அமெரிக்கா முன்னின்று உழைத்து வெற்றி பெறச் செய்திருக்கும் ஜெனிவா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானம் பற்றிச் சொல்வதற்கு ஒரு முக்கிய அம்சம் இருக்கிறது. அதை உலகத் தமிழினம் ஒன்றால் மாத்திரம் உணர முடியும்.
மேற்கூறிய தீர்மானம் பெறுமதியுள்ளதோ இல்லையோ, அதனால் ஈழத் தமிழர்களுக்கு நன்மைகள் கிட்டுமோ கிட்டாதோ அவற்றை ஒரு பக்கம் ஒதுக்கி விட்டு இன்னொரு விடயத்திற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்.
இலங்கை அரசிற்கு எல்லா வகையிலும் அனுசரணையாக இருந்து வரும் இந்திய மத்திய அரசை தமிழகத் தமிழர்கள் ஒருமித்த குரலில் திசை மாற்றியிருக்கிறார்கள். இது தெற்கு ஆசிய வரலாற்றில் மிகப் பெரியதொரு மாற்றமாக அமைகிறது.
இறுதி வரை இலங்கைக்கு சார்பாக வாக்களிக்கும் நோக்குடன் தான் இந்திய மத்திய அரசு இருந்திருக்கிறது. கர்நாடாக மாநிலத்தைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணா இதற்காகக் கடுமையாக உழைத்தார்.
பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கத் தீர்மானத்திற்குச் சார்பாக வாக்களிக்கப் போவதாகப் பகிரங்கமாகப் பாராளுமன்றத்தில் கூறிய பிறகும் கூடக் கிருஷ்ணா இன்னும் இந்திய அரசு பரிசீலனை செய்தபடி இருப்பதாக மழுப்பல் பேச்சுப் பேசினார்.
தமிழ் நாட்டின் ஒட்டுமொத்த ஏழு கோடித் தமிழர்களும் ஒருமித்த குரலில் மத்திய அரசை தீர்மானத்திற்குச் சார்பாக வாக்களிக்கும்படி வலியுறுத்தினர். தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியும் அதே குரலில் மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
தமிழ் நாட்டில் ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு மாநில அரச மட்டத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. கலைஞர் கருணாநிதியின் ஆட்சி இருந்திருப்பின் நிலமை வேறாக இருந்திருக்கும்.
அவர் இந்திய மத்திய அரசின் மாற்றம் ஏற்பட்டதற்கு தானே காரணம் என்ற ரீதியில் அறிக்கை விட ஆரம்பித்துள்ளார். மத்திய அரசை வாக்களிப்பதற்குத் தூண்டும் வகையில் தனது கழகம் அமைச்சர் பதவிகளைத் துறப்பதற்கு தயாராக இருந்ததாகவும் அவர் சொல்கிறார்.
அது மாத்திரமல்ல தனது பிரசித்தி பெற்ற சாகும் வரை உண்ணா விரதத்தையும் ஆரம்பிக்க இருந்ததாகவும் அவர் அதே மூச்சில் கூறினார். கருணாநிதியின் சாகும் வரை உண்ணாவிரதம் ஒரு கேலிக் கூத்து. அதை நம்புவதற்கு ஒருவரும் தயாரில்லை.
முதல்வர் ஜெயலலிதா தமிழ்த் தேசியத்தை உருவாக்கவில்லை. தமிழ் தேசியம் தான் அவரை உருவாக்கியது. தமிழ்த் தேசிய அலை அவரைத் தூக்கி முதல்வர் பதவியில் அமர்த்தியிருக்கிறது. இதை அவர் நன்கு உணர்வார்.
தமிழ் நாட்டில் யார் ஆட்சியை பிடித்தாலும் அவர் தமிழ்த் தேசியம் பெற்ற பிள்ளையாகத் தான் இருக்க முடியும். மக்களின் உணர்வை நன்கு உணர்ந்த முதல்வர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர மேனனுக்கு நேரம் ஒதுக்க மறுத்தார். இது மத்திய அரசிற்கு அதிர்ச்சி அளித்தது.
பாரளுமன்ற அரசியலுக்கு அப்பாற்பட்ட அதிகார மையமாகப் புது டில்லியின் நிர்வாக அதிகாரிகள் இடம் பெறுகிறார்கள் அவர்கள் சிறிலங்காவுக்கு விலை போனவர்கள். முதன் முறையாக அவர்களால் தமிழக மக்களை மீறிச் செயற்பட முடியவில்லை.
தமிழ் நாட்டைப் பிரித்துப் பார்க்கும் மத்திய காங்கிரஸ் ஆட்சி தோல்வியைத் தழுவத் தொடங்கியுள்ளது. தமிழர்களை ஏமாற்றுவதற்கு அமெரிக்கத் தீர்மானத்திற்கு வாக்களித்து விட்டுத் திரைமறைவில் அது சிறிலங்காவிற்கு உதவலாம் என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
தமிழகத்தில் இளைய தலைமுறையினர் மத்தியில் தமிழ்த் தேசியம் அணையா நெருப்பாக எழுச்சி பெறுவதற்கு ஊற்றுக் கண்ணாக இருப்பது ஈழத் தமிழர்களின் போராட்டம் மாத்திரமே. அவர்கள் விடுதலைக்காகக் கொடுத்த விலை அளப்பரியது.
சோம்பிக் கிடக்கும் தன் இனத்திற்காகவும் தனது நாட்டிற்காகவும் உலகத் தமிழினத்தைத் தட்டியெழுப்பிய தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் செயல் வீரம் போதுமானது. அவர் அரசியல்வாதியல்ல. வீரத் தலைவன்.
தேசியத் தலைவர் பிரபாகரன் நேசித்த நேத்தாஜி சுபாஸ் சந்திரபோஸ் தமிழனின் பெறுமதியை உணர்ந்தவர். அடுத்த பிறவி ஒன்று இருக்குமானால் நான் ஒரு தமிழனாகப் பிறக்க விரும்புகிறேன் என்று சுபாஸ் ஒரு முறை சொல்லியிருக்கிறார்.
நேத்தாஜின் இந்திய தேசிய இராணுவத்தில் இருந்தவர்களில் பாதிப் பேர் தமிழர்கள். அவருடைய படை அதிகாரிகளாகத் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள்.
மேஜர் ஜெனரல் அழகப்பா. கேணல் சோமசுந்தரம், பிரிகேடியர்கள் நாகரத்தினம், எஸ்.ஏ.ஜயர், திவி போன்றோர் இதில் அடங்குவர். அவர் அந்தமான் தீவுகளுக்கு ஆளுநராக நியமித்த லோகநாதன் ஒரு தமிழன். நேத்தாஜியின் சமையற்காரன் காளி ஒரு தமிழன்.
பெண்களில் தமிழச்சி டாக்டர் கப்டன் லக்ஷ்மி சைகல் அவருடைய சுகாதார அமைச்சராக இருந்தார். இந்த வீரப் பரம்பரைக்குப் புத்துயிர் கொடுத்த தேசியத் தலைவர் பிரபாகரன் உலகத் தமிழினத்தை உரிமைக்காகப் போராட வைத்துள்ளார்.
இன்று தமிழகம் மாத்திரமல்ல தாழ்ந்து கிடக்கும் மலேசியத் தமிழ் சமுதாயமும் விழிப்படைந்துள்ளது. இலங்கைக்காக வழமையாகத் வாக்களிக்கும் மலேசியா இம்முறை நடுநிலை காத்ததன் இரகசியம் இது தான்.
அமெரிக்கத் தீர்மானத்திற்கு வாக்களித்த மொறீசியஸ் தமிழர்கள் என்றும் தமிழுணர்வு மிக்கவர்கள் என்பதில் ஜயமில்லை. அமெரிக்கத் தீர்மானத்தின் வெற்றி மூலம் ஈழத்தமிழர்கள் இழந்த உரிமைகளைப் பெற்று விட்டார்கள் என்று எண்ணாதீர்.
தமிழீழம் நிறுவப்படும் வரை போராட்டம் தொடரும். தமிழர்களுக்காகத் தமிழர்கள் தான் போராட வேண்டும். தன் கையே தனக்கு உதவி. இது தான் அரசியல் யதார்த்தம்.
No comments:
Post a Comment