Translate

Wednesday, 29 February 2012

'வின்சன்ட் பள்ளியில் சரஸ்வதி சிலை நிறுவப்பட்டது'

பள்ளியின் முன்புறம்
பள்ளியின் முன்புறம்
மட்டக்களப்பு நகரில் பிரபல மகளிர் பாடசாலையான வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சரஸ்வதி சிலை இன்று திங்கட்கிழமை மாணவிகளினால் மீண்டும் நிறுவப்பட்டது.
192 ஆண்டுகளுக்கு முன்பு இப் பாடசாலை கிறிஸ்தவ மிஷனரிமார்களினால் ஆரம்பிக்கப்பட்டது. 1961 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட இப் பாடசாலையில் தற்போது 90 சத வீதத்திற்கு மேல் இந்து மாணிவிகளே கல்வி கற்று வருகின்றனர்.

கடந்த 22 ஆம் திகதி இரவு இப் பாடசாலை முன்றலில் நிறுவப்பட்ட இந்தச் சரஸ்வதி சிலை மெதடிஸ்த திருச்சபையினால் தெரிவிக்கப்பட்ட எதிரப்புகள் காரணமாக மறு நாள் அகற்றப்பட்டதையடுத்தே, இந்த விவகாரம் சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறியது.
இந்தப் பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து தீர்வொன்றைக் காணும் வகையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் துணைச் செயலாளர் எம் ரி ஏ நிசாம் திங்கட்கிழமை பாடசாலைக்கு விஜயம் செய்து பாடசாலை சமூகத்துடன் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார்.
நிறுவப்பட்டுள்ள சரஸ்வதி சிலை
நிறுவப்பட்டுள்ள சரஸ்வதி சிலை
இது தொடர்பாக மாகாணக் கல்வி அமைச்சின் துனைச் செயலாளர் எந்த வித தீர்மானத்திற்கும் வர முடியாத நிலையில் செயலாளருக்கு அறிக்கை சமர்ப்பித்து தீர்வைப் பெற்றுத் தர ஒரு மாத கால அவகாசம் கோரியதாக பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் வேலும் மயிலும் சிறீகாந்தன் இந்த சந்திப்பு தொடர்பாகக் கூறுகின்றார்.
அவரது பதிலை நிராகரித்த மாணவிகள் அவர் வெளியேறிச் சென்ற பின்னர் அதிபர் மற்றும் ஆசிரியர்களை அறைகளுக்குள் வைத்து பூட்டி வைத்து, குறித்த சிலையை மீண்டும் நிறுவியதாக அவர் மேலும் கூறுகின்றார்.
இந்தச் சிலை அமைப்பு விவகாரத்தை பாடசாலை சமூகத்தில் ஒரு மத ரீதியான கசப்புணர்வாக தான் கருதவில்லை என்றும் கூறும் அவர், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஏகமனதான தீரமானமே இது என்கின்றார்.
குறித்த விடயம் தொடர்பாக மெதடிஸ்த திருச் சபையின கருத்தை அறிய அருட் போதகர் அருட் திரு டெரன்ஸ் அடிகளாரை தொடர்பு கொள்ள முயன்ற போதிலும் அவரது தொடர்பு கிடைக்கவில்லை.

No comments:

Post a Comment