Translate

Tuesday, 28 February 2012

மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்


தீர்மானம் குறித்த பதற்றத்தில் அரசு!
எதிர்பார்ப்பில் சர்வதேச சமூகம்


ஜெனிவாவில் இன்று நடைபெறும் ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 19ஆவது கூட்டத் தொடர் இலங்கையின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகின்றது. இதில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறுமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு சர்வதேசம் முழுவதும் பரவியுள்ளது.இலங்கை இறுதிப் போரில் பல இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்திய ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுநர் குழு, ஈழப் போரின் இறுதிக் கட்டத்தின் போது பெருமளவில் போர்க் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதை வெளிப்படுத்தியிருந்தது.


மேலும் தமிழர்களின் மறுவாழ்வு தொடர்பான பரிந்துரைகளையும் வழங்கியிருந்தது. இதையடுத்து உலக அளவில் இலங்கைக்கு எதிராக கண்டனங்கள் வெடித்தன. ஆனால், இதனைப் பற்றி இலங்கை அர சாங்கம் கண்டுகொள்ளவில்லை. பின்னர் சர்வதேச நாடுகளின் கடுமையான நெருக்கடியினால் இலங்கை அரசாங்கமே ஒரு விசாரணைக்குழுவை அமைத்தது. அந்தக் குழுவும் சில பரிந்துரைகளை அளித்தது. அதனைப் பற்றியும் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. இந்த விவகாரம் சர் வதேச ரீதியாக பெரும் விவாதத்திற்குள்ளானது.

அரசு நடத்திய விசாரணைக்குழுவின் பரிந்துரைகளையாவது நிறைவேற்றுமாறும் எப்படி நிறைவேற்றப் போகிறீர்கள் என்பதை தெரியப்படுத்துமாறும் அமெரிக்கா அண்மையில் வலியுறுத்தியது. இலங்கை அரசு இந்த நடவடிக்கையை மேற் கொள்ளமால் போனால் மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா சபையில் கொண்டு வரப்பட வுள்ள உத்தேசித்துள்ள தீர்மானத்தை ஆதரிப் போம் என்றும் கூட அமெரிக்கா எச்சரித்தது.

இதேபோல் ஐ.நா குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசு நிறைவேற்றியாக வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றமும் நெருக்கடி கொடுத் தது. ஆனால் அரசு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதனால் இன்று ஆரம்பமாவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.இத்தீர்மானத்தை அமெரிக்கா, கனடா நாடுகளோடு தென் அமெரிக்க, ஆபிரிக்க நாடு ஒன்றோ கொண்டு வரக்கூடுமென தெரிகிறது. அல்லது கூட்டாக இத் தீர்மானத்தை சில நாடுகள் முன்வைக்கக்கூடும்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. 24 நாடுகளின் ஆதரவு இருப்பின் தீர்மானம் நிறைவேறிவிடும். ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் நிறைவேறுவதற்கான சாத்தியங்களே அதிகம் இருக்கின்றன. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த இந்திய வெளியுறவுச் செயலருடன் அமெரிக்க அதிகாரிகள் இதுதொடர்பாக விவாதித்துள்ளனர். தனிப்பட்ட முறையில் இலங்கையை விட்டுக் கொடுக்க முடியாவிட்டாலும் அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்காக இந்தியா இத் தீர்மானத்தை நிறைவேற்ற ஆதரவளிக்கலாம்.

இலங்கைக்கு எதிரான ஐ.நா.சபையின் நடவடிக்கைகளில் இந்தியா தெளிவான நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்பது தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களின் கோரிக்கை. இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் தமக்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவதை தடுப்பது தொடர்பாக ஜெனிவா சென்றுள்ள அமைச்சர் பீரிஸ் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்தித்துப் பேசியுள்ளார்.இத்தகைய சூழ்நிலையில் ஜெனிவா கூட்டத்தின் முடிபை சர்வதேச சமூகம் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment