Translate

Saturday, 17 March 2012

காத்திரமான அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும்!


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


தேசிய இனப்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை இலங்கை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்பதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வலியுறுத்த வேண்டுமென சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். 

நீண்ட காலமாக தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு காத்திரமான அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படுவதனை மனித உரிமைப் பேரவை உறுதி செய்ய வேண்டுமென கோரியுள்ளார். 

யுத்தத்தின் பின்னர் நாட்டில் சமாதானத்தை நிலைநாட்ட கிட்டியுள்ள சந்தர்ப்பம் நழுவிக் கொண்டிருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் மீளவும் ஏற்படுவதனை தடுப்பதற்கு மனித உரிமைப் பேரவை நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கலந்து கொண்டுள்ள அரசாங்கப் பிரதிநிதிகள் சர்வதேச சமூகத்தை பிழையாக வழிநடத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவது தொடர்பில் அரசாங்கம் உள்நாட்டு ரீதியாகவோ அல்லது சர்வதேச ரீதியாகவோ காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மனித உரிமை மீறல் மற்றும் குற்றச் செயல்களக்கு தண்டனை விதித்தல் ஆகியன தொடர்பிலும் அரசாங்கம் நம்பிக்கைக்குரியதாக நடந்துகொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால்அரசாங்கம் தொடர்ந்தும் உதாசீனமான போக்கைப் பின்பற்றக் கூடிய ஆபத்து காணப்படுவதாக சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 



No comments:

Post a Comment