Translate

Wednesday, 29 February 2012

ஐ.நா. மனித உரிமை ஆணைய ஓட்டெடுப்பு: இலங்கையை இந்தியா ஆதரிக்கக் கூடாது- கருணாநிதி

சென்னை: இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கை அரசை இந்தியா ஆதரிக்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை இனியும் அனுமதிக்கக் கூடாது எனும் நோக்கில், இலங்கை மீது போர்க் குற்ற விசாரணைக்கு ஆணையிட வேண்டுமென்று வலியுறுத்திடும் தீர்மானம் ஒன்றை 27-2-2012 அன்று தொடங்கிய ஐ.நா. மனித உரிமை ஆணையக்கூட்டத்தில், அமெரிக்கா, பிரான்ஸ், நார்வே உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்துள்ளதாகவும்; இந்தத் தீர்மானத்தின் மீது நடைபெறவிருக்கும் வாக்கெடுப்பில் இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க கருத்து அறிவித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து 27-4-2011 அன்று எனது தலைமையில் நடைபெற்ற கழக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்திலேயே முதல் தீர்மானமாக பின்வருமாறு நிறைவேற்றப்பட்டது என்பதை நினைவுகூர்ந்திட விரும்புகிறேன்:

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் வாயிலாக அமைக்கப்பட்ட இந்தோனேஷிய அரசின் தலைமை வழக்கறிஞர் தலைமையிலான விசாரணைக் குழு, இலங்கைப் படையினர் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை உறுதி செய்திருக்கிறது. அரசை எதிர்க்கின்றவர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதற்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியுள்ளது.

இந்தக் குழுவின் அறிக்கை ஏப்ரல் 25ம் தேதியன்று நியூயார்க்கில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் 40,000க்கும் அதிகமான அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றதாக கூறப்பட்டுள்ளது. போர்க் கைதிகளை இலங்கை ராணுவம் கொடூரமாகச் சுட்டுக் கொன்றுள்ளது என்றும் வீராங்கனைகள் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்றும் அந்த அறிக்கையிலே கூறப்பட்டுள்ளது.

இலங்கைப் போர்க் குற்றங்கள் பற்றி ஐ.நா. குழு பரிந்துரைத்துள்ளவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், 'போர் என்றால் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்படுவது சகஜம்தான்' என்று இதயமற்றோர் பாணியில் விமர்சனம் செய்யாமல், இந்தக் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் என்றும் இந்த உயர்நிலை செயல் திட்டக்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்த நிலைப்பாட்டினை மத்திய அரசுக்கு மீண்டும் நினைவு படுத்துவதோடு, ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும்போது, எக்காரணம் கொண்டும் இந்திய அரசு இலங்கை அரசை ஆதரித்திடக்கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறிட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

ஒருவேளை இலங்கையை இந்தியா ஆதரித்தால், மத்திய அரசுக்குத் தரும் ஆதரவை திமுக வாபஸ் பெறுமா.. இதையும் கருணாநிதி சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

No comments:

Post a Comment