Translate

Friday 30 March 2012

சுவிஸில் அச்சுறுத்தலின் பின்னணியில் யார்? விசாரிக்க கோருகிறது சர்வதேச அமைப்பு !



சுவிஸில் உள்ள தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து கடிதங்களை அனுப்பியதன் பின்னணியில் சிறிலங்கா அரசாங்கத்திற்காக பிரசாரம் செய்வதற்காக ஜெனிவாவுக்கு வந்த குழுவும் இருப்பதாகஅச்சுறுத்தலுக்குள்ளாகும் மக்களுக்கான சர்வதேச அமைப்பின் (Society for Threatened People (SPT) ஜெனிவாவில் உள்ள பிரதிநிதி அன்கெலா மத்லி ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கு முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பாக 20Minuten  பத்திரிகை விரிவான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. சுவிஸில் உள்ள தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து கடிதங்கள் அனுப்பியது தொடர்பாக செய்தியை இரு தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட இப்பத்திரிகை தற்போது அதன் பின்னணி குறித்தும், அச்சுறுத்தலுக்குள்ளாகும் மக்களுக்கான சர்வதேச அமைப்பு வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் தொடர்பாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நடந்த போர்குற்றம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதே தினமான மார்ச் 22ஆம் திகதிதான் அச்சுறுத்தல் கடிதங்கள் ஜெனிவா நகரிலிருந்து சில கிலோ மீற்றர்களுக்கு அப்பால் உள்ள Bursins  என்ற இடத்தில் உள்ள தபாலகத்தில் தபாலிடப்பட்டிருப்பதாக அன்கெலா தெரிவித்துள்ளார்.

தாம் விசாரித்து அறிந்தவரை இதன் பின்னணியில் சிறிலங்கா அரசாங்கத்திற்காக பிரசாரம் செய்ய வந்த குழுவும் சுவிஸில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு உளவு பார்க்கும் குழுக்களும் தான் இச்செயலில் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. சுவிஸில் சிறிலங்கா புலனாய்வு பிரிவினருக்காக உளவு பார்க்கும் புளொட் இயக்கம் போன்ற தமிழ் குழுக்கள் தான் தமிழர்களின் விலாசங்களை சேகரித்து அச்சுறுத்தல் கடிதங்களை அனுப்பியுள்ளதாக தாம் சந்தேகிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சிறிலங்கா குழுவால் அச்சுறுத்தப்பட்டார்கள். இதனால் சில மனித உரிமை செயற்பட்டாளர்கள் அச்சம் காரணமாக ஐ.நா.மனித உரிமை கூட்டத்திற்கு வருவதை தவிர்த்து கொண்டார்கள். மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தங்கியிருந்த இடம், அவர்களின் நடமாட்டம், அவர்கள் யார் யாரை சந்திக்கிறார்கள் என்பதை பற்றி எல்லாம் சிறிலங்கா குழு நோட்டம் விட்டு திரிந்ததோடு தொலைபேசி மூலமும், நேரிலும், குறுஞ்செய்தி, மற்றும் மின்னஞ்சல் மூலமும் அச்சுறுத்தல் விடுத்தனர் என அச்சுறுத்தலுக்குள்ளாகும் மக்களுக்கான சர்வதேச அமைப்பின் பிரதிநிதி அங்கெலா தெரிவித்துள்ளார்.

ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்திற்கு வந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வெளியில் சென்று தேனீர் அருந்துவதற்கு கூட பயப்பட்டார்கள். அவ்வளவு தூரம் சிறிலங்கா குழுவின் அச்சுறுத்தல் இருந்தது.
சிறிலங்கா குழுவில் 52க்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள் என்றும் அவர்களில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் சிறிலங்கா புலனாய்வுப்பிரிவினர், மற்றும் ஆயுதக்குழுக்களில் இருந்தவர்கள் என பலரும் ஜெனிவாவுக்கு வந்திருந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா குழுவில் 30பேர்தான் உத்தியோகபூர்வகுழுவில் இடம்பெற்றவர்கள். ஏனையவர்கள் சிறிலங்கா புலனாய்வு பிரிவைச்சேர்ந்தவர்களும், ஆயுதக்குழுக்களை சேர்ந்தவர்களுமாவர். அது தவிர முன்னர் ஆயுதக்குழுவில் இருந்து தற்போது சுவிஸ், மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவான குழுக்களும் அங்கு வந்திருந்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜெனிவாவில் சிறிலங்கா அரசாங்கத்தின் போர்க்குற்றத்தை விசாரிக்க வேண்டும் என கோரி தமிழர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டவர்களை சுவிஸில் உள்ள புளொட் இயக்கத்தினர் புகைப்படம் எடுத்ததாக சுவிஸ் தமிழர் மக்களவையின் தலைவி தர்சிகா பகீரதன் தெரிவித்தார்.

சுவிஸில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்காக வேலை செய்பவர்களுக்கு இந்த அச்சுறுத்தல் கடிதங்கள் அனுப்பபடவில்லை என்றும், தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவாகவும், சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராகவும் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளும் சாதாரண பொதுமக்களுக்கே இந்த கடிதங்கள் அனுப்பபட்டிருப்பதாக தர்சிகா பகீரதன் தெரிவித்துள்ளார்.

சுவிஸில் உள்ள தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல் கடிதங்கள் அனுப்பட்டமை தொடர்பாகவும், ஜெனிவாவில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பாகவும் முழுமையான விசாரணை ஒன்றை நடத்துமாறு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் மக்களுக்கான சர்வதேச அமைப்பு சுவிட்சர்லாந்தின் சமஷ்டி காவல்துறையினரை கோரியுள்ளனர். இது தொடர்பாக எழுத்து மூலமாகவும் காவல்துறைக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர் என சுவின்சிக் மினுட்டன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

(ஜேர்மன் மொழியில் சுவான்சிக் மினுட்டன் என்ற பத்திரிகை வெளியிட்ட செய்தியை தமிழில் மொழிபெயர்ந்து தினக்கதிர் வெளியிடுகிறது. இதை மீள்பிரசுரம் செய்வோர் இந்த அடிக்குறிப்பை பிரசுரிக்கவும். தினக்கதிர் ஆசிரியர்குழு) http://www.20min.ch/schweiz/news/story/Steckt-UNO-Delegation-hinter-Drohbriefen–29638827

No comments:

Post a Comment