Translate

Thursday, 2 February 2012

13+ உறுதியளிப்பு பத்தோடு பதினொன்றா?


தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சியின் தொடர்ச்சியாக இந்திய வெளிநாட்டமைச்சர் எஸ். எம் கிருஸ்ணா இலங்கைக்கான தனது இரண்டாவது பயணத்தை முடித்துக்கொண்டு சென்ற 19ஆம் திகதி நாடு திரும்பிவிட்டார். இதேவிடயம் தொடர்பில் ஏறத்தாழ இரண்டு தசாப்தங்களுக்குமுன்னதாக அன்று இந்திராகாந்தி அரசாங்கத்தின் வெளிநாட்டமைச்சராயிருந்தவராகிய நரசிம்ம ராவ் இலங்கைக்கு பயணமொன்றினை மேற்கொண்டிருந்தார். அந்த வரிசையில் முன்னார் அமைச்சர் நட் வர்சிங் மற்றும் கோபாலசாமி பார்த்தசாரதி, ரொமேஷ் பண்டா போன்ற இந்திய ராஜதந்திகள் அடங்கலாக பல்வேறு உயர் அதிகாரிகள் இந்த முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கிட்டுமென்று கிருஸ்ணா நம்புகிறார்.
இப்போது நான்கு நாள் பயணத்தை மேற் கொண்டிருந்த அமைச்சர் கிருஸ்ணா மேற்படி பிரச்சினைக்கு அரசியற் தீர்வொன்று கிட்டுமெனதான் நம்புவதாக இந்தியச் செய்திச் சேவையொன்றுக்கு ஏற்கெனவே அளித்த பேட்டியில் அபிப்பிராயம் வெளியிட்டிருந்தார். தற்போது அரச தமிழ் தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் அமைக்கப்படவுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விவாதங்கள் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும்.
இதயசுத்தியான மீள் நல்லிணக்கப்பாட்டுடன் கூடிய தீர்வை எட்டுவதே இந்தியாவின் அணுகுமுறை என்றெல்லாம் இங்கு வரு முன் பேசினாரல்லவா? அவர் இலங்கை வந்ததும் முதலாவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (த.தே.கூ) தரப்போடு கலந்துரையாடியபோது அரசாங்கத்துடனான பேச்சுகளில் பயனெதுவும் ஏற்படவில்லை என்றும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டாலே ஒழிய நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்க போவதில்லை என்றும் த.தே. கூ தரப்பினர் கிருஸ்ணாவுக்கு திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.
பீரீஸுடனான சந்திப்பு அடுத்ததாக கிருஸ்ணா இலங்கை வெளி நாட்டமைச்சர் போராசியர் ஜீ.எல்.பீரீஸுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.சென்ற வருடம் பீரீஸ் டில்லி சென்றிருந்த போது பிரதமர் மன் மோகன் சிங்கையும் சந்தித்ததோடு, கிருஸ்ணாவுடன் நடத்திய கலந்துரையாடலையடுத்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இலங்கைத் தமிழ்த்தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு வெகு சாதகமான வகையில் இணக்கங்காணப்பட்டதாக கிருஸ்ணா பீரீஸ் கூட்டறிக்கையில்
தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒப்புதலோடுதான் பீரீஸ் அக் கூட்டறிக்கையின் உள்ளடக்கத்திற்கு இணங்கியிருப்பார் என்று ஊகிக்கபட்டதாயினும் பீரீஸ் காட்டிக்கொடுத்துவிட்டாரென்று சில வட்டாரங்களில் சர்ச்சை கிளப்பப்பட்டதோடு குறித்த கூட்டறிக்கை காற்றோடு காற்றாகி விட்டது.
ஜனாதிபதியுடனான சந்திப்பு அடுத்து அமைச்சர் கிருஸ்ணா ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது 13 பிளஸ் தீர்வுக்கும் தான் தயாரென ஜனாதிபதி உறுதியாக கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. முந்திய கட்டங்களிலும் குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த போது கூட ஜனாதிபதி ராஜ பக்ஷ 13 பிளஸ் தீர்வுக்கு தயார் என்று கூறியவர். ஆனால் பின்பு த.தே. கூட்டமைப்பினர் பேசும்போது 13 மைனர்ஸ் தான் காணி பொலிஸ் அதிகாரம் என்ற பேச்சுக்கு இடமில்லை என்று கடும் தொனியில் பேரிப்பட்டது. பின் மீண்டும் 13 பிளஸ் என்று நாடகமாடப்படுகின்றது. இது பற்றி கிருஸ்ணா என்ன நினைத்தாரோ தெரியவில்லை. ஆனால், ஜனாதிபதியுடனான சந்திப்பை அடுத்து அவர் நடத்திய பத்திகையாளர் மாநாட்டில் கூறிவைத்ததைப் பார்ப்போம்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் காத்திரமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினால், தேசிய நல்லிணக்கத்தை உருவாக்கும் முயற்சியில் அது நல்லதொரு படிமுறையாக அமையக்கூடிய வாய்ப்பை இலங்கை நழுவ விடக்கூடாதென்று கிருஸ்ணா கூறினார். ஆனால் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கும் அமைச்சர் கிருஸ்ணாவுக்குமிடையிலான கலந்துரையாடலையடுத்து கூட்டறிக்கை எதுவும் விடுக்கப்பட்டதாகத் தெரியவில்லையே! எனவே ஜனாதிபதி அளித்த 13 பிளஸ் வாக்குறுதியும் பத்தோடு பதினொன்றா என்று சந்தேகம் எழுவது இயல்பானதாகும்.
மேலே கூறப்பட்டுள்ளது போலவே இந்தியத் தலைவர்கள் மட்டத்திற்கு 13 பிளஸ் வாக்குறுதியானது இன்று நேற்றல்ல பல காலமாக அளிக்கப்பட்டதொன்றாகும். வாக்குறுதிகள் காப்பாற்றப்படுவதற்காக அன்றி, காற்றில் பறக்க விடுவதற்கானவை என்ற நிலையில்தான் இலங்கை அரசின் உள்ளக்கிடக்கையாயிருப்பது மிகவும் துர்ப்பாக்கியமானதும் வெட்கக் கேடானதுமாகும்.
சிங்கள பௌத்த மேலாதிக்க மனோபாவம் தான் அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வுக்கு குறுக்கே நீண்டகாலமாயிருந்து வந்துள்ளது. இன்று அந்த நிலைக்கும் அப்பாற்சென்று குடும்ப ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. அதற்கப்பால் அதிகாரப்பகிர்வு எதற்கு என்ற மமதை தலைக்கேறிவிட்டது.
வரவு செலவு திட்டத்தின் கீழ் வரும் நிதி ஒதுக்கீட்டில் ஜனாதிபதியின் கீழ் வரும் நிதி, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி, துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள அமைச்சர்கள் ஜனாதிபதியின் சகோதரர் பஷில் ராஐபக்ஷவின் கீழ் வரும் பொருளாதார அமைச்சுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சைப் பொறுத்தவரை ஜனாதிபதியின அடுத்த சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷ உத்தியோகப் பற்றற்ற பாதுகாப்பு அமைச்சர் போலவே நடந்து கொள்கிறார். அன்று தமிழர் மீதான புறக்கணிப்புகளும் அரச பயங்கரவாத அடக்கு முறைகளும் விடுதலைப் புலிகள் தோற்றம் பெற்றதுக்கு எவ்வாறு வழிசமைத்தனவோ, அவ்வாறாகவே இன்று நாட்டில் முற்றாக அழிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் மீண்டும் சாம்பல் மேட்டிலிருந்து வெளிக்கிளம்பினால் அந்த அதிசயத்திற்கான பிரதான பங்களிப்பிற்கான பெருமை ராஜபக்ஷ குடும்பத்தை சாருமென ஒருசில ஆய்வாளர்கள் அபிப்பிராயம் தெரிவித்துள்ளதைக் காணலாம்.
பாதுகாப்பு செயலாளர் தெரிவித்த கவலை இன்று வடக்கு கிழக்கு இராணுவமயப் படுத்தப்பட்டுள்ளதுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளவர்களை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஐபக்ஷ எவ்வாறு நோக்குகிறார் என்பதை அவர் அண்மையில் கொழும்பிலுள்ள சிறிலங்கா தளம் நிலையத்தில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறியது பின்வருமாறு: “துரதிர்ஷடவசமாக பாதுகாப்பு ஸ்தாபனமொன்று ஏன் இவ்வாறு பரந்து விரிந்ததாயிருக்க வேண்டும்? அதற்கு ஏன் இவ்வளவு (ரூ 230 பில்லியன்) பெருந்தொகையான நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும்? என்றெல்லாம் சில தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர். இவர்கள் அண்மைய வரலாற்றை மறந்து விட்டனர் போலும். ஒரு சில குழுவினராயிருந்த விடுதலைப் புலிகள் இயக்கமானது எவ்வாறு ஒரு சில வருடங்களுக்குள் உலகத்திலேயே மிகப்பெரியதும் மிக மூர்க்கத்தனமான இயக்கமாகவும் வீங்கி வளர்ந்துள்ளதை நாம் அறிவோம் என்பதாகும்.
கியூபா இலங்கை இடைவெளி கியூபாவில் வருடாந்த வரவு செலவு திட்டத்தின் மூலம் 52 நிதி ஒதுக்கீடு, சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கு வழங்கப்படுவதாக அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற கியூப புரட்சியின் 53ஆவது ஆண்டு நிறைவு தின ஞாபகார்த்த கூட்டத்தில் இலங்கைக்கான கியூப தூதுவர் நிர் ஸியா கஸ்ட்ரோ குவெறா அம்மையார் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார்.கடந்த கால யுத்தத்திற்கு பெரிதும் சார்பாகவும், தேசிய இனப்பிரச்சினைக்கு “ஜாதிக கெல உறுமய’ கட்சி போலவே அதிகாரப்பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வுக்கு எதிரான “மகாஜன எக்சத் பெரன’ கட்சியின் தலைவரும், நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சருமாகிய தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் “இடதுசாரி’ தலைவர்களாகிய அமைச்சர்கள் பேராசியர் திஸ்ஸ வித்தாரன மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இலங்கையில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ 230 பில்லியன் அரைவாசியிலும் குறைவான தொகையே சுகாதார மற்றும் கல்வி அமைச்சுகள் இரண்டுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த வகையில் குறிப்பாக சுகாதாரத்துறையானது மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
ஒரு உதாரணம் மட்டும் குறிப்பிடுகின்றேன். அதாவது கல்பிட்டி தள வைத்தியசாலையில் மருத்துவர் மற்றும் தாதிமார் பற்றாக்குறை இருப்பதாகவும், மகப்பேற்று மற்றும் சிறார்கள் வைத்திய பிரிவுகள் சிதைவடைந்த கட்டிடங்களில் இயங்கி வருவதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.கல்வித் துறையிலுள்ள குறைபாடுகள் சீரழிவுகளை அவ்வப்போது சில கட்டுரையாளர்கள் விளக்கியிருக்கின்றனர்.
கடத்தல்கள் தொடர்கதை இலங்கையில் போர் முடிந்தும் சமாதானம் சங்கடமான நிலையில் உள்ளதென அண்மையில் வெளியான “த எக்கோனமிஸ்ட்’ சஞ்சிகையின் இதழொன்றில் எடுத்துக்கூறப்பட்டிருந்தது. குறிப்பாக ஜே.வி.பி எதிர்த்தரப்பு உறுப்பினராகிய திலீப்குமார் மற்றும் குகன் ருகானந்தன் ஆகியோர் சென்ற டிசெம்பர் மாதம் கடத்தப்பட்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
சகல மனித உரிமை மீறல் ஈனங்களுக்கும் அரச ஆயுத படையினரே பொறுப்பென “நாம் இலங்கையர்’ அமைப்பின் பேச்சாளர் உதுல் பிரேமரத்ன குற்றம் சுமத்தியிருந்தார். முன்பு வடக்கு, கிழக்கு தமிழர்கள் கடத்தப்பட்டு வந்தனராயினும் இப்பொழுது சிங்கள முஸ்லிம் சமூகத்தவர்களும் விட்டு வைக்கப்படவில்லை. இவ்வாறாக அரசாங்கம் தனக்குரித்தானே அபகீர்த்தி ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது என்று பிரேமரத்ன
கூறியுள்ளார்.
“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானுங்கெடும்’ என்பது திருக்குறள். அதாவது கடிந்து அறிவுரை கூறும் வித்தகர்களின் துணையின்றி ஆள்பவன் எவனோ அவனுக்கெதிரான பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான் என்பதாகும்.
—-வ.திருநாவுக்கரசு —-

No comments:

Post a Comment