இம்முறை இலங்கை வெற்றி பெறுவது கடினம் - ‘நியூயோர்க் ரைம்ஸ்‘
இலங்கையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட உள்நாட்டுப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சி, ஜெனிவாவில் இராஜதந்திர ரீதியான விவாதத்தை உருவாக்கியுள்ளதுடன், இலங்கையை கோபம் கொள்ளவும் செய்துள்ளது.
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அனைத்துலக சட்ட விதிமுறைகளை மீறி மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான மீறல்கள் தொடர்பாக நம்பகமான, சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், இவ்வாறான மீறல்கள் இடம்பெறக் காரணமாக இருந்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்து ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் அமெரிக்காவின் ஆதரவுடன் முன்வைக்கப்படும் பிரேரணை தொடர்பாக விவாதம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இவ் விவாதத்துக்கான கூட்டத்தொடர் வியாழனன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
இலங்கை அரசாங்கத்தால் 'மனித உயிர்களைக் காப்பாற்றும் நடவடிக்கை' என்ற பெயரில் தமிழ்ப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்த யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் 40,000 உயிர்கள் வரை காவு கொள்ளப்பட்டதாக கடந்த ஆண்டில் வெளியிடப்பட்ட ஐ.நா வல்லுனர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கை அரசாங்கத்தால் 'மனித உயிர்களைக் காப்பாற்றும் நடவடிக்கை' என்ற பெயரில் தமிழ்ப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்த யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் 40,000 உயிர்கள் வரை காவு கொள்ளப்பட்டதாக கடந்த ஆண்டில் வெளியிடப்பட்ட ஐ.நா வல்லுனர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
யுத்தத்தில் பங்கு கொண்ட இரு தரப்பினரும் யுத்த மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான மீறல்களை மேற்கொண்டதற்கான நம்பகமான சாட்சியங்களை வல்லுனர் குழுவினர் தமது விசாரணைகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.
தற்போது அமெரிக்காவால் ஆதரிக்கப்படும் பிரேரணையானது இலங்கையுடன் புரிந்துணர்வுடன், கூட்டாக இணைந்து மேற்கொள்வதற்கான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை அரசாங்கம் தனது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட யுத்தகால மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள பயனுள்ள, உறுதியான பரிந்துரைகளை துரிதமாக அமுல்படுத்துவதை நோக்காகக் கொண்டே முன்வைக்கப்படுவதாகவும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்கத் தூதர் எலீன் டோனஹே தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் சரியான திசையில் பயணிப்பதை ஊக்குவிப்பதற்கான நேர்மையான, உண்மையான முயற்சியாகவே' இப்பிரேரணை உள்ளதாகவும், பல மாதங்களாக இலங்கைக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இருதரப்புத் தொடர்பாடல்களுக்குப் பின்னரே தற்போது இப்பிரேரணை முன்வைக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இப்பிரேரணைக்கு எதிராக வாக்களிக்குமாறு இலங்கை அரசாங்கம் பல நாடுகளின் ஆதரவைக் கோரி நிற்கின்றது. இந்த வகையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஆசியா, ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளின் அரசாங்கத் தலைவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன், அமெரிக்காவின் இப்பிரேரணைக்கு எதிராக இந்தநாடுகள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் ஆதரவுடன் முன்வைக்கப்படும் பிரேரணை அனைத்துலக சமூகத்தை இரு துருவங்களாகப் பிளவுபடுத்துவதற்கு வழிவகுப்பதாகவும், இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை எனவும் இலங்கை வெளியுறவுஅமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்பட்டு வரும், தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஆதரவைத் திரட்டுவதற்காக ஜெனீவாவிற்கு 70 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவொன்றை இலங்கை அனுப்பி வைத்துள்ளது.
இலங்கை அரசாங்கம் தனது நாட்டில் மனிதஉரிமைகளை மேம்படுத்துவதற்கான செயற்திட்டம் ஒன்றை ஏற்கனவே வரைந்துள்ளதாக பெப்ரவரி மாத முடிவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்க அமைச்சரும் மனித உரிமைகளுக்கான சிறப்புத் தூதுவருமான மகிந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.
முன்னர் யுத்த வலயங்களாக இருந்த பகுதிகளை புனரமைப்புச் செய்வதற்கான கால அவகாசம் இலங்கைக்கு தேவைப்படுவதாகவும், இது தொடர்பில் வெளிநாடுகளிடமிருந்து இலங்கை மீது அழுத்தங்களோ அல்லது 'தேவையற்ற பிரேரணையோ' முன்வைக்கப்படுவதற்கான நேரம் இதுவல்ல எனவும் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மேற்குலக நாடுகளின் தீர்மானத்தை எதிர்த்து இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக மனிதஉரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளதுடன், பிரேரணைக்கு ஆதரவாக தமது கருத்துக்களைத் தெரிவிக்கும் ஆர்வலர்கள் தோற்கடிக்கப்பட்ட புலிகளின் ஆதரவாளர்கள் என இலங்கை அரசாங்க சார்பு ஊடகங்களால் முத்திரை குத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.
தமது நடவடிக்கைகளில் அரசாங்கப் பிரதிநிதிகள் குறுக்கீடு செய்வதாக ஜெனீவாவில் பிரசன்னமாகியுள்ள இலங்கையைச் சேர்ந்த அரசசார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.
அத்துடன், மனித உரிமைகள் பேரவையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் கூட தமது குழு உறுப்பினர்களை மீண்டும் மீண்டும் அரசாங்கப் பிரதிநிதிகள் குழு ஒளிப்படம் எடுத்ததாகவும் அவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இம்முறைப்பாடுகளை பேரவையின் தலைவரான உருகுவேயைச் சேர்ந்த Laura Dupuy Lasserre ஆல் மீளவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பாக மேற்கொள்ளப்படும் விவாதத்தின் வெளிப்பாடானது இலங்கைக்கான சோதனைக் களமாக இருப்பது போல், மனித உரிமைகள் பேரவைக்கான சோதனைக் களமாகவும் உள்ளது.
2009 இல், அதாவது இலங்கையின் உள்நாட்டுப் போர் நிறைவடைந்த கையோடு, கூட்டப்பட்ட சிறப்புக் கூட்டத்தொடரின் போது ஆசியாவைச் சேர்ந்த இலங்கையின் அயல்நாடுகள் மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் ஆதரவுடன் இலங்கை அரசாங்கம் தனது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மீறல்களுக்கு எதிராக முன்வைக்கப்படவிருந்த பிரேரணையை வெற்றி கொண்டது.
ஆனால் இந்தத் தடவை இலங்கை தனக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணையில் தனக்குச் சார்பாக வெற்றியைப் பெற்றுக் கொள்வதென்பது கடந்த தடவையை விடக் கடினமானதாக இருக்கும் என இராஜதந்திரிகள் மற்றும் பேரவையின் அவதானிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல்கள் சிறுபான்மைத் தமிழ் மக்களை மட்டுமல்ல அரசாங்கத்தை விமர்சிப்பவர்களையும் பாதிப்படையச் செய்வதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.
கடந்த ஒக்ரோபர் மாதத்திலிருந்து இலங்கையில் 32 வரையான ஆட்கடத்தல் மற்றும் காணாமற்போன சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அனைத்துலக மன்னிப்புச்சபை கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை முன்னர் போன்று பிராந்திய ஒருமைப்பாட்டை எதிர்பார்த்து நிற்கமுடியாது என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்து ஆகியன பரிந்துரையை எதிர்த்து குரல் கொடுத்துள்ளன.
ஆனால் இந்தியாவைப் பொறுத்தளவில் இதன் உள்நாட்டுக்குள் பல்வேறு அரசியல் அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால் மறுபுறத்தில் இந்தியா, இலங்கையின் அயல்நாடாகவும், கூட்டாளி நாடாகவும் உள்ளது.
இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணையை ஆதரிப்பது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கடந்த திங்களன்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment