7500 ரூபாவால் மூன்று நாய் குட்டிகளுக்கு கூட சீவிக்க முடியாது. இந் நிலையில் ஒரு குடும்பத்திற்கு தாராளமாக 7500 ரூபா போதும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன கூறியமை வேடிக்கையாகும். இது அரசின் முட்டாள் தனத்தையுமே வெளிப்படுத்தியுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் அடுத்து லிபியாவாகவே இலங்கை மாறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
போதி மன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விசேட ஊடகச் சந்திப்பின்போதே சுஜீவ சேனசிங்க எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் கூறுகையில்,
நாட்டில் சட்டம், ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி என்பவை படுமோசமான முறையில் அழிந்து போயுள்ளன. அரசியல் நலனுக்காகவும் பிரச்சினைகளை மூடி மறைப்பதற்காகவும் அரசு ஜெனீவா பிரச்சினையை பயன்படுத்துகின்றது. பிரபாகரனை கொலை செய்ததற்காகவே ஐ.நா. உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றன என்று அரசு பிரசாரம் செய்கின்றது.
இதில் உண்மையில்லை என்பதை பொதுமக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்பத்துமாறே ஐ.நா. கூறுகின்றது. இதனை செய்வதில் அரசிற்கு என்ன பிரச்சினையுள்ளது ஒன்றுமே இல்லை.
நாட்டில் இராணுவ ஆட்சி காணப்படுவதையோ வடக்கு மக்கள் தொடர்ந்தும் அச்சத்தில் வாழ்வதையோ அனுமதிக்க முடியாது. அதேபோன்று சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் சிவில் நிர்வாகம், அரசியல் தீர்வு என்பன அத்தியாவசியமான விடயங்களாகும். இதனை அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் தனது நிர்வாகத்தை மறைத்துக் கொள்ள ஜெனீவாவை அரசு பயன்படுத்துகின்றது என்றார். _
No comments:
Post a Comment