Translate

Thursday, 2 February 2012

சிறைக்கைதிகள் மீதான இராணுவத்தின் துப்பாக்கிப் பிரயோகம்:

சிறைக்கைதிகள் மீதான இராணுவத்தின் துப்பாக்கிப் பிரயோகம்: அடக்குமுறை, மனிதாபிமானமற்ற அரசின் செயலே! -த சோதிலிங்கம்
இலங்கையில் சிறப்பான அரசாட்சி நடைபெற வேண்டுமாயின் பொலிசாரின் இராணுவத்தினரின் சிறைச்சாலை அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற செயலை அரசு கட்டுப்படுத்த வேண்டும். அரசு பொதுமக்கள் மீதான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். சிவில் சமூக ஜனநாயக நடைமுறைகளை பலப்படுத்த வேண்டுமே தவிர இராணுவத்தினரின் பொலீசாரின் அடக்கு முறைகளை பலப்படுத்துவது தவறானதே!



1994ம் ஆண்டு வவுனியா ஜோசப் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த திருகோணமலையை சேர்ந்த தமிழ் சந்தேக நபர்கள், இராணுவ பொலிசாரின் முன்னிலையில், குடிபோதையில் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட 7பேர்கள் பற்றியோ அதன் பின்னர் தொடர்ச்சியாக இராணுவ பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட தமிழர்கள் பற்றியோ 1983ல் வெலிக்கடையில் தடுத்து வைக்கப்பட்டு கொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் 53 பேரின் கொலைகள் பற்றியோ (இது போன்று பல தாக்குதல்கள் தமிழ் அரசியல் கைதிகள் மீது நடாத்தப்பட்டிருந்தது) அரசும் அதன் நிர்வாகங்களும் என்ன பாடங்களை பெற்றுக்கொண்டன? என்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன? என்பன சந்தேகத்துக்கிடமாகவே உள்ளது.
கடந்த கிழமை மகசீன் சிறைச்சாலையில் ஏற்பட்ட குழப்பங்களை அடுத்து அங்கு இராணுவம் குவிக்கப்பட்டும் சிறையினுள் இராணுவம் அனுப்பப்பட்டு சிறைக்கைதிகளை அதுவும் ரிமாண்ட் கைதிகள் (இன்னமும் குற்றவாளியா இல்லையா என நீதிமன்றில் தீர்மானிக்கப்படாத கைதிகள்) மீதான துப்பாக்கிப் பிரயோகம் சாதாரண மக்களின் மீதான இராணுவத்தினரின் வன்முறைப் பிரயோகமேயாகும். அதிலும் கைது செய்யப்பட்டு நிராயுதபாணிகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் மீதான, இராணுவத்தினரின் துப்பாக்கிப் பிரயோகமும் கொலையும், இன்றுவரையில் இலங்கையில் சிவில் நிர்வாக ஜனநாயக நடைமுறைகள் பாராமுகமாக இருப்பதையே காட்டுகின்றது.

இவர்கள் சிங்கள சிறைக்கைதிகள் என்றும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் தவறு செய்தவர்களே என்ற ஆரோக்கியமற்ற பார்வைகளும் இந்த கைதிகள் மீதான கண்டனத்தை, அரசுக்கு தெரிவிக்க தவறியுள்ள காரணமாகும்.

இதே சிறைச்சாலைகளில், ரிமாண்ட் மற்றும் குற்றங்களுக்காக தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட வரலாற்றில், சிறைச்சாலையில் ஏற்பட்ட நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிராகவும் அரசியல் காரணங்களுக்காகவும் எழும் போராட்டங்களின் போது பல தடவைகள் தமிழ் அரசியல் கைதிகள் மீது தாக்குதல்கள் ஏற்படுத்தப் பட்டிருந்தன. அதில் ஒரு தடவை 1987 ஏப்ரல் 27ல், காவலில் நின்ற இராணுவத்தினர் தமிழ் அரசியல் கைதிகள் மீது சில தப்பாக்கி வேட்டுக்களை தீர்த்திருந்தனர். அன்றும் தற்போது செய்தது போன்று, தமிழ் அரசியல் கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட இடங்களில் இன்றுள்ள நிலைமைகள் போன்று தமது இட வசதிகள் குடிநீர்வசதிகள் போன்றவற்றிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் சிறையினுள்ளே போராடியிருந்தனர். அவற்றில் பங்காளியாகவும் நான் இருந்துள்ளேன்.
கடந்த கிழமை மகசீன் சிறைச்சாலையில் நடைபெற்ற வன்செயல்கள் காரணமாக பின்னர் களுத்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் தமது வசதிகள், பாதுகாப்பு குறித்து அச்சம் வெளியிட்டு அவற்றிக்காகப் போராடுகின்றனர் என்பது வெளிவரும் செய்திகளாக உள்ளன. இவற்றிக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் குரல்கொடுக்க வேண்டும் என்று கோரியும் உள்ளனர்.
மேலும் இச்சிறைச்சாலையில் இடப்பற்றாக்குறை நிலவுவதாகவும், குடிநீர் மற்றும் மலசல கூட வசதிகள் போன்றவற்றிலும் போதிய வசதிகள் இல்லை எனவும் தம்மை பாதுகாப்பான சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும் எனவும் கேட்டுள்ளதுடன், சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் தரவேண்டும் எனவும், இதற்காக பொறுப்பு வாய்ந்த ஒரு அதிகாரியை அரசாங்கம் நியமிக்க வேண்டும் குறிப்பிட்டு, யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களாகியும் பாரிய குற்றங்களில் தொடர்பில்லாத கைதிகளின் வழக்குகளையும் விரைவாக முடிப்பதற்கு சிறப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று கோரியும் மகஜர் வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் அரச நிர்வாகங்களிலும் பொலீஸ் பாதுகாப்பு நடைமுறைகளிலும் அவை மக்கள் விரோத பண்புகளை கொண்டிருக்கின்றன. கடந்த சில வருடங்களில், இலங்கை ஊடகங்களில் பிரபல்யமாக பேசப்பட்ட கதிர்காம யாத்திரிகர்கள் மீதான தாக்குதல்களும் அதன்பாணியும், காலிமுகத்திடலில் மனோ நோயாளி மீதான தாக்குதலும் கொலையும் நடைபெற்ற பாணியும், பத்திரிகையாளர்கள் மீதான வன்முறைகளும் கொலைகளும் முக்கியமாக மக்கள் மனதில் பதிந்துள்ள விடயங்களாகும்.
ஜனநாயக நடைமுறையில் கைதிகள் மீதான தாக்குதல்கள் அர்த்தம் அற்றவைகளாகவும் மனித உரிமைகளை மீறும் செயலாகவே கருத்தப்படும். கைதிகள் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சந்தர்ப்பங்களில் அவர்கள் மீதான தாக்குதல் அதுவும் சிறையில் ஒரு சீரற்ற சூழ்நிலை உருவாகிய அடுத்த மணித்தியாலங்களுக்குள் இராணுவத்தினரை சிறையினுள் அனுப்பி கைதிகள் மீது தாக்குதல் நடாத்தியது, ஜனநாயக நடைமுறையில் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். அவர்களின் ஆர்ப்பாட்ட நிலைமைகளை ஒரு தடவை அதன் உள்நோக்கம் என்ன? அவற்றை பரிசீலிப்பதன் மூலம் அவற்றை கையாளாமல் சிவில் ஜனநாயக நடைமுறைகளால் சிறைக்கைதிகளின் பிரச்சினைக்கு பரிகாரம் காண தவறியமை, சமூகத்தில் மக்களின் மனோ நிலையில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதை அரசு சிந்திக்க தவறிவிட்டது.

இன்றைய அரசியல் நிலைப்பாட்டில் மகசீன் சிறைக் கைதிகள் மீதான தாக்குதலானது புலிகள் மீதான பாரிய அளவிலான தாக்குதலின், அதனால் கிடைத்த வெற்றியின் எதிரோலியாகவுமே பலரை பார்க்கத் தூண்டுகின்றது. இராணுவ நடவடிக்கைகளை இராணுவ சூழ்நிலையிலும் ஆயுதபாணிகளிடமுமே அரசு வெளிக்காட்டியிருக்க வேண்டும். அப்பாவி நிரபராதிகள் மீதும், கைது செய்து தடுப்புக் காவலில் உள்ளவர்களிடம் இப்படியான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது இராணுவத்தினர்க்கும் அரசுக்கும் அவமானகரமான செயலாகும். சிறைச்சாலைகள், குற்றவாளிகளை மீண்டும் குற்றம் செய்யாமலும் குற்றவாளிகளை சமூகத்தில் பிரயோசனமான முன்னேற்றகரமான நடத்தையில் இயங்கவைக்க வேண்டும். கடந்த வாரம் நடைபெற்றது போன்ற இராணுவத்தின் தாக்குதல்கள் எதிர்விளைவுகளையே உருவாக்கும். சிறைச்சாலையிலிருந்து வெளிவருபவர்கள் பழிவாங்குதலை எங்கேயோ வெளிப்படுத்துவர்.
இலங்கை சிறைச்சாலைகள் கைதிகளை சமூகத்தில் மீண்டும் இணையும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை மாறாக கைதிகள் சிறையில் இருந்தவர் என்ற பழியுடன் வாழவே நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இவற்றுடன் கைதிகளாக இருந்தபோது இராணுவத்தினர் உட்புகுந்து சுட்டுத்தள்ளினர் என்ற மனோநிலையுடன் அல்லது வரலாற்றுடன் வாழவும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகள், புனர்வாழ்வு அழிக்கப்பட்டு வெளியேறியவர்கள் மீதான நிர்ப்பந்தங்கள் அவர்களை வாழ்வில் எந்தவித முன்னேற்றத்திலும் ஈடுபடாமலே வைத்திருக்கிறது. இது புனர்வாழ்வு என்பதன் அர்த்தத்தையே அவமானப்படுத்துகின்றது. புலிகள் இல்லை என்பது தெளிவாகியும், புலிகள் என்ற மாயையை வைத்து மக்களை அச்சுறுத்தும் பண்பில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்றே பலரும் விரும்புகின்றனர்.

பொலிஸ், இராணுவம், அரசு எடுத்த எடுப்பிலேயே வன்முறையை பாவிப்பது, துப்பாக்கியை பாவிப்பது தவறு. சர்வதேச அனுபவங்களை அரசும் அரச கட்டமைப்புக்களும் உள்வாங்க வேண்டும். அவற்றின் அனுபவங்களை மக்களுக்கு கொடுப்பதன் மூலமே நல்ல நீதியான ஆட்சியினை உறுதிப்படுத்த முடியும். கடந்த வார இலங்கை சிறைச்சாலைகள் அனுபவத்தின் மூலம் இலங்கையை சர்வதேச சமூகம் தவறாகவே புரிந்து கொள்ளும் சந்தர்ப்பங்களே உண்டு.

தமிழர்களின் போராட்ட குணாம்சத்தினை அழிக்க கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட சட்டதிட்டங்கள், தமிழர்கள் மீதான உயர் நிலைக்கு இலங்கை அரசை கொண்டு சென்றிருந்தது. இதன் பாதிப்புக்களை இலங்கை அரசும் எதிர்கொண்டுள்ளது. ஆனால் இந்த படிப்பினைகளுக்கு பின்னால் இலங்கையின் பெரும்பான்மை மக்களின் மீது இந்த சட்டதிட்டங்களை பாவிக்க தொடங்கியிருப்பதன் அறிகுறிகளில், பயங்கரவாத சட்டத்தின் கீழ் சிங்கள மக்கள் கைது செய்யப்படுவதற்கு மேலாக இன்று சிறைக்கைதிகளை இராணுவம் உட்சென்று தாக்கியது வரையில் வெளிக்காட்டி நிற்கின்றது.

மாறிமாறி ஆட்சிக்கு வரும் முக்கிய பிரதான இரு கட்சிகளும் இந்த மாதிரியான வன்முறை மனநோய்க்குள் தம்மை இட்டுசெல்வது ஆபத்தான ஒரு புதிய அத்தியாயத்தை இலங்கை எதிர்நோக்குவதாகவே பலர் புரிந்து கொள்கின்ற
னர்.

No comments:

Post a Comment