சூடானில் ஏற்பட்ட நிலைமை இங்கும் ஏற்பட இடம்கொடாதீர் |
அமைச்சர் மகிந்த சமரசிங்க ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நிகழ்த்திய உரையில் வழங்கியிருந்த வாக்குறுதிகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல ஆங்கிலப் பத்திரிகையொன்றில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
அமைச்சர் மகிந்த சமரசிங்க ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நிகழ்த்திய உரையில் வழங்கியிருந்த வாக்குறுதிகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல ஆங்கிலப் பத்திரிகையொன்றில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
அரசு சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர் சூடானில் ஏற்பட்ட நிலைமை இங்கும் ஏற்படுவதை தவிர்க்கும் படியும் அவ்வாறு ஒரு நிலைமை ஏற்பட்டால் நாட்டுக்கு மீட்சியே இருக்காது என்று எச்சரித்துள்ளார்.
அக்கட்டுரையின் சில பகுதிகள் வருமாறு:
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் 2006 ஜூன் 21ஆம் திகதி மஹிந்த சமரசிங்க வழங்கிய வாக்குறுதிகள் 2012ஆம் ஆண்டு வரையிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இருந்தபோதும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான உத்தேச வழிகாட்டி வரைபடம் மற்றும் உத்தேச செயல்திட்டங்கள் குறித்து இந்த முறையும் பேசியுள்ளார்.
இந்த நாட்டு மக்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் சபைக்கும் இது பற்றி விளக்கமளிக்க அவர் கடமைப்பட்டிருக்கிறார்.மனித உரிமைகள் சபைக்கு அவர் வழங்கியிருந்த மிகமுக்கிய வாக்குறுதி என்னவென்றால், அரசமைப்புக்கான 17ஆவது திருத்தம் வலுவூட்டப்படும் என்பதாகும். ஆனால் 18ஆவது அரசமைப்பு திட்டத்தின் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்கள் அனைத்துமே தங்கள் சுயாதீனத்தை இழந்துவிட்டன. இதன் விளைவாக நீதித்துறை, பொலிஸ் துறை, சட்டமா அதிபர், பொதுசேவைகள் மற்றும் மனித உரிமைகள் ஆணையம் அனைத்தும் முழுமையாக நிறைவேற்று அதிகாரத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டன.
மனித உரிமைகள் சபையில் இலங்கையைக் காப்பாற்றுவதற்காக சென்றிருந்த 52 பேர் அடங்கிய குழுவினரில் ஒருவருக்காவது அமைச்சர் சமரசிங்க சபையில் முன்னர் வழங்கியிருந்த வாக்குறுதிகள் பற்றி தெரிந்திருக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தொடர் செயற்பாடுகளை அவதானித்து வருபவர்கள் அரசும் அமைச்சரும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றத் தங்களுக்குக் கால அவகாசம் வேண்டும் என்று என்று கேட்பதை நம்பமாட்டார்கள் என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
அரசின் கடந்த கால செயற்பாடுகளைக் கவனிக்கையில் இந்த அரசினதும் அதன் அமைச்சர்களினதும் வாக்குறுதிகளை எவரும் நம்புவார்கள் என்று கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாது. குறிக்கப்பட்ட கால எல்லைக்குள் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படும் என்ற அமைச்சரின் வாக்குறுதியிலும்கூட அதே நிலையே ஏற்பட்டிருக்கிறது.
2012 மார்ச் 5ஆம் திகதிய "இந்து" பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் பின்வருமாறு தெரிவிக்கப் பட்டிருந்தது,ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கடந்த மூன்று மாநாடுகளின் போதும் வாக்குறுதிகளையும் செயல் திட்டங்களையும் குறிப்பிட்டு ராஜபக்ஷ ஆட்சியாளர்களால் கால அவகாசம் பெற்றுக் கொள்ள முடிந்தது. அவைகள் செயற்படுத்தப்பட்டிருந்தால் இப்பொழுது வீணடிக்கப்படும் ராஜதந்திர செலவினங்களை நிறுத்தி இலங்கையையும் காப்பாற்றியிருக்க முடியும்.
ஆணைக் குழுவும்கூடத் தனது இடைக்காலப் பரிந்துரைகள் செயற்படுத்தப்படவில்லை என்று கவலை தெரிவித்திருந்தது. இதற்கு பதிலாகப் போரின் இறுதியில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பான பொறுப்புக்கூறும் பிரச்சினைகளைச் சமாளிப்பதிலேயே இலங்கை அரசு காலம் கடத்தி வந்துள்ளது. இதனால் இந்தியா போன்ற நட்புறவு நாடுகளின் கோபத்தையும் சம்பாதித்துக் கொண்டுள்ளது.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தீர்க்கப்படாமல் இருப்பது குறித்து இந்தியா கோபமடைந்து இருக்கிறது. இலங்கையானது இந்த இரண்டு விடயங்களையும் தீர்த்துக்கொள்வது அதற்கே நன்மை என்பதை உணரவேண்டும். ஜெனிவாவில் ஏற்பட்டுள்ள சவாலை அமெரிக்காவுக்கும் மேற்குலகுக்கும் எதிரான உணர்வுகளைத் தூண்டிவிடும் வகையில் அரசு பயன்படுத்துகிறது. அது மேற்கொள்ளும் செயற்பாடுகள் அவ்வாறே அமைந்திருக்கின்றன. ஆர்ப்பாட்டங்கள் மூலம் சிங்கள தேசிய உணர்வலைகளை தூண்டிவிட்டதன் மூலம் நாடு ஒரு முற்றுகைக்கு உட்பட்டிருப்பது போன்ற நிலை உருவாக்கப்பட்டிருந்தது. இது ஆக்கபூர்வமான செயற்பாடு ஆகாது. அரசு உச்சத்தில் இருந்து கொண்டு நடத்தியுள்ள இந்த இயக்கமானது நாட்டில் இருக்கும் இன வெறுப்பையே மேலும் கூர்மையாக் குவதாக இருக்கும் என்று "இந்து" தெரிவித்துள்ளது.
போரின் இறுதிக்கட்டங்களில் நிகழ்ந்த பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்ளக பொறிமுறை ஒன்றின் மூலம் விசாரணை நடத்துவதற்கும் பொறுப்புக் கூறுவதற்கும் அரசு ஒப்புக்கொண்ட முதல் கடப்பாடு எப்பொழுது ஏற்பட்டது என்றால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ.நா. செயலாளர் நாயகத்துடன் சேர்ந்து 2009ஆம் ஆண்டின் மத்தியில் கையெழுத்திட்டு வெளியிட்ட கூட்டறிக்கையின் போதே ஆகும்.
உள்ளக பொறிமுறை உருவாக்கப்படாதமையால் ஐ.நா. நிபுணர் குழு உருவாக்கப்பட்டது. போரின் இறுதிக் கட்டத்தில் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் ஏற்பட்டது மட்டுமல்ல அரசு சட்ட ஆளுகை, ஊடக சுதந்திரம் என்பவற்றை இல்லாமல் செய்கிறது என்றும் வெள்ளை வான் மூலம் ஆள்களைக் கடத்தும் பாரம்பரியத்தையும் உருவாக்கி விட்டதாகக் குற்றம் சாட்டியது.
ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கையை முறியடிக்க நல்லிணக்க ஆணைக்குழுவை அரசு அமைத்தது. அதன் அறிக்கை தாமதமின்றி செயல்படுத்தப்படும் என்று நாடாளுமன்றத்திலும் பல்வேறு சர்வதேச மன்றங்களிலும் வாக்குறுதிகளை வழங்கியது.எனவே அரசு நிலைமைகளை உணர்ந்து சர்வதேசத்துக்கு பல தடவைகளிலும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கால கட்டம் உருவாகியுள்ளது.
சூடானில் ஏற்பட்டது போன்ற ஒரு நிலைமை ஏற்படும் முன்னர் அரசு விழித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறான நிலைமையொன்று ஏற்பட்டால் பின்னர் மீட்சிக்கே இடமிருக்காது .
|
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Thursday, 22 March 2012
சூடானில் ஏற்பட்ட நிலைமை இங்கும் ஏற்பட இடம்கொடாதீர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment