தேசம் என்ற வகையில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் இனப்படுகொலைக்குள்ளாகும் மக்கள் என்ற வகையில் அதற்குப் பரிகாரம் தேடும் ஏற்பாடு என்ற வகையிலும் தமிழீழத் தனியரசுதான் ஈழத் தமிழர் தேசத்தின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக அமைய முடியும் எனும் நிலைப்பாட்டை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பகிரங்கமாக முன்வைக்கிறது.
மக்கள் அவைகளும் தமிழீழம், இனஅழிப்பு (Genocide) என்ற நிலைப்பாடுகளைத் தமது யாப்பில் பிரகடனப்படுத்தி அதே நிலைப்பாட்டுடன் செயற்படுகின்றன.
உலகத் தமிழர் பேரவை தமிழீழம் என்ற நிலைப்பாட்டை தனது யாப்பில் உள்ளடக்கவில்லை. அரசியல் தீர்வு குறித்து பேசும்போது சுயநிர்ணய உரிமையின் பாற்பட்டு நிலைப்பாட்டை எடுக்கிறது. இது உள்ளக சுயநிர்ணய உரிமையா அல்லது வெளியக சுயநிர்ணய உரிமையா என்பது குறித்தும் கருத்து வெளியிடுவதில்லை. தமிழீழத் தனியரசுதான் தீர்வு என்ற நிலைப்பாட்டை முன்வைத்தும் செயற்படுவதில்லை.
இதனை இன்னொரு வகையில் கூறுவதாயின் தமிழர் தேசிய உரிமை அரசியல் தளத்தில் புலத்தில் செயற்படும் முன்னணி அமைப்புக்களில் தமிழீழம் பற்றிப் பேசாத அமைப்பாக உலகத் தமிழர் பேரவை உள்ளது.
புலத்தில் அமைப்புக்களுக்கிடையோன முரண்பாடுகள் களத்தைவிடக் கூடுதலாகவே உள்ளன. இவை வெளிப்படும் விதமும் சில சமயங்களில் நாகரீக எல்லைகைளத் தாண்டி விடுகின்றன.
புலத்தில் உள்ள அமைப்புக்களில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டமைப்புக்களான அனைத்துலகத் தொடர்பகமும் தலைமைச் செயலகமும் தமக்குள் முரண்பட்டுக் கொள்கின்றன.
இம் முரண்பாடுகள் 2011 ஆம் ஆண்டு பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய இடங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகள் இரண்டு பிரிவுகளாக நடைபெறும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.
அனைத்துலகத் தொடர்பகமும் இதன் முன்னணி அமைப்பான தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை எதிர்த்துச் செயற்படுகின்றன.
மக்கள் அவைகள் ஒரு புறம் தம்மை மக்களால் தெரிவு செய்யப்பட்ட சுதந்திரமான அமைப்புக்களாக வெளிப்படுத்தும் அதேவேளை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்கள் இவற்றைத் தமது அரசியல் பிரிவுகளாக வெளிப்படுத்துகின்றன.
இதனால் அனைத்துலகத் தொடர்பகத்துடன் உடன்பாடானவர்களைத் தவிர ஏனையவர்கள் மக்கள் அவைகளுடன் இணைந்து செயற்பட முன்வருவதில்லை.
உலகத் தமிழர் பேரவையே புலத்தில் இயங்கும் அமைப்புக்களில் ஒப்பீட்டளவில் எதிர்ப்புக்கள் குறைந்த அமைப்பாக உள்ளது.
இத்தகைய ஒரு பின்னணியில் வைத்து களத்திலும் புலத்திலும் இயங்கும் அமைப்புக்கள் தமக்கிடையே எத்தகைய ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்த முடியும்?
இவ் விடயத்தை நோக்கும் முன்னர் இன்று ஈழத் தமிழர் தேசம் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான சில விடயங்களை அடையாளம் காண முயல்வோம்.
1. தாயகத்தில் ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசம் என்ற நிலையினைத் தக்க வைத்துக்கொள்ளல். அதற்கு தமிழர் நிலங்கள் சிங்கள அரசால் பறித்தெடுக்காமல் பாதுகாத்துக் கொள்ளலும் வடக்கு கிழக்குப் பிரதேச இணைவைப் பேணிக் கொள்ளலும் அடிப்படையானது.
2. தாயக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல். இதற்கு சிங்கள இராணுவம் தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து வெளியேறுதலும், தமிழ் மக்களின் பாதுகாப்பு தமிழ் மக்களாலேயே தீர்மானிக்கப்படுதலும் அவசியம்.
3. சிறிலங்கா அரசு தமிழர்களின் மிகக் குறைந்த கோரிக்கைகளைக்கூட ஏற்றுக் கொண்டு அரசியல் தீர்வினைக் காணத் தயாராக இல்லை என்பதனை அனைத்துலக அரங்கில் வெளிப்படுத்தல்.
4. ஈழத் தமிழ் மக்கள் திட்டமிட்ட வகையில் சிங்கள அரசால் இனஅழிப்புக்குள்ளாக்கப்பட்டு வருவதனை அனைத்துலக அரங்கில் உரிய முறையில் வெளிப்படுத்தி பரிகாரம் தேடல்
5. சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி கோரல்
6. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், போராளிகள், மாவீரர் குடும்பங்கள் தமது வாழ்வை மீளக் கட்டி எழுப்புதவற்கு வழிவகை செய்தல்.
7. ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசம் என்ற நிலைக்கு அனைத்துலக அங்கீகாரம் தேடலும் அதன் தொடர்ச்சியாக அதனைப் பிரயோகித்தலும்.
இவையெல்லாம் ஒரே அமைப்பாலோ அல்லது குறுகிய காலத்திலோ மேற்கொள்ளப்படக்கூடிய விடயங்கள் அல்ல.
இவை ஒன்றுக்கொன்று முரண்பாடான விடயங்களும் அல்ல.
ஈழத் தமிழர் தேசம் தனித்து நின்று வெற்றி பெறக்கூடிய விடயங்களும் அல்ல.
இதனால் ஈழத் தமிழர் தேசம் தனது செயற்பாடுகளைப் பகுத்துக் கொள்ளலும் பங்கீட்டுக் கொள்ளலும் அவசியமானது. உதாரணமாக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழீழம் பற்றி களத்தில் உள்ள அமைப்புக்கள் பேச முடியாது. ஆனால், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பேசலாம்.
சிறிலங்கா அரசினைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் முயற்சிகளையும் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்குவதையும் ஒரே அமைப்பு செய்ய முடியாது. ஆனால் வெவ்வேறு அமைப்புக்கள் செய்யலாம்.
மேலும் நாம் தனித்து நிற்காது உரிய முறையில் அனைத்துலக ஆதரவினைத் வென்றெடுத்தலும் அவசியமானது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியத்தின் பாற்பட்ட மிகக் குறைந்தபட்ச நிலைப்பாட்டினை எடுத்துக் கொள்கிறது என்பதற்காக தமிழ்த் தேசியர்கள் கூட்டமைப்பை நிராகரிக்கத் தேவையில்லை.
இங்கு நாம் பாரதப்போரின் ராஜதந்திர அணுகுமுறையினைக் கவனத்திற் கொள்ளலாம். பாரதம் இதிகாசமாக இருந்தாலும் இதிலிருந்து நாம் கற்றுக் கொள்வதற்கு விடயங்கள் உள்ளன.
பாண்டவரின் தூதரால் குறைந்தபட்சமாக 5 வீடுகள் கோரிக்கை முன்வைக்கபட்டது அவை போதும் என்பதற்காக அல்ல. ஆனால் இக் குறைந்தபட்சக் கோரிக்கைகளைக்கூட ஏற்றுக் கொள்ள கௌரவர் தயாராக இல்லை என்பதனையும் பாரதப் போர் தவிர்க்க முடியாது என்பதனையும் வெளிப்படுத்தவேதான்.
கூட்டமைப்பு இத்தகையதோர் தந்திரோபாயத்துடன் தற்போதய அணுகுமுறையை எடுக்கிறதோ இல்லையோ கூட்டமைப்பு எடுக்கும் நிலைப்பாடு சிங்கள அரசும் சிங்கள பௌத்த பேரினவாதமும் எவ்வித அதிகாரப் பகிர்வுக்கும் தயாராக இல்லை என்பதனை வெளிப்படுத்த உதவும்.
காணி, பொலிஸ் அதிகாரங்கள், வடக்கு கிழக்கு இணைவு இவற்றுடன் மக்கள் வாழ்வில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு இராணுவம் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இருந்து அகற்றப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வைத்து கூட்டமைப்பு இவற்றில் விட்டுக் கொடுப்பற்று செயற்பாட்டாலே இப்போதைக்குப் போதுமானது.
சிங்கள பௌத்த பேரினவாதம் இந்த (5 வீடுகளுக்கு நிகரான) குறைந்த பட்ச கோரிக்கைகளைக்கூட ஏற்றுக் கொள்ளப்போதில்லை.
தமிழர் பிரதேசத்தை சிங்கள மயமாக்கும் அரசின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தும் போராட்டங்களையும் மக்களின் மறுவாழ்வுக்குத் தேவையான புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புத் திட்டங்களையும் கூட்டமைப்பு தலைமை தாங்கி முன்னெடுக்க வேண்டும்.
எந்தவொரு அரசியல் அமைப்பும் தனது அடிப்படைப் பலத்தை தனது மக்களில் இருந்தே பெற வேண்டும். மக்கள் அதரவு இருந்தால் மட்டுமே அனைத்துலக ஆதரவும் அங்கீகாரமும் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் வரும்.
கூட்டமைப்பு மக்களை ஒருங்கமைத்து அணிதிரட்டி நேரடியான போராட்டங்களில் ஈடுபடுவதற்கும் செயற்பட வேண்டும். இத்தகைய நேரடிப்போரட்டங்களை இராஜதந்தர ரீதியான போராட்டத்துடன் இணைக்க வேண்டும்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது நிலைப்பாட்டுக்கு மக்கள் ஆதரவினைப் பெறுவதற்கான செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும். கூட்டமைப்பு குறைந்தபட்ச நிலைப்பாட்டில் இருந்து இறங்காது பாதுகாத்தலுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாடுகள் முக்கியமானவை.
எனினும் அறிக்கைகைள் மூலமாகக் கூட்டமைப்பினை கண்டனம் செய்து கொண்டிருப்பதனைக் கடந்து அர்த்தமுள்ள அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
இவ்விடத்தில் நாம் அனைத்துலக அரசுகளின் நிலைப்பாடுகளை குறித்துக் கொள்வது பயன் தரும். இங்கு அனைத்துலக அரசுகள் என்பது கூடுதலாக அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தையே குறிக்கிறது.
1. அனத்துலக அரசுகள் சிறிலங்கா அரசினை அதிகார மையமாகக் கொண்டு இலங்கைத்தீவினைக் கையாள்வதனையே விரும்புகின்றன.
2. தமிழீழம் என்ற தனி அரசு இலங்கைத் தீவில் உருவாகுவதை அனைத்துலக அரசுகள் தற்போது விரும்பவில்லை.
3. இலங்கைத்தீவில் மீண்டும் ஆயுதப் போராட்டம் முளைவிடுவதை அனைத்துலக அரசுகள் ஏற்றுக் கொள்ளவில்லை.
4. சிறிலங்கா அரசினை யுத்தக் குற்றங்களுக்காகத் தண்டிப்பதற்கு அனைத்துலக அரசுகள் விரும்பவில்லை.
யுத்தக்குற்ற விசாரணை என்பது மேற்குலக நலன்கைள இலங்கைத்தீவில் நிலைநிறுத்தக் கூடுதலாகப் பயன்படுத்தப்படுகிறதே தவிர சிறிலங்கா அரசினைத் தண்டனைக்குள்ளாக்கும் வகையில் அனைத்துலக அரசுகள் இயங்காது.
2012 இல் மார்ச்சில் சிறிலங்காவினை ஜெனிவாவில் அழுத்தத்திற்கு உள்ளாக்கும் வேலைகள் நடைபெறுமேயன்றி குற்றவாளிக்கூண்டில் ஏற்றும் திட்டம் மேற்குலகத்துக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
இந் நிலையில் ஈழத் தமிழர் தேசத்தின் அனைத்துலக செயற்பாடுகள் மிகவும் சவால்மிக்கவை.
ஒரு சிறிய தேச மக்களான நாம் நமது சக்திகளை நமக்குள் மோதி விரயம் செய்யக்கூடாது. இது எதிர்மறையான விளைவுகளையே நமது தேசத்துக்குத் தரும்.
இயன்றளவு விரைவில் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் ஊடாக ஒரு வகையிலாக புரிந்துணர்வைத் தமிழர் அமைப்புக்கள் எட்ட வேண்டும்.
அண்மையில் பொங்குதமிழில் சண்முகவடிவேல் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டவாறு குறைந்தபட்சம் வசைபாடுவதைத்தானும் தவிர்க்க வேண்டும்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் இரு அங்கங்களாக தம்மை வெளிப்படுத்தும் அனைத்துலகத் தொடர்பகமும் தலைமைச் செயலகமும் தமக்கிடையில் பேச்சுக்கள் மூலம் ஒரு உடன்பாட்டுக்கு வர வேண்டும்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தியவாறு இவ்வாறு பிரிந்து நின்று பகிரங்கமாக முரண்பட்டுக் கொள்வது தலைவர் பிரபாகரனுக்கும் ஏனைய மாவீரர்களுக்கும் இழைக்கப்படும் பெரும் அவமதிப்பு என்பதனை உரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அனைத்துலகத் தொடர்பகம் தனது ஏகபோகச் சிந்தனையில் இருந்து விடுபட்டு ஏனையோரை மதித்து ஏற்றுக் கொள்ளும் மனநிலையினைப் பெறவேண்டும்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் செயல் முனைப்புள்ள அமைப்பாகத் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் மக்கள் அவைகளுக்கும் இடையில் அவர்கள் வெளிப்படுத்தும் நோக்கங்களில் பெரியளவில் வேறுபாடுகள் இல்லை. இதனால் இவ் அமைப்புக்கள் தமக்குள் இணைந்து செயற்படுவதற்கு உரிய வாய்ப்புக்கள் குறித்து ஆராய முன்வரவேண்டும்.
மக்கள் அவைகள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களின் பலத்தில் தொங்கிக் கொண்டிருப்பது அரசியல்ரீதியில் பயன்தரப்போவதில்லை. இதனைக் கவனத்திற் கொண்டு தனித்துவமான அமைப்புக்களாக இவை வளர்ச்சி காண வேண்டும்.
தமிழீழம் என்ற கனவினை உயிர்ப்பாக வைத்திருப்பதற்கும் அனைத்துலக நலன்சார் அரசியலில் தமிழீழத்துக்கு உரிய வாய்ப்புக்கள் வரும்போது அவற்றைப் பற்றிப்பிடித்துக் கொள்ளவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினதும் மக்கள் அவைகளினதும் செயற்பாடுகள் பயன்தரக்கூடியவை.
உலகத் தமிழர் பேரவை தமிழீழம் பற்றிப் பேசாது இருப்பது ஒரு வகையில் சாதகமானது. தமிழீழத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் அனைத்துலக அரசுகளுக்கு உலகத் தமிழர் பேரவையுடன் தொடர்புகளைப் பேணுவது ஒப்பீட்டளவில் இலகுவாக இருக்கும்.
போர்க்குற்றம் தொடர்பான அழுத்தங்களைக் கொடுக்கவும் இது துணைபுரியக்கூடும்.
ஆதனால் உலகத் தமிழர் பேரவையும் தமிழீழம் பற்றிப் பேச வேண்டும் என அழுத்தம் கொடுப்பதோ அல்லது தமிழீழம் பற்றிப் பேசவில்லை என வசைபாடுவதோ ஆரோக்கியமானதல்ல.
உலகத் தமிழர் பேரவை தனது இந்த அணுகுமுறையினை வெற்றிகரமாகக் கடைப்பிடிப்பதாயின் தமிழீழம் பற்றி வெளிப்படையாகப் பேசும் அமைப்புக்களை தனது உறுப்பு அமைப்புக்களாகக் கொள்ளாது இருப்பது நல்லது.
மே 2009 க்கு பின்னர் தோற்றம் பெற்றுள்ள சூழலில் தமிழர் அமைப்புக்கள் ஒற்றைப்புள்ளியில் சந்திப்பது சாத்தியம் அல்ல. அது தேவையும் அல்ல.
அமைப்புக்கள் ஒருவரை ஒருவர் மதித்துப் புரிந்து கொண்டு ஒரு சட்டகத்துக்குள் ஒத்திசைவாக இயங்கினாலே தற்போதைக்குப் போதுமானது.

No comments:

Post a Comment