தமிழர்கள் ஒரு தேசிய இனத்தினர் என்பதை அங்கீகரித்து புரிந்து கொண்டு அதனடிப்படையில் அரசியல் தீர்வு ஒன்றை வழங்க இலங்கை அரசு முன்வரவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கையின் சுதந்திரதினமான நேற்று வலியுறுத்தினார்.
"இலங்கையில் தமிழர்கள் ஒரு தேசிய இனத்தினர். அவர்களுக்கென்று தனித்துவமான கலை, கலாசார, பண்பாட்டு அடையாளங்கள் உள்ளன. இலங்கை அரசு இதனை புரிந்துகொண்டு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்க வேண்டும். தமிழர்களுக்கான உரிமைகள் வழங்கப்படும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்காகப் போராடும். தமிழ் மக்கள் தந்த ஆணையில் இருந்து கூட்டமைப்பு ஒரு போதும் விலகி விடாது" என்றார் சம்பந்தன்.
உள்ளூராட்சிச் சபைகளுக்குத் தெரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கான செயலமர்வு திருகோணமலையில் நகர சபை மண்டபத்தில் ஆரம்பமானது.
நிகழ்வில் உரையாற்றிய சம்பந்தன் மேலும் தெரிவித்த தாவது:
இலங்கை அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு வருடத்துக்கும் மேலாகப் பேசி விட்டது. ஆயினும் இதுவரை அதன் மூலம் ஒரு தீர்வு எட்டப்படவில்லை. இந்த நிலையில் எம்மைப் பேச்சுக்கு வருமாறு அரசு தொடர்ந்து அழைக்கிறது.
ஏற்கனவே பேச்சில் எட்டப்பட்ட தீர்மானங்கள் எதையும் அரசு இதுவரை நடைமுறைப் படுத்தவில்லை. அவை வெறும் தீர்மானங்களாக மட்டுமே உள்ளன. இந்த நிலையில் நாம் தொடர்ந்து அரசுடன் எப்படிப் பேசுவது? எதைப் பற்றிப் பேசுவது?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் புறந்தள்ளி அரசினால் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை எட்டமுடியாது. சர்வதேச நாடுகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசியே இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இதனால் தான் கூட்டமைப்பைத் தெரிவுக்குழுவுக்கு இழுப்பதில் அரசு குறியாக இருக்கிறது.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்ன என்பது பற்றி எம்மிடம் தெரிவிக்க வேண்டும். அதன் பின்னரே தெரிவுக்குழு பற்றி நாம் யோசிப்போம். அது வரை நாம் தெரிவுக்குழுவுக்கு போகமாட்டோம்.
தமிழ் மக்கள் கூட்டமைப்பை நம்பி எமக்கு ஆணை வழங்கி இருக்கிறார். அந்த ஆணையில் இருந்து நாம் ஒருபோதும் விலகி விடமாட்டோம். தீர்வைத் தராமல் அரசு ஏமாற்றினாலும் அபிவிருத்தி என்ற பெயரில் எமது உரிமைகள் பறிக்கப்படுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இதை நாம் அரசுக்குத் தெளிவாகச் சொல்லி வைக்கிறோம் என்றார் சம்பந்தன்.
இந்த நிகழ்வின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எஸ்.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், விநோநோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், சி.யோகேஸ்வரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் இணைச் செயலாளர் சீ.வி.கே. சிவஞானம், வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் செயலர் பி.ரங்கராஜன், கொழும்பு சட்ட பீடத்தைச் சேர்ந்த வி.ரி.தமிழ் மாறன் ஆகியோர் கலந்துகொண்டனர்
No comments:
Post a Comment