ஜெனீவாவில் ஒரு போதும் இலங்கையை ஆதரித்து இந்தியா வாக்களிக்காது. எனவே அரசாங்கம் தொடர்ந்தும் இந்தியாவின் பின் செல்லாது மாற்று வியூகங்களை வகுத்து பிரேரணையை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.
13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி தமிழீழத்தை இலங்கையில் அமைத்து விட்டால் அமெரிக்காவோ ஏனைய மேற்குலக நாடுகளோ எவ்விதமான குற்றச்சாட்டுக்களையும் முன் வைக்கப் போவதில்லை. இன்று புலிகளுக்கு பதிலாக அமெரிக்கா இலங்கையில் தனிநாட்டுக்கான போராட்டத்தை நடத்தி வருகின்றது என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கூறுகையில்,
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா முன் வைத்துள்ளது. இதனை எதிர்கொள்ள அரசாங்கம் இந்தியாவின் உதவியை நாடிச் செல்கின்றது. ஆனால் இந்தியா சுயநலவாத நாடாகும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஜெனீவாவில் வைத்து உதவி செய்யாது.
பயங்கரவாதத்தை நாட்டில் முற்றாக ஒழித்துள்ள போதிலும் அதனை அனுபவிக்கக் கூடிய சூழலை வெளிநாட்டு சக்திகளும் பிரிவினைவாத கொள்கை வாதிகளும் விடுவதில்லை. இதன் ஒரு வெளிப்பாடே ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையும் இங்கு இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுமாகும். இவை அனைத்துமே போலியானவை.
வடக்கு கிழக்கை தனிநாடாக்கினால் சகல விதமான மனித உரிமைகள் பிரச்சினையும் மௌனித்து விடும். எவ்வாறாயினும் தற்போது நாட்டை பாதுகாக்க பங்களிப்புடன் செயற்பட வேண்டியுள்ளது. அரசாங்கம் ஜெனீவாவில் இந்தியாவை நம்பாது மாற்று உத்திகளைக் கையாள வேண்டும் என்றார்
No comments:
Post a Comment