பிரித்தானிய எம்.பி.க்கள் குழு இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல் விவகாரங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றினூடாக சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று வலியுறுத்தி உள்ளது என பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. 'பிரித்தானிய தமிழர் பேரவையுடன் இணைந்து பிரித்தானியாவின் தமிழர்களுக்கான சர்வகட்சி நாடாளுமன்ற குழுவினால் பிரித்தானிய மக்கள் பிரதிநிதிகள் சபையில் கடந்த செவ்வாய்க்கிழமை கண்காட்சியொன்று நடத்தப்பட்டது.
நிழல் வெளிநாட்டமைச்சர் டக்லஸ் அலெக்ஸாண்டர், தென்கிழக்காசிய, தெற்காசிய, மற்றும் தூர கிழக்கிற்கான நிழல் வெளிநாட்டமைச்சர் கெரி மக்கார்தி மற்றும் முன்னாள் பாதுகாப்பமைச்சர் லியாம் பொக்ஸ் ஆகியோர் உட்பட பிரித்தானியாவின் சகல கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரபுக்கள் சபை உறுப்பினர்கள், வெளியுறவு அமைச்சு அதிகாரிகள் மற்றும் பிரதான ஊடகங்களை சேர்ந்த செய்தியாளர்கள் என்று நூற்றுக்கும் அதிகமானவர்கள் இந்த கண்காட்சி நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து கருத்து தெரிவித்த போதே பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
இலங்கையில் தமிழ் மக்களின் தற்போதைய நிலமை, பலதசாப்தங்களாக தமிழ் மக்களுக்கெதிராக இலங்கை அரசாங்கங்கள் முன்னெடுத்த நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை உள்ளிட்ட விடயங்களை வெளிப்படுத்தும் வகையில் இந்த கண்காட்சி அமையப் பெற்றிருந்தது.'
No comments:
Post a Comment