Translate

Wednesday, 15 February 2012

நெய்வேலியின் மீதான முழுஉரிமை தமிழகத்திற்கே என குரலெழுப்ப வேண்டும். நமது நெய்வேலி மின்சாரம்தான் நடுவண் மின்தொகுப்பிற்குப் போய் சேருகிறது. எனவே நேரடியாகவே முதல்வர் அவர்கள் நெய்வேலி மின்சாரத்தின் மீது உரிமை கோரவேண்டும்.


பறிபோகும் நெய்வேலி மின்சாரம்!
கா. தமிழ்வேங்கை
http://www.thenseide.com 
கூடங்குளம் அணு உலையை ஆதரிப்பவர்களில் பெரும்பான்மையினரது கருத்து அணு உலையை இயக்கினால் தமிழ்நாட்டிற்கு மின் பற்றாக்குறை நீங்கும் என்பதாகும்.


அணுஉலையை ஆதரிப்பவர்களின் கூற்று சரியா? அதாவது தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை உண்மையா? என்பதே இக்கட்டுரையின் நோக்கம். இதற்கு வேறெங்கும் சான்றுதேடி அலையாமல் நெய்வேலியில் உற்பத்தியாகும் அனல் மின்சாரத்தில் தமிழகத்தின் பங்கு என்னவென்பது தெரிந்தால் உண்மை வெளிச்சத்திற்கு வரும்.

நடுவண் அரசு அனல்மின் நிலையமானாலும் அ÷மின்நிலையமானாலும் எந்த மாநிலத்தில் அமைக்கிறதோ அம்மாநிலத்திற்கு உற்பத்தியாகும் மின்சாரத்தில் 30% மட்டும்தான். இதை எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சாரம் 30%தான். அப்படியானாலும் மீதம் 70% மின்சாரம் எங்கே? யாருக்கு?

ஆந்திராவிற்கு 19% கர்நாடகத்திற்கு 14% கேரளாவிற்கு 10% புதுச்சேரிக்கு 5%, என்.எல்.சி. நிர்வாகத்திற்கு 7%, நடுவண் மின்தொகுப்பிற்கு 15% என வழங்கப்படுகிறது. உண்மையில் தமிழர்களின் ஏமாளித்தனத்தால் பறிபோகிறது என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்.

பாலாற்றின் உரிமையைத் தடுக்கும் ஆந்திராவிற்கும், காவிரியின் உரிமை மீது தடைபோடும் கர்நாடகத்திற்கும், முல்லைப்பெரியாற்றில் மல்லுகட்டும் கேரளத்திற்கும் தமிழ்நாட்டிலிருந்து வருடத்தின் எல்லா நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. காரணம் நெய்வேலி தமிழனுக்குச் சொந்தமில்லை. தில்லிக்குச் சொந்தம்.

தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் 30% மின்சாரம்கூட நமக்கு சும்மா கிடைக்கவில்லை. 1 யூனிட்ட மின்சாரம் ரூ.1.82 கொடுத்துத்தான் நடுவண் அரசிடமிருந்து தமிழக அரசு பெறுகிறது. இதைவிட அதிக விலைக்கு பிற மாநிலங்களுக்கு மின்சாரத்தை விற்று காசு பார்க்கிறது நடுவண் அரசு.

வெட்டியெடுக்கப்படும் நிலக்கரிக்கு ராயல்டி என்ற பெயரில் 1 டன்னுக்கு ரூ.45 மட்டுமே நடுவண் அரசால் தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது. 1 டன் நிலக்கரியை எரித்து அதில் 1 மெகாவாட் அதாவது 1000 யூனிட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. அப்படியானால் 1820 ரூபாய் லாபமாகப் பெறுகிறது நடுவண் அரசு. (1.82 1000 = 1820).

4 டன் நிலக்கரியை எரிக்கும் போது 1 டன் சாம்பல் கிடைக்கிறது. இந்தச் சாம்பலையும் விற்று காசு பார்க்கிறது என்.எல்.சி. நிர்வாகம். தமிழ்நாட்டில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வங்கிக் கடனுதவியுடன் ஹாலோ பிரிக்ஸ் என்றழைக்கப்படும் நிலக்கரி சாம்பலைக் கொண்டு தயாரிக்கப்படும் கற்களை (செங்கல் போல் வீடு கட்ட பயன்படும்) செய்து பிழைத்து வந்தனர். ஆனால் இன்று நிலக்கரிச் சாம்பல் சிமெண்ட் கம்பெனிகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. செயல்படாத நிறுவனம்கூட போலியாக செயல்படுவதாகக்கூறி சாம்பலை மொத்தமாக வாங்கிய பிறகு கூடுதல் லாபம் வைத்து ஹலோ பிரிக்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்கின்றனர்.

அடுப்புக்கரியின் விற்பனை விலையை விட குறைவாக. ஒரு டன் நிலக்கரிக்கு தமிழக அரசுக்கு பணம் கொடுத்து விட்டு இந்நிலக்கரியின் மூலம் பல்லாயிரம் கோடிக்கு மின்உற்பத்தியை செய்வதோடு நிலக்கரிச் சாம்பலையும் பலநூறு கோடிக்கு விற்றுக் காசு பார்க்கிறது நடுவண் அரசு.

தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தை நடுவண் அரசிடமிருந்து காசுகொடுத்து வாங்கி தமிழ்நாட்டிலுள்ள பன்னாட்டு, வடநாட்டு தொழில் நிறுவனங்களுக்கு மானியத்துடன் தடையற்ற மின்சாரத்தை வழங்குவதால்தான் ரூ.42 ஆயிரம் கோடி தமிழ்நாடு மின்வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2011ல் நெய்வேலியில் உற்பத்தியான மொத்த மின்அளவு 19,240 மில்லியன் யூனிட் ஆகும். (ஒரு மில்லியன் என்பது 10 இலட்சம் யூனிட்டுகளாகும்) இதன்படி விழுக்காட்டளவில் இம்மின்சாரத்தை பிரித்தால் தமிழகத்திற்கு 30% என்ற அளவில் 5772 மி.யூனிட் மட்டுமே கிடைக்கிறது. ஆந்திராவிற்கு 3655.6 மி.யூனிட் கர்நாடகாவிற்கு 2693.6 மி.யூனிட் கேரளாவிற்கு 1924 மி.யூனிட் புதுவைக்கு 962 மி.யூனிட், என்.எல்.சி.க்கு 1346.8 மி.யூனிட், நடுவண் மின் தொகுப்பிற்கு 2886 மி.யூனிட் போய் சேருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் இப்படித்தான் அண்டை மாநிலங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறது.

தமிழர்களின் மற்றொரு தாயகமான புதுச்சேரிக்கும் மின்உற்பத்திக்காக மின்சாரத்தை செலவிடும் என்.எல்.சி. நிறுவனத்திற்குமான மின்சாரம்போக நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் பெரும்பகுதி அண்டை மாநிலங்களுக்கு வழங்கப்படுவதால்தான் தமிழகம் மின்பற்றாக்குறை மாநிலமாகத் திகழ்கிறது. புதுச்சேரிக்கும், என்.எல்.சி.க்கும் போக கடந்தாண்டு உற்பத்தியான மின்சாரத்தில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டவை 8273.3 மி.யூனிட்டுகளாகும், அதாவது 43% ஆகும். இதனால்தான் தமிழகம் செயற்கையான மின்பற்றாக்குறை மாநிலமாகத் திகழ்கிறது.

கூடங்குளம் அணுஉலையை ஆதரிக்கும் பலரும் தமிழகம் மின்பற்றாக்குறை மாநிலமாக இருக்கும்போது, மின்உற்பத்திக்காக அமைக்கப்பட்டு வரும் கூடங்குளம் திட்டத்தை எதிர்ப்பது நியாயமா?என்று கூறிவருகின்றனர். தமிழ்நாட்டின் கனிமவளத்தையும், தமிழர்களின் உழைப்பையும் சுரண்டி, இப்படி அண்டை மாநிலத்தவர்களுக்கு மின்சாரம் கொடுப்பதால்தான், தமிழகம் செயற்கையாக இருண்டு கிடக்கிறது என்பதை தெரியாததால் கூடங்குளம் திட்டத்தினை இவர்கள் ஆதரிக்கிறார்கள்.

உண்மையிலேயே மின் பற்றாக்குறை மாநிலமாகத் திகழும் ஆந்திரா, கர்நாடகா, கேரளம் போன்ற மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் அமையவிருந்த அணுஉலையை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளியதால் தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் அணுஉலைகள் கட்டப்பட்டன. தடையில்லாமல் தமிழகத்தின் நெய்வேலியிலிருந்து மின்சாரம் கிடைக்கும்போது நமக்கு எதற்கு அணுஉலைகள் என்று அவர்கள் முடிவெடுத்ததில் தவறேதும் இல்லை. ஆனால் உற்பத்தியாகும் மின்சாரத்தை இழந்ததோடு மின்பற்றாக்குறையைப் போக்க அணுஉலைகள் தான் சரியானது என்று தேர்ந்தெடுக்கும் நம்மைப்பார்த்து தெலுங்கனும், கன்னடனும், மலையாளியும் சிரிக்க மாட்டார்களா?

கூடங்குளம் அணுஉலை இயங்கினாலும் அதன் பெரும்பகுதி மின்சாரம் நமக்கு இல்லை என்பதுதான் உண்மை.

இராமேசுவரத்திலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு இடைப்பட்ட 50 கி.மீ. தொலைவு கடற்பகுதியின் அடியில் கேபிள் மின் கம்பிகள் மூலம் இலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தினை மத்திய அரசின் நிறுவனமான பவர்கிரிட் கார்ப்பரேசன் மூலம் ரூ.4500 கோடி செலவு செய்து அத்திட்டம் 2014இல் நிறைவடையவுள்ளது.

தங்கள் மாநிலத்தில் அணுஉலை வேண்டாம் என்று துரத்தியடித்த மலையாளிகள் கூடங்குளம் அணுஉலையிலிருந்து மின்சாரம் பெறுவது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். திருவனந்தபுரம் அணு ஆற்றல் மேலாண்மை மய்ய இயக்குநர் தரேசன் உன்னிதரன், கேரள அரசாங்கம் கூடங்குளம் பகுதியில் கேரளாவிற்கென இன்னும் ஆயிரம் மெகாவாட் திறனுள்ள 2 அணு உலைகளைக் கட்ட பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். தமிழ்நாடு இடம் கொடுப்பதால் 400 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கும், 1600 மெகாவாட் மின்சாரம் கேரளாவிற்கும் வரும்படி செய்யலாம். ஆனால் இதற்கு பலமான அழுத்தம் கேரளாவிலிருந்து கொடுக்கப்பட வேண்டும் (இத்தகவல் கேரள அரசின் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது) எனக் கூறுகிறார்.

ஈழத்தில் 1 இலட்சம் தமிழர்களை கொன்ற சிங்களவனுக்கும், துணைபோன மலையாளிகளுக்கும் கூடங்குளம் மின்சாரம் வழங்கப்பட இருக்கின்றது என்பதற்கு இந்த இரு எடுத்துக்காட்டுகளே போதுமானதாகும். கூடங்குளம் அணுஉலை செயல்படத் தொடங்கினால் 50% தமிழகத்திற்கு கிடைக்கும் என்று மன்மோகன்சிங் கூறும் ரகசியமும் இதுதான். (மீதி. 50% கேரளாவிற்கும், இலங்கைக்கும்)

நிலைமை இவ்வாறிருக்க கடலூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் தனியார் அனல்மின் நிலையங்களுக்கு கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அனுமதி வழங்கப்பட்டு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் மின்உற்பத்தியைத் தொடங்கவுள்ளன. இதில் ஒரு விழுக்காடு மின்சாரம் கூட தமிழகத்திற்குக் கிடையாது என்பதுதான் அதிர்ச்சியான செய்தியாகும்.

நாகை மாவட்டத்தில் 11 இடங்களில் தனியார் நிறுவனங்களால் 11,365 மெகாவாட் திறன்கொண்ட அனல் மின்நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. நிலவளத்தையும், கடல் வளத்தையும் மாசுபடுத்தி பெரும் சூழல்சீர்கேட்டை விளைவிக்கும் இந்த அனல்மின் நிலையங்களால் தமிழகம் கண்ட - காணப்போகும் பயன்பாடு என்ன?

தமிழ்நாட்டின் மின்பற்றாக்குறையைப் போக்க நமக்கு கல்பாக்கம், கூடங்குளம் போன்ற அணு உலைகளும் வேண்டாம். புதியதாக எந்த அனல் மின்நிலையங்களும் வேண்டாம். நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரமே நமக்குப் போதுமானதாகும். கூடங்குளத்தில் உற்பத்தியாகப்போகும் மின்சாரத்தில் 50% கொடுப்போம் என்று கூறும் மன்மோகன்சிங் நெய்வேலி மின்சாரத்தில் 50% கொடுத்தாலே தமிழகத்தின் மின்பற்றாக்குறையைப் போக்கிட முடியுமே. பிறகெதற்கு அணுஉலைகள், அனல் மின்நிலையங்கள்?

கருணாநிதியைப் போல டெல்லியில் சரணாகதி அடையாமல் தமிழகத்தின் உரிமைக்காக துணிவுடன் குரல் எழுப்பும் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுகிறோம். அதே வேளையில் தமிழக மின் பற்றாக்குறையைப் போக்க நடுவண் மின்தொகுப்பிலிருந்து கூடுதலாக 1000 மெகாவாட் மின்சாரம் கேட்பதற்கு பதிலாக, நெய்வேலியின் மீதான முழுஉரிமை தமிழகத்திற்கே என குரலெழுப்ப வேண்டும். நமது நெய்வேலி மின்சாரம்தான் நடுவண் மின்தொகுப்பிற்குப் போய் சேருகிறது. எனவே நேரடியாகவே முதல்வர் அவர்கள் நெய்வேலி மின்சாரத்தின் மீது உரிமை கோரவேண்டும்.

நெய்வேலி அனல்மின்நிலையம் நடுவணரசின் கீழ் இயங்குவதால் இங்கு வெளி மாநிலத்தவர்களின் ஆதிக்கம் பெருகி வருகிறது. சுமார் 20 ஆயிரம் ஊழியர்களில் உயர்பதவி முழுக்க வடமாநிலத்தவர்களுக்கும், மலையாளிகளுக்கும் சொந்தமாகி விட்டன. 8 ஆயிரம் வெளிமாநில ஊழியர்களில் மலையாளிகள் மட்டும் 3000 பேர் உள்ளனர். தமிழக அரசின்கீழ் நெய்வேலி அனல் மின்நிலையம் இருந்தால், தமிழர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும். அண்டை மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கும் உரிமை தமிழக அரசிடம் இருக்குமானால் ஆற்றுநீரின் மீது அடாவடி செய்யும் கேரள, கர்நாடக, ஆந்திர அரசுகள் பணியும்.

முல்லைப் பெரியாறு அணையின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் அது உற்பத்தியாகும் தமிழரின் தாயகப்பகுதியான கேரளத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தை மீண்டும் தமிழகத்துடன் இணைப்பது ஒன்றே தீர்வாகும் என்று முல்லைப்பெரியாறு பாசன தமிழர்கள் குரலெழுப்புகிறார்கள். அதுபோல் கூடங்குளம் அணுஉலையை மூடுவோம் என்ற முழக்கத்தோடு நெய்வேலியை தமிழ்நாட்டடரசின், தமிழர்களின் உரிமையாக மாற்றுவோம் என்ற புதிய முழக்கத்தை யும் அதை நோக்கிய செயல்திட்டத்தையும் முன்னெடுப்பதொன்றே இதற்குத் தீர்வாகும்.

No comments:

Post a Comment