Translate

Saturday, 17 March 2012

குற்றவாளிகளிடமே நீதியின் விசாரணை! தீர்வு எவ்வாறு கிடைக்கும்?


ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19வது கூட்டத் தொடரில் சிறீலங்கா தொடர்பில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ள தீர்மானம், அந்நாட்டைக் கண்டிக்கும் நோக்குடன் முன்வைக்கப்பட்டதல்ல என்றும் இந்த விவகாரம் குறித்து எல்லாப் பிராந்தியங்களின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் மேற்கொள்ளப்பட்டஆலோசனைகளையடுத்துப் பயனுள்ள பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றன.

அதன்படி பல உறுப்பு நாடுகளின் விவாதங்களுக்குப் பின்னர் ஒரு நியாயமான சரியான தீர்மானத்தையே தாங்கள் முன்வைத்துள்ளதாகவும் ஜெனீவாவுக்கான அமெரிக்கத் தூதுவர் எலீன் சம்பர்லெய்ன் டொனாகோ கூட்டத் தொடரில் உரையாற்றியபோது விளக்கமளித்துள்ளார்.
மூதூர், சம்பூர்… என சிங்கள இராணுவம் முன்னேறிய பகுதி எங்கும் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைகளையும், வன்முறைகளையும் தொடர்ந்தபடியேதான் நகர்ந்தன. இதில் சர்வதேசத்தின் தொண்டு நிறுவனமாக பட்டினிக்கு எதிரான அமைப்பின் 15 பிரதிநிதிகள் ஒன்றாக படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் கிழக்கு மாகாணத்திலேயே தான் நிகழ்ந்துள்ளது.
ஐந்து மாணவர்களின் கொடூரப் படுகொலையும் கிழக்கிலேயேதான் நிகழ்ந்தது. ஆனால், அத்தனையையும் மறைத்து, கிழக்கின் நிலைமையை கருத்தில் எடுக்காமல் வடக்கில் மட்டுமே இராணுவத்தினரின் அத்துமீறல்கள் நிகழ்ந்ததுபோலவும் அங்கிருந்து இராணுவம் விலகவேண்டும் என்பதுபோலவும் அமைந்துள்ள அறிக்கையானது, தமிழரின் தாயகத்தை அமெரிக்கா ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதையே காட்டுகின்றது.
அமெரிக்காவின் இந்தப் பிரேரணை எதிர்பார்த்தபடி வலுவானதாக இல்லாவிட்டாலும், யானைப் பசிக்கு சோளப்பொரி போன்று இருந்தாலும், அமெரிக்கா இதனை மனித உரிமைகள் அமைப்பில் கொண்டுவந்துள்ளமையை இரண்டு விடயங்களில் வரவேற்கலாம்.
ஒன்று இந்த அறிக்கையைத் தாக்கல் செய்ததன் ஊடாக சர்வதேசச் சட்டங்களை, போர் மரபுகளை, மனித உரிமைகளை மீறியே செயல்பட்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி, சிறீலங்காவை ஒரு குற்றவாளியாக சர்வதேசத்தின் முன் அடையாளப்படுத்தியிருக்கின்றது.
டப்ளின் தீர்ப்பாய அறிக்கை, ஐ.நா. நிபுணர் குழுவின் ஆய்வறிக்கை என இறுதிப்போரில் நிகழ்ந்த மனித இனத்திற்கு எதிரான குற்றங்களைக் கண்டறிந்த இரண்டு பெரும் அமைப்புக்களின் அறிக்கைகள் உள்ளபோதும், அவை இரண்டையும் ஒதுக்கிவிட்டு, இன அழிப்புப் போரில் முப்படைகளையும் தலைமை தாங்கி வழிநடத்திய சிறீலங்காவின் ‘ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமித்திருந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் ஊடாக தீர்வைப்பெற அமெரிக்கா முயன்றிருக்கின்றது.
அதாவது, குற்றவாளிகளே தாங்கள் புரிந்த குற்றங்களை கண்டறிந்து, அதற்கான தண்டனையை அல்லது தீர்ப்பை வழங்கிக்கொள்ளும் விசித்திர உரிமை உலக வரலாற்றில் முதற் தடவையாக சிறீலங்காவிற்கு வழங்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் போரில் நிகழ்ந்த குற்றங்களை நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடாக குறைந்தளவேனும் கண்டறிந்துள்ள சிறீலங்கா, அந்தக் குற்றங்களுக்கான தீர்வை வழங்கவேண்டும் என்பதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதாவது, நீங்களே கண்டறிந்த குற்றங்களுக்கு நீங்களே தீர்வை வழங்குங்கள் என்பதுதான் அமெரிக்காவின் பிரேரணையின் கோரிக்கையாக இருக்கின்றது. அதற்காக ஒரு ஆண்டு கால அவகாசத்தையும் அது சிறீலங்காவிற்கு வழங்கியுள்ளது. ஓராண்டு காலம் என்பது சிறீலங்காவை தமது வழிக்குக் கொண்டுவர அமெரிக்கா வைத்துள்ள ஒரு ‘செக்’ என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்ற விடயம் ஒருபுறம் இருக்க, நல்லிணக்க ஆணைக்குழுவின் குற்றச்சாட்டுக்களை நடைமுறைப்படுத்தக்கூடாது என சிங்கள ஆளும்கட்சியில் உள்ள பேரினவாதக் கட்சிகளே போர்க்கொடி தூக்கிவிட்டதால் மகிந்த அரசினால் அதனை நடைமுறைப்படுத்த முடியாது என்பதே உண்மை.
எனவே, தான் விசாரித்துக் கண்டறிந்த குற்றங்களுக்கே தீர்வை வழங்கமுடியாத நிலையிலிருக்கும் சிறீலங்கா, டப்ளின் தீர்ப்பாய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயத்தையோ அல்லது ஐ.நா. நிபுணர் குழுவின் ஆய்வறிக்கையில் கண்டறியப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களையோ ஏற்று தீர்ப்பை வழங்கிவிடமாட்டாது.
எனவே, சிங்கள ஆட்சியாளர்களின் மனநிலையை எதிர்காலத்தில் சர்வதேசம் புரிந்துகொள்வதற்கும், தமிழர்கள் தங்களது நீதியான போராட்டத்தைத் தொடர்வதற்கும் இந்தப் பிரேரணை வழிவகுக்கும். இது அமெரிக்காவின் பிரேரணையில் உள்ள இன்னொரு வரவேற்றகத்தக்க விடயமாகப் பார்க்கமுடியும்.
நன்றி : ஈழமுரசு
ஆசிரியர் தலையங்கம்

No comments:

Post a Comment