Translate

Thursday, 22 March 2012

ஐநா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான அமெரிக்கத் தீர்மானம் : சுருக்கமான வரலாறு


குளோபல் தமிழ் செய்திக்குழு
ஐநா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட  இலங்கை தொடர்பான அமெரிக்கத் தீர்மானம் :  சுருக்கமான வரலாறு

அமெரிக்காவினால் ஜெனீவா மனித உரிமைச் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் முன்வரைவு, 2012 மார்ச் 7 ஆம் திகதி, ஐநா மனித உரிமைச் சபையின் 47 உறுப்புநாடுகளுக்கும் அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டது.
 
அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தின் முன்வரைபு இவ்வாறு அமைந்திருந்தது --- 
 
இலங்கையில் நல்லிணக்க மேம்பாடும்  பொறுப்புக் கூறுதலும் குறித்து 
 
ஐக்கிய நாடுகள் சாசனம், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம், மனித உரிமைகளுக்கான அனைத்துலக உடன்படிக்கைகள் மற்றும் பிற தொடர்புடைய விதிகளுக்கு அமைவாகவும், 
 
பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச விதிகளுக்கு அமைவாக இருப்பதை உறுதிப்படுத்தும் உறுப்பு நாடுகளது கடமைக்கு அமைவாகவும், குறிப்பாக பொருத்தமான சர்வதேச மனித உரிமைகள், பாதுகாப்பு, மனிதாபிமான விதிகளுக்கு அமைவாகவும், 
 
இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் முடிவுகளையும் பரிந்துரைகளையும் மற்றும் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இவ்வறிக்கை வழங்கிய பங்களிப்பை ஏற்றும், 
 
சட்டத்திற்கு முரணாக மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் படுகொலைகள் மற்றும் காணாமற் போதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளையிட்டு பக்கசார்பற்ற விசாரணை மேற்கொள்ளுதல், வடக்கிலிருந்து இராணுவத்தை விலக்குதல், காணி தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான பாரபட்சமற்ற பொறிமுறையை உருவாக்குதல், தடுத்து வைத்தல் தொடர்பான கொள்கைகளை மீளாய்வு செய்தல், சுயாதீனமான சிவில் சமூக கட்டமைப்புகளை பலப்படுத்துதல், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குதல் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணுதல், அனைவரதும் கருத்து வெளிப்பாட்டு உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், சட்ட ஆட்சி முறை தொடர்பான சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் போன்ற விடயங்கள் சார்ந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்துள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை வரவேற்றும்,
 
சர்வதேச சட்ட விதிகள் தீவிரமாக மீறப்பட்டமை குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை என்பதையும் கவனத்திற்கொண்டு,  
 
(1).கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடை முறைப்படுத்துவதுடன், நீதி, பொறுப்புப் கூறுதல், சகல இலங்கையரு;க்கும் இடையிலான நல்லிணக்கம் போன்றவற்றை உறுதிப்படுத்த, பொருத்தமானதும் நம்பிக்கையானதுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் சட்டரீதியான கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றவும் இலங்கை அரசைக் கோருதல்.
 
(2). கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட மற்றும் தொடர்ந்து எடுக்கப்படவுள்ள விபரங்கள் உள்ளிட்ட, விரிவான செயற்திட்டத்தை விரைந்து முன்வைக்குமாறும், சர்வதேச சட்டவிதிகள் மீறப்பட்டமை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து கவனம் செலுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தைக் கோருதல்.
 
(3). மேற்சொன்ன திட்டங்களை நடைமுறைப்படுத்தவதற்குரிய ஆலோசனைகளையும் தொழில்நுட்ட உதவிகளையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தை வழங்குமாறும், இலங்கை அரசாங்கத்தை இதனை ஏற்றுக்கொள்ளுமாறும் வேண்டுவதுடன,; இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையகத்தின் 22 வது கூட்டத்தொடரில் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தை வேண்டுதல்.
 
---- என்கிற மூன்று அம்சங்களே அமெரிக்காவின் இலங்கை தொடர்பான ஐநா மனித உரிமைச் சபையின் தீர்மான முன்வரைவில் அழுத்திக் காட்டப்பட்டதாக அமைந்திருந்தது.
 
2012 மார்ச் 22, காலையில் ஐநா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மூன்றாவது அம்சத்தில் மட்டுமே ‘மாற்றம்’ இருக்கிறது. இந்த மாற்றம் இந்தியாவின் ஆலோசனைக்கு அமையவே மேற்கொள்ளப்பட்டது என்பதனை, ஐநா மனித உரிமைச் சபையில் வாசிக்கப்பட்ட இந்தியாவின் அதிகாரபூர்வ நிலைபாடு தொடர்பான அறிக்கையின் பனுவலை வாசிக்கிற எவரும் அறிய முடியும்
 
மாற்றப்பட்ட, ஐநா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூன்றாவது அம்சம் பின்வருமாறு இருக்கிறது.
 
(3). மேற்சொன்ன திட்டங்களை நடைமுறைப்படுத்தவதற்குரிய ஆலோசனைகளையும் தொழில்நுட்ட உதவிகளையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தை வழங்குமாறும், இலங்கை அரசாங்கத்துடன் ஆலோசித்தும், இசைவுகண்டும், இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையகத்தின் 22 வது கூட்டத்தொடரில் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தை வேண்டுதல்.
 
ஆங்கிலத்தில் and the Government of Sri Lanka to accept என்று இருந்த வாக்கிய அமைப்புக்கு மாறாக  in consultation with, and with the concurrence of, the Government of Sri Lanka என மாற்றப்பட்டுள்ளது.
 
தமிழில்,  இலங்கை அரசாங்கத்தை இதனை ஏற்றுக்கொள்ளுமாறும் வேண்டுவதுடன் எனும் வாக்கிய அமைப்பு இலங்கை அரசாங்கத்துடன் ஆலோசித்தும், இசைவுகண்டும் என மாற்றப்பட்டிருக்கிறது.
 
இந்தத் தீர்மானம் இந்தியா உள்பட்ட 24 நாடுகளின் ஆதரவுடனும், சீனா, கியூபா உள்பட்ட 15 நாடுகளின் எதிர்ப்புடனும், 8 நாடுகள்; வாக்களிக்காத நிலைமையில் ஜெனீவா ஐநா மனித உரிமைச் சபையில் மார்ச் 22, 2012 காலை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
 
மாற்றப்பட்ட வாக்கிய அமைப்பு இலங்கையின் மீதான சர்வதேசக் கண்காணிப்பையும், இலங்கையின் அரசின் மீதான சர்வதேசக் கட்டுப்பாட்டையும் எந்தவிதத்திலும் மாற்றியமைத்துவிடப் போவதில்லை எனும் அளவில், இலங்கையின் மூர்க்கத்தனமான தமிழர் இனஅழிப்பு கொள்கையை வைத்துப் பார்க்கையில், இந்த ஐநா தீர்மானம் தமிழர் வரலாற்றில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை 
 
குளோபல் தமிழ் செய்திக்குழு
 
மீள் பதிவு செய்பவர்கள் www.globaltamilnews.net

No comments:

Post a Comment