ஜெனிவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ள மேற்குலக நாடுகள் அதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெறும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் ஆதரவுடன் கொண்டு வரப்படவுள்ள இந்தத் தீர்மானம் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரசுக்கு கடந்த வெள்ளியன்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் அதிகாரபூர்வமாக தெரியப்படுத்தியிருந்தார்.
இந்தத் தீர்மானத்துக்கு இந்தியாவும் ஆதரவு வழங்குவதாகவும் உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இந்தநிலையில் இந்தியாவின் ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் மேற்குலக நாடுகள் ஈடுபட்டிருப்பதாக புதுடெல்லித் தகவல்கள் கூறுகின்றன.
இதன் ஒரு கட்டமாக நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சரும், சிறிலங்காவுக்கான சிறப்பு சமாதான தூதுவராக பணியாற்றியவருமான எரிக் சொல்ஹெய்ம் புதுடெல்லி சென்றுள்ளார்.
அவர் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பு அதிகாரிகளுடனும் பேச்சுக்களை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை அமெரிக்கா தரப்பில் சில உயர்மட்டப் பிரதிநிதிகள் புதுடெல்லி செல்லும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது. இந்தநிலையில் சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவின் ஆதரவைத் தக்க வைப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் 24ம் நாள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறுகிய பயணம் ஒன்றை மேற்கொண்டு புதுடெல்லி சென்று திரும்பியிருந்தார்.
அடுத்து அவர் ஆபிரிக்க நாடுகளுக்கான பயணத்திட்டம் ஒன்றைக் கொண்டுள்ளபோதும், அவர் மீண்டும் புதுடெல்லிக்குச் சென்று பேச்சுக்களை நடத்தும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
அதேவேளை தற்போது இந்திய-சிறிலங்கா பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்றுள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, இந்திய அதிகாரிகள் பலருடனும் ஜெனிவா தீர்மானம் குறித்து பேச்சு நடத்தியுள்ளார். அவர் மேலும் பலருடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
ஜெனிவா கூட்டத்தொடரில் மேற்குலகின் சார்பில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு இந்தியாவின் ஆதரவு கிடைக்குமானால் அது சிறிலங்காவுக்குப் பெரும் பின்னடைவாக அமையும் என்று கருதப்படுகிறது.
அதேவேளை, ஜெனிவாக் கூட்டத்தொடர் ஆரம்பிக்க இன்னமும் 4 வாரங்களே உள்ள நிலையில், போர்க்குற்ற விவகாரங்கள் தொடர்பான அமெரிக்காவின் சிறப்புத் தூதுவர் ஸ்டீபன் ராப் வரும் ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா வரத் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment