Translate

Friday, 24 February 2012

அரசாங்கம் உலகின் நம்பிக்கையை பெற தவறி விட்டது கடைசி ஆயுதம் கற்றுக்கொண்ட ஆணைக்குழு என்கிறார் மனோ கணேசன்


ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள சவால்கள் தொடர்பில் அரசாங்கம் எதிர்கட்சிகளின் நம்பிக்கையை பெற தவறி விட்டது. மறுபக்கத்தில் அரசாங்கத்தின் சில பங்காளி கட்சிகள் மனித உரிமை விவகாரம் முழுவதையும், மேற்கத்தைய நாடுகளின் சதி என்று குரல் எழுப்ப தொடங்கிவிட்டனர்.
 அரசாங்கத்திற்கு இருக்கும் கடைசி ஆயுதம், கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் அறிக்கைதான். ஆனால் இந்த உள்ளூர் தீவிரவாதிகளுக்கு பயந்து அந்த அறிக்கையைகூட ஐநா மனித  உரிமை ஆணைக்குழுவில் சமர்பிக்க முடியாது என அரசாங்கம் அடம் பிடிக்கிறது. இந்த காரணங்களால் இன்று அரசாங்கம் உலகத்தின் நம்பிக்கையை பெற தவறி விட்டது என ஜனநாய மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தொடர் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
ஐநா செயலாளரின் அறிக்கைக்கு பதிலடியாக கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவை இந்த அரசாங்கம்தான்  நியமித்தது. இன்று அரசாங்கத்தில் இருக்கும் சில தீவிரவாதிகளுக்கு இந்த உண்மை மறந்துவிட்டது. இந்த ஆணைக்குழுவையும், அதன் அறிக்கையையும் எதிர்கட்சிகள் நியமித்து தயாரித்ததைபோல் இவர்கள் இன்று கூப்பாடு போடுகிறார்கள். அதேபோல் ஐநா மனித உரிமை ஆணைக்குழுவை புலம் பெயந்த தமிழர்கள் நடத்தி வருவதை போல் சிங்கள மக்களுக்கு காட்டுவதற்கும்  இவர்கள் முயல்கிறார்கள்.
அரசாங்கத்திற்கு இருக்கும் கடைசி ஆயுதம் இந்த கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் அறிக்கைதான். ஆனால் இந்த உள்ளூர் தீவிரவாதிகளுக்கு பயந்து அந்த அறிக்கையைகூட ஐநா மனித  உரிமை ஆணைக்குழுவில் சமர்பிக்க முடியாது என அரசாங்கம் அடம் பிடிக்கிறது.
கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு அறிக்கையை சமர்பித்து அதில் சொல்லப்பட்டுள்ள சிபாரிசுகளை  குறிப்பிட்ட திட்டவட்டமான காலவரையறைக்குள் நடைமுறைபடுத்துகிறோம் என ஐநா மனித  உரிமை ஆணைக்குழுவிற்கு உத்தரவாதம் அளிப்பதை  தவிர இன்று இந்த அரசாங்கத்திற்கு வேறு வழி கிடையாது. ஆனால் ஐநா மனித  உரிமை ஆணைக்குழுவிற்கு காலவரையறைக்குள் நிறைவேற்றுகின்றோம் என உத்தரவாதம் அளிப்பது என்பது இலங்கையிலே தமிழ் கட்சிகளுக்கு உத்தரவாதம் அளிப்பது என்பது போல் இல்லை என்பது அடிப்படை உண்மை. கையொப்பம் இட்டுவிட்டு அதை பிறகு கிழித்து போட முடியாது. உத்தரவாதம் அளித்துவிட்டால், பிறகு குறிப்பிட்ட காலவரையறை முடிந்ததும் அடுத்த நாளே உலகம் வந்து கதவை தட்டும். அது மட்டும் அல்ல, நடைமுறையாக்கப்படும் என்று சொல்லப்பட்ட காலம் முழுக்க ஐநா சபை அதை கண்காணிக்கும். 
இவற்றை அறிந்துதானோ, என்னவோ அந்த அறிக்கையை ஐநா மனித  உரிமை ஆணைக்குழுவில் சமர்பிக்க அரசாங்கம் பின்னடிக்கின்றது. அது தொடர்பில் காலவரையறையுடன்கூடிய உத்தரவாதம் அளிக்கவும் தயங்குகிறது.
கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு அறிக்கையில் நாம் எதிர்பார்க்கும் மனித உரிமைகள் தொடர்பிலான அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடையாது. சுதந்திர காவலன் என்ற மனித உரிமை விருதை பெற்றவன் என்ற முறையில் நான் இதை மிகவும் பொறுப்புடன் கூறுகிறேன். ஆனால் உத்தரவாதம் அளிப்பதற்கு முடியாமல் அரசாங்கத்தை தர்மசங்கடத்திற்குள் தள்ளியுள்ள சில விடயங்கள் தொடர்பில் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கின்றது. 
பொதுமக்களுக்கு மரணம், காயம் ஏற்படுத்தபட்டமை, சரண் அடைந்ததன் பின்னர் காணாமல் போனமை தொடர்பில் ராணுவத்தின் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், சனல்  நான்கு தொலைக்காட்சி தொடர்,    நாடு முழுக்க காணாமல் போனோர் விவகாரம் ஆகியவை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டோர்பற்றிய விபரங்கள் குடும்ப அங்கத்தவர்களுக்கு வழங்க பட வேண்டும் எனவும், அரசு ஆதரவு ஆயுதகுழுக்கள் கலைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட வேண்டும் எனவும்  கூறப்பட்டுள்ளது. 
காணி பற்றிய கொள்கைமூலம் மாகாணங்களின் குடிபரம்பல் மாற்றி அமைக்கப்பட கூடாது எனவும்,  அனைத்து அரசியல் கட்சிகளும், அதிகாரபரவலாக்கள் மூலம்  இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் எனவும், வட-கிழக்கில் சிவில் நடவடிக்கைகளில் ராணுவ தலையீடு குறைக்கப்படவேண்டும் எனவும்  கூறப்பட்டுள்ளது.
தேசிய நல்லிணக்கம் தொடர்பான நடவடிக்கைகள் இந்திய வம்சாவளி மக்களின் தேவைகள் பற்றியும், தோட்ட தொழிலாளர்களின் சுகாதாரம், கல்வி, வீடமைப்பு ஆகியவை தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும்  கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment