கச்சதீவின் மேற்குப் பகுதியிலுள்ள மேட்டு நிலப்பரப்பினை உள்ளடக்கி இந் நிரந்தர கடற்படை தளம் அமைக்கப்பட்டுள்ளது. முறிகண்டிப் பகுதி வழியில் படையினருக்கான குடியிருப்புக்களை அமைக்க சீன அரசு வழங்கிய பொருத்துக்களை கொண்டே இத்தளமும் நிறுவப்பட்டுள்ளது. அத்துடன் இடம்பெயர்ந்த மக்களுக்கென வழங்கப்பட்ட சீன அரசின் "டென்ற்' கொட்டகைகளும் கடற்படை தள அமைப்பிற்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்திலிருந்து ஊடுருவல்களைத் தடுக்கவே இக்கடற்பரப்பின் கண்காணிப்பை கடற்படை முடுக்கி விட்டுள்ளது. அதிலும் கச்சதீவில் நிரந்தர கடற்படைத் தளமொன்று அமைக்கப்பட்டுள்ளதுடன் கடற்படைக் கப்பல்கள் இரண்டு இக்கடற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அண்மைக் காலமாக தீவகப் பகுதிகளில் கடலட்டை பிடிப்பதற்கென பெருமளவிலான மீனவர்கள் தெற்கிலிருந்து படையெடுத்த வண்ணமுள்ளனர். கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சு, இவர்களுக்கான பாஸ் அனுமதியை வழங்கி வருகின்றது. ஏற்கனவே கடலட்டை கூடிய அளவில் பிடிபடக்கூடிய பாலைதீவு மற்றும் இரணைதீவுப் பகுதிகளில் கடற்படையினர் நேரடியாக கடலட்டை பிடிப்பதில் ஈடுபட்டு வருவதாக தீவக மீனவ அமைப்புக்கள் போர்க் கொடி தூக்கத் தொடங்கியுள்ளன.
ஏற்கனவே புங்குடுதீவில் மீன்பிடியில் ஈடுபட வந்திருந்த தென்னிலங்கை மீனவர்கள் உள்ளூர் மீனவர்களது எதிர்ப்பினால் வெளியேற்றப்பட்டிருந்தனர். இந்நிலையில் அதிகரித்துள்ள கடற்படையினரின் பிரசன்னத்தின் மத்தியில் மீண்டும் கடலட்டை பிடிக்கவென தென்னிலங்கை மீனவர்கள் தீவகப்பகுதி நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளமை மீனவர்களிடையே மீண்டும் குழப்பகரமான சூழலொன்றைத் தோற்றுவித்துள்ளது. _
No comments:
Post a Comment