Translate

Thursday, 2 February 2012

தமிழீழ அமைப்புக்களே! வசையைக் கைவிட்டு பணியில் ஈடுபடுங்கள் - ஐக்கியம் தானே வரும்

எம்முன் உள்ள வரலாற்றுப் பணி என்ன என்பதை முதலில் தெரிவு செய்து அதனைச் செயற்படுத்துவதன் மூலம் நாம் வரலாற்றை முன்னேற்ற வேண்டுமே தவிர எமக்குள் நாம் குழுச்சண்டை போடுவதில் காலத்தை வீணடித்து வரலாற்றின் எதிர்ப்பக்கம் போய்விடக் கூடாது. விடுதலைக்கான செயலில் ஈடுபடுவதன் மூலம் செயலால் அனைவரும் இணைய முடியும். சரியான செயலை வரலாறு ஏற்கும். பிழையான செயலை வரலாறு புறந்தள்ளும்.


நாம் இப்போது வரலாற்றின் அதளபாளத்தில் வீழ்ந்து கிடக்கிறோம். மேல்நோக்கி ஏற முற்படுவதற்கு பதிலாக ஒருவரின் காலை ஒருவர் இழுத்து வீழ்த்தும் பணியில் எம்மை நாம் ஈடுபடுத்துகிறோமா என்ற அச்சமே இப்போது மேலெழுந்துள்ளது.

இப்போது எம்மத்தியில் பல்வேறு அணிகளும், பிரிவுகளும் உள்ளன. இவை அனைவரையும் ஒன்று சேருங்கள் என்று இப்போது குரலெழுப்பினால் அதை யாரும் பொருட்படுத்தி செயற்படக் கூடிய யதார்த்தம் தெரியவில்லை. ஆதலால் பின்வருமாறுதான் கோரமுடியும். ஒவ்வொரு அணியினரும், பிரிவினரும் முதலில் விடுதலைக்கான தத்தமது வேலைத்திட்டத்தை தயாரிக்கட்டும். அந்த வேலைத்திட்டத்தின்படி செயற்படட்டும். அப்போது ஒரு நடைமுறை யதார்த்தம் தோன்றும். அந்த நடைமுறையில் சரியானவர்கள் ஒரு கூட்டணியாக இணைய வாய்ப்பேற்படும். பிழையானவர்கள் இயல்பாகவே ஓரங்கட்டப்பட்டு தோல்வியில் முடிவர். ஆதலால் ஈழத்தமிழரின் விடுதலையின் மீது ஆர்வம் கொண்ட அதன் பெயரால் செயற்பட விரும்புகின்ற அனைத்து பிரிவினரையும் பார்த்து அன்பாகவும், மதிப்புடனும் கண்ணியமாகவும் பின்வருமாறுதான் கோரமுடிகிறது.

அன்பான தமிழீழப் பற்றாளர்களே! உங்கள் முன் உள்ள அடுத்த பணி என்ன என்பதை உங்கள் உங்கள் மட்டத்தில் கூடித் தீர்மானியுங்கள். உங்கள் பணியை முதலில் தெளிவாகத் தெரிவு செய்யுங்கள் அந்தப்பணியை முன்னெடுங்கள்.

நாம் அனைவரும் கூடுகுலைந்து காடு கலைந்து கொழு கொம்பு இன்றி அலைந்து தவிக்கும் நிலையில் உள்ளோம். இந்நிலையில் அதிகபட்ச ஒற்றுமையும், அதிகபட்ச அன்னியோன்னியமும் அவசியப்படுகிறது. கொன்றொழிக்கப்பட்ட 1 இலட்சத்து 40ஆயிரம் மக்களுக்கு அப்பால் வாழ்வின் அனைத்துத் தளங்களும் அழிக்கப்பட்டு மாண்டுபோன இன்னுயிர்களின் துயரச் சுமையுடன், அங்கவீனமுற்றும், அடுத்த கட்ட வாழ்விற்கான வழி இன்றியும் உள்ள எமது மக்களைப் பற்றி அதிகம் நாம் சிந்திக்க வேண்டும். இன்னுயிர்களைப் பலிகொடுத்து ஆறுதல் இன்றி தவிக்கும் அந்த மக்களுக்கு முதலில் நாம் ஆறுதலாகவும், நம்பிக்கை அளிக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். விடுதலையைத் தவிர வரலாறு வேறு எதனையும் எம் முன் விட்டு வைக்கவில்லை. அர்ப்பணிப்புடன் சாத்தியமான அடுத்த கட்டத்தைப் பற்றி நாம்; சிந்தித்தாக வேண்டும். இப்போ எம்முன் எழும் முதலாவது கேள்வி அடுத்தது என்ன என்பதுதான் (What is next?).

கற்பனையில் மிதக்காமல், ஒருவரின் காலை ஒருவர் வாருவதில் கவனம் செலுத்தாமல் எம்முன் உள்ள நடைமுறைச் சாத்தியமான அடுத்த பணி என்ன என்பதை தெரிவு செய்து அதனை நிறைவேற்றப் பாடுபட வேண்டும். அவரவர் தன்தன் கொள்ளவிற்கும், சக்திக்கும் ஏற்ப தமக்கான உடனடிப் பணியைத் தெரிவுசெய்து அதனை நிறைவேற்ற வேண்டும்.

அப்படி ஒவ்வொருவரும் தன்தன் பணியை நிறைவேற்றினால் 'கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா?' என்று தன்னைச் சாபமிட முற்பட்ட முனிவரைப் பார்த்து ஒரு குடும்பப் பெண் கேட்டது போன்ற உயர்நிலையை நாமும் அடைய முடியும்.

நடந்து முடிந்துள்ள பாரிய இன அழிப்பின் பின்னணியில் இப்போது எம்முன் உள்ள முதலாவது பணி என்ன? அவரவர் தன்தன் கொள்ளவில் இதற்கான பதிலையும், பணியையும் தீர்மானிக்க வேண்டும். அதனை மக்கள் முன் அவர்கள் முன்வைக்க வேண்டும். அதன் படி செயற்பட வேண்டும்.

வரலாறு காணாத அழிவிற்கு நாம் உட்பட்டுள்ளோம் என்பது உண்மையானாலும், வரலாற்றில் முன்னெப்பொழுதும் இருந்திருக்காத அளவிற்கு தற்போது வரலாற்றில் எமக்கென ஒரு பெரும் அரங்கு திறந்து கிடக்கிறது. இப்போது எமக்கான வரலாற்று வெளி அகன்று பரந்து விரிந்து கிடக்கிறது. அழிவைப் பற்றி மட்டும் பார்க்கும் கண்கள் அதனுடன் கூடவே ஆக்கத்திற்கான வழிகள் இருப்பதையும் பார்க்கத் தவறக் கூடாது. அநீதி இழைக்கப்பட்டவர்கள் என்பதும், படுபாதகமாக கொன்றொழிக்கப்பட்டவர்கள் என்பதும், நீதி மறுக்கப்படுபவர்கள் என்பதும், இன்று பட்டவர்த்தனமாய் வெளித் தெரியும் காட்சிகளாகும். இவற்றை மூலதனமாய்க் கொண்டு எமக்கான அறுவடைக்கு நாம் தயாராக வேண்டும்.

யார் என்னதான் சொன்னால் என்ன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது விடுதலைப் புலிகளினால் ஆசீர்வதிக்கப்பட்டதும், அவர்களால் வழிநடத்தப்பட்டதுமான அவர்களினது ஒரு நிழல் அமைப்புமாகவே காணப்பட்டது. அவர்கள் 2009 மே 18-ம் திகதியுடன் அரங்கில் இருந்து அகற்றப்பட்ட பின்பும் அவர்களால் அசீர்வதிக்கப்பட்ட அந்த அமைப்பையே மக்கள் அதன் பின்பும்; ஆதரித்து வாக்களித்துள்ளனர் என்பதை யாரும் கருத்தில் எடுக்கத் தவறக் கூடாது.

ஈழத் தமிழர்கள் எப்போதும் கொள்கையின் பக்கம் நிற்பவர்கள். எத்தகைய இடர் வரினும் கொள்கையை முன்நிறுத்துபவரை ஆதரிப்பவர்கள். கொள்கையில் இருந்து விலகிச் செல்பவர்களை நிராகரிப்பவர்கள். யாராவது கொள்கையிலிருந்து விலகினால் அவர்களை மக்கள் இலகுவில் தூக்கி எறிந்து விடுவார்கள். சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து இன்றைவரையான தமிழ்த் தலைமைகளின் வரலாற்றைப் பார்த்தால் தமிழ் மக்கள் கொள்கையிலிருந்து விலகியோரை தூக்கி எறிந்த கதைகள் இலகுவில் தெரியும்.

ஆதலால் கொள்கையிலிந்து யாரும் பிறள முடியாது. அவ்வாறு பிறள்வோர் விரைவில் தூக்கி எறியப்பட்டு விடுவார்கள். ஆதலால் தம்மிடையே மோதுண்டு ஒருவர் மேல் ஒருவரென சேறு பூசுவோரைப் பார்த்து சொல்லக் கூடிய ஒரேயொரு விடயம் என்னவெனில் நீங்கள் உங்கள் பணியைத் தெரிவு செய்து அதன்படி செயற்படுங்கள். மக்கள் தீர்ப்பை வழங்குவார்கள்.

தமிழ்த் தேசியத்தின்பால் களத்தில் செயற்படும் பல அமைப்புக்கள் உள்ளன. இதில் தேர்தலில் வெற்றி பெற்ற அமைப்புக்களும் உள்ளன தேர்தலில் வெற்றி பெறாத அமைப்புக்களும் உள்ளன. ஆனால் இப்போது இந்த அமைப்புக்கள் தத்தம் நிலையில் அடுத்த கட்டம் என்ன? தத்தமது அடுத்த கட்டப் பணியென்ன? என்ற தீர்மானங்களை தெளிவாக எடுத்து அவற்றை மக்கள் முன் வைத்து செயற்பட்டாக வேண்டும். சிங்கள அரசிடம் கேட்டு எதனையும் பெறலாம் என்பதற்கு எந்தொரு வரலாற்று உதாரணமும் இல்லை. போராடாமல் அவர்களிடமிருந்து எதனையும் பெறமுடியாது. அகிம்மை வழியில் போராட நிச்சயம் இடமுண்டு. அரசு சிறைச்சாலைகளை நிரப்பலாம். அதற்குத் தயாரில்லாமல் தலைமை தாங்க முடியாது. ஆயுதம் தாங்கியோரையும் மக்களையும் 'பயங்கரவாதம்' என்பதன் பெயரால் கொன்று குவித்தது போல் மக்கள் போராட்டங்களைக் கொன்று அழிக்க முடியாத சர்வதேச யதார்த்தம் ஈழத்தமிழர் பொறுத்து உலகரங்கில் உண்டு. இனப்படுகொலையால் அவமானப்பட்டிருக்கும் சிங்கள அரசால் மக்கள் போராடங்களை இலகுவில் நசுக்க முடியாது. அவ்வாறு களத்தில் மக்கள் போராட்டங்கள் வெடிக்கும்போது அயல் நாட்டிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் மக்கள் போராட்டங்கள் வெடிக்க முடியும். நிலைமை கூட்டு வளர்ச்சியை நோக்கி முன்னேறும். இந்நிலையில் ஈழத்திலும், அயல் நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள விடுதலைக்கான ஆதரவுச் சக்திகள் தத்தமக்கான வேலைத்திட்டங்களை தயாரித்து அதன்படி செயற்பட வேண்டியதே இப்போதைய அவசியப் பணியாகும்.

தமிழீழ மண்ணில் இருக்கும் அரசியல் அமைப்புக்கள், மக்கள் அமைப்புக்கள், தமிழகத்திலிருக்கும் ஆதரவு சக்திகள், புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் அமைப்புக்கள், மற்றும் ஆதரவு சக்திகள் என அனைத்தும் தத்தமது அடுத்த கட்டப் பணியைத் தீர்மானித்து அதன்படி செயற்பட வேண்டும்.

இப்போது அனைவரின் முன் உள்ள பொதுப்பணி என்ன? எதிரிக்கு எதிரான பணியை முன்னெடுக்கத் தவறி எமக்குள் நாமே அடிப்பட்டுக் கொண்டு இருப்போமேயானால் அதைவிட நாம் எதிரிக்குச் செய்யும் பணி வேறொன்றும் இல்லை. அதாவது எம்முள் நாம் அடிபட்டுக் கொண்டிருப்பதன் மூலம் நாம் எதிரிக்கு சேவகம் செய்வோர் ஆகிவிடுவோம்.

ஒவ்வொரு அமைப்பும் தன் அடுத்த கட்ட முதற்பணியை மக்கள் முன் அறிவிக்க வேண்டும். சிங்கள அரசு எதிர்வரும் மார்ச் மாத ஐ.நா மனித உரிமை சபை முன்வர இருக்கும் முள்ளிவாய்க்கால் படுகொலை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளத் தயாராகிறது. முதலாவது முள்ளிவாய்க்கால், 2009 மே 18 இல் அரங்கேறியது என்றால் இரண்டாவது முள்ளிவாய்க்கால் வரும் 2012 மார்ச் மாதம் அரங்கேறவுள்ளது.

ஈழத்தமிழர் மத்தியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புக்கள் இப்போது உள்ளன. ஒன்று களத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், இரண்டு புலத்தில் தமிழீழ நாடுகடந்த அரசாங்கமும் மக்கள் அவைகளும், இவற்றைவிட களத்திலும், புலத்திலும் பல அமைப்புக்கள் உள்ளன. ஆதலால் ஒவ்வொரு அமைப்பும் தமக்கான பொறுப்புடனும், பொறுப்பு உணர்வுடனும், செயற்பட்டாக வேண்டும்.

ஆதலால் ஒவ்வொரு அமைப்பும் தமது அடுத்தகட்டப் பணியை தெரிவு செய்து அதனை மக்கள் முன்வைத்து நேரடி நடவடிக்கைகள் மூலம் பணியாற்ற வேண்டும். அறிக்கை அரசியலுக்கு அப்பால் நேரடி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். வசைபாடும் அரசியற் கலாச்சாரத்தைக் கைவிட்டு செயல்பூர்வ அரசியல் திட்டங்களை முன்வைத்து செயற்படுவதன் மூலம் செயலால் கூட்டமைப்புக்கள் உருவாக முடியும். ஒருவரையொருவர் அனுசரித்தும், அரவணைத்தும் போகத் தவறினால் அளவால் சிறிய இனத்தவராகிய நாம் அழிந்துபடுவதைத் தவிர மிஞ்சப் போவது எதுவும் இல்லை.

கொடூரமாய் கொன்றொழிக்கப்பட்ட 1இலட்டத்து 40ஆயிரம் மக்களின் பெயரால், விடுதலைக்கான அரும்பெரும் தியாகங்களின் பெயரால், மக்கள் பட்ட பெரும் துன்பங்களின் பெயரால், இழக்கப்பட்ட சொத்துக்களினதும், மற்றும் அழிவுகளினதும் பெயரால், தொடர்ந்து எதிரியால் ஒடுக்கப்படுவதன் பெயரால், நாம் அவமானப் படுத்தப்படுவதன் பெயரால், ஒன்றுபட்டு செயற்படத் தவறுவோமானால் எமது பிள்ளைகளுக்கும், பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும், அவர்கள் பின் நீளவல்ல எதிர்கால சந்ததியினருக்கும் நாம் தீங்கு இழைத்தவராவோம். இப்போது முதற்கட்டமாக குறைந்த பட்சம் வசைபாடுதலைக் கைவிட்டு, ஒருவருக்கு ஒருவர் குழிபறிப்பதைக் கைவிட்டு, நீண்டதூரப் பார்வையுடன் எம்முன் உள்ள முதற் பணியைத் தேர்ந்தெடுத்து நிறைவேற்றுவோம்.

நாம் நூறாவது படிக்கு போக வேண்டுமே ஆயினும், முதலாவது படியில் கால் வைக்க வேண்டும். முதலாவது படியில் வலது காலைத் தூக்கி வைத்தால் இரண்டாவது படியில் இடது காலைத் தூக்கி வைக்கலாம். இரண்டாவது படியில் ஏறினால் மூன்றாவது படி தயாராக நிற்கும். எனவே முதலாவது படியில் கால் வைத்தால் நாம் நூறாவது படிக்கும் ஏறமுடியும். அவ்வாறு முதலாவது படியில் கால் வைக்காமல் நூறாவது படியின் அழகைப் பற்றி வர்ணித்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. இப்போது எமது பணி எம்முன் உள்ள முதலாவது படியில் கால் வைப்பதே. 

No comments:

Post a Comment