Translate

Thursday 29 March 2012

ஆறுமுகம் தொண்டமானின் இராஜினாமாவின் பின்னணி ...


அமைச்சர் பதவியில் ஆறுமுகன் தொண்டமான் நீடிப்பதா? அல்லது ஒட்டுமொத்தமாக அரசாங்கத்திலிருந்து விலகுவதா? 

 “ஜனாதிபதி கீழ்த்தரமான வேலையொன்றை செய்துள்ளார்” தொண்டமான்

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை தொலைபேசியில் அழைத்து மனைவி உட்பட குடும்பத்தாரை சம்பந்தப்படுத்தி கீழ்த்தரமாக திட்டித் தீர்த்துள்ளார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ  .

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ நேற்று (26) பிற்பகல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு தகாத வார்த்தைகளினால் திட்டியதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனையடுத்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தனது அமைச்சின் இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாகத் தெரியவருகிறது. இந்த விவகாரம் குறித்து எமதுக்குக் கிடைத்தத் தகவல்களை முழுமையாக தருகிறோம்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் மில்கோ நிறுவனத்தின் தலைவராக ரொஹான் விக்ரமசிங்க என்பவரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவே நியமித்துள்ளார்.

எனினும், அண்மைக்காலமாக இந்த நிறுவனம் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்து வந்த நிலையில் எவ்வரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஜனாதிபதியின் பாரியாருக்கும், நிறுவனத் தலைவர் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான உறவுமுறையே இதற்குக் காரணமாகும்.

கடந்த மாதம் மில்கோ நிறுவனம் ”யோகட்” உற்பத்திக்குத் தேவையான சீனியைக் கொள்வனவு செய்வதற்காக மட்டும் 170 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்தது. அத்துடன், யோகட் கோப்பைகளைக் கொள்வனவு செய்வதற்கு 120 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்தது.

மில்கோ உற்பத்தியை அதிகரிக்குமாறு மில்கோ நிறுவன தொழிற்சங்க ஊழியர்கள் அடிக்கடி கோரிவந்த நிலையில், இதனை அந்த நிறுவனத் தலைவர் தொடர்ச்சியாக நிகராரித்து வந்துள்ளார். அத்துடன், உற்பத்தியை 60 சதவீதத்திற்குள் பராமரித்து வந்துள்ளார்.

இந்த நிலைமையின் கீழ், மில்கோ நிறுவன தொழிற்சங்க ஊழியர்கள் தமிழ், சிங்களப் புத்தாண்டுக் கொடுப்பனவொன்றைக் கோரி தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கலந்துரையாட அமைச்சின் செயலாளர் அழைப்பு விடுத்த போதிலும் இதனை அவர்கள் நிராகரித்திருந்தனர்.

இதற்கமைய, அமைச்சின் செயலாளர் நாராஹேன்பிட்டி மில்கோ நிறுவனத்திற்கு வந்து, தொழிற்சங்க ஊழியர்களுடன் பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது, நிறுவனத் தலைவரின் செயற்பாடுகளை தொழிற்சங்க ஊழியர்கள் கடுமையாக விமர்சித்து, அமைச்சின் செயலாளருக்கு விளக்கமளித்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மில்கோ நிறுவனத்தின் தலைவரை பணி நீக்கம் செய்துள்ளார். எனினும், ஒரு சில மணி நேரத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, குறித்த நபரை மீண்டும் அதே தலைவர் பதவிக்கு நியமித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சஜின்வாஸ் குணவர்தனவுடன் தொடர்புகொண்டு “ஜனாதிபதி கீழ்த்தரமான வேலையொன்றை செய்துள்ளார்” எனத் திட்டியுள்ளார்.

சஜின்வாஸ் குணவர்தனை இதனை உடனடியாக ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல, ஆத்திரமடைந்த ஜனாதிபதி, சுயகட்டுப்பாட்டை இழந்து, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை தொலைபேசியில் அழைத்து மனைவி உட்பட குடும்பத்தாரை சம்பந்தப்படுத்தி கீழ்த்தரமாக திட்டித் தீர்த்துள்ளார்.

‘நீர் சந்திரிக்கா, ரணில் ஆகியோருடன் போட்ட விளையாட்டை என்னுடன் போட முயற்சிக்க வேண்டாம்” இந்தச் சண்டித்தனம் ராஜபக்‌ஷவுடன் ஒத்துவராது. நீர் இல்லையென்றால் எனக்குப் பிரச்சினை இல்லை. இதனை நீர் நன்றாக நினைவில்கொள்ளும். இதன்பின்னர் இவ்வாறான சண்டித்தனங்கள் செய்ய முயற்சிக்க வேண்டாம்” என்ற வண்ணம் சிங்களத்தில் திட்டித்தீர்த்துள்ளார்.

இதனையடுத்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தனது இராஜினாமா கடிதத்தை நேற்று அனுப்பிவைத்ததை அடுத்து குழப்பமடைந்த மகிந்த, அமைச்சர் ஆறுமுகன் தொண்டன் எங்கிருந்தாலும் உடனடியாக அழைத்துவருமாறு அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் தொண்டமான் இந்தத் தருணத்தில் பதவி விலகினால், இது சர்வதேச ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதால் அவரைத் தொடர்ந்தும் அமைச்சுப் பதவியில் நீடிக்கச் செய்யுமாறு ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனையடுத்தே அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை தூது அனுப்பிய ஜனாதிபதி, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை சமாதானப்படுத்துமாறு மைத்திரிபாலவிற்கு மகிந்த ஆலோசனை வழங்கியுள்ளார்.

எவ்வாறாயினும், அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த ஆறுமுகன் தொண்டமான் நேற்று மாலை இந்தியா செல்லத் திட்டமிட்டிருந்ததாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இலங்கை தொடர்பான புதிய கொள்கைகளை வகுத்துவரும் இந்தியா, தற்போது கிடைத்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்த முயற்சித்து வருவதாகவும் சில நம்பகரமான தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. அமைச்சர் பதவியில் ஆறுமுகன் தொண்டமான் நீடிப்பதா? அல்லது ஒட்டுமொத்தமாக அரசாங்கத்திலிருந்து விலகுவதா? என்ற தீர்மானம், விரிவான மந்திர ஆலோசனைகளின் பின்னர் எடுக்கப்படவுள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
நெற்றிக் கண்ணை திறப்பினும், குற்றம் குற்றமே

Nellaiyaan@yahoo.com

No comments:

Post a Comment