Translate

Wednesday, 21 March 2012

திமுகவுக்கு கிடுக்கிப்பிடி


புதுடெல்லி,  மார்ச் 21:இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக ராஜ்யசபையில் கொண்டு வரப்பட்டிருந்த வெட்டுத் தீர்மானத்தின் மீதான  ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் திமுக வெளிநடப்பு செய்தது. 
.
பிரதமர் அறிக்கையை பார்த்து விட்டு வெற்றி வெற்றி என்ற சந்தோஷத்தில் கூத்தாடியவர்கள் இந்த தீர்மானத்தை ஆதரிக்காதது ஏன் என்று ராஜ்யசபை அதிமுக  தலைவர் டாக்டர் மைத்ரேயன் கேள்வி எழுப்பி உள்ளார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் முடிவில் பிரதமர் மன்மோகன்சிங் நேற்று ராஜ்ய சபையில் பேசினார்.  

ஜனாதிபதி உரையில் இடம் பெற்ற சில விஷயங்கள் குறித்து எதிர்க் கட்சிகள் கொடுத்திருந்த தீர்மானங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன.  ஜனாதிபதி உரையில் இலங்கை பிரச்சனை தொடர்பாக எதுவுமே குறிப்பிடாதது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா ஒரு திருத்தத்தை கொடுத்திருந்தார்.
இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதை பற்றியோ, இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டது பற்றியோ, அங்கு நடைபெற்ற போர்க் குற்றங்கள் பற்றியோ குறிப்பிடாததற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் அந்த தீர்மானம் அமைந்திருந்தது.

மேலும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதால் கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது. இந்த சமயத்தில் திமுக எம்பிக்கள் கடுமையான தர்மசங்கடத்தில் ஆழ்ந்தனர். திமுக உறுப்பினர் திருச்சி சிவா எழுந்து நின்று "பிரதமர் கூறியிருக்கிற வாக்குறுதியை முழுமையாக நம்புகிறோம். தீர்மானம் வர இன்னும் நாட்கள் உள்ளன' என்று கூறினார். அதிமுக மற்றும் இடதுசாரிகள் கிடுக்கிப்பிடி போட்டதால் திமுக நெருக்கடியில் நெளிந்தது.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் எழுந்து, பிரதமரின் அறிவிப்பு தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளாலும் வரவேற்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். 

அப்போது அதிமுக எம்பிக்கள் ஆவேசத்துடன் எழுந்து பேசினார்கள்.  அதிமுக உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன், "இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக பிரதமர் கூறியிருப்பது நழுவலான பதில். இன்றும் நழுவுகிறார்; நாளையும் நழுவுவார். போர்க்குற்றங்கள் என்று கூட குறிப்பிடாமல் மனித உரிமை மீறல் என்று குறிப்பிடுவதை அதிமுக ஏற்காது' என்று கூறினார்.

மேலும் இலங்கையில் நடந்த இனப் படுகொலை தொடர்பான குறுந்தகடை கையில் வைத்திருந்தபடியே ஆவேசமாக பேசினார். 
இதுபோல குறுந்தகடுகளை அவையில் காட்டக்கூடாது என்று அவைத் துணைத் தலைவர் ரகுமான் கான் கூறினார்.  இது இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை சித்தரிக்கும் காட்சிகளும் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானமும் இடம் பெற்றுள்ளது என்று மைத்ரேயன் கூறினார்.

இந்த தீர்மானம் குறித்து ஓட் டெடுப்பு நடத்த வேண்டும் என்று இடதுசாரிகளும், அதிமுகவும் வலியுறுத்தியது. ஓட்டெடுப்பு நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று திமுக எம்பி சிவா முயற்சித்தார். ஆனால் அதிமுகவும் இடதுசாரிகளும் அதில் உறுதியாக இருந்ததால் ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டது. 

உடனே திமுக எம்பிக்கள் கனிமொழி, சிவா ஆகியோர் தலைமையில் அவையிலிருந்து வெளியேறினார்கள்.  தீர்மானம் தோல்வி அடைந்தது. பின்னர் இது குறித்து மைத்ரேயன் கூறியதாவது:போர்க் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டுமென்பது  தான் தமிழர்களின் கோரிக்கை. இந்த மையப் புள்ளியை விட்டு தந்திரமாக நழுவுகின்றன. காங்கிரசும் திமுகவும் ஜனாதிபதி உரையில் கேட்ட திருத்தத்தை தமிழக்தில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் எம்பிக்கள் ஆதரிக்க வேண்டுமா? வேண்டாமா?
இன்று திமுக புறக்கணித்து ஓடி விட்டது. பிரதமரின் அறிக்கையை பார்த்து விட்டு வெற்றி... வெற்றி... வெற்றி... என சந்தோஷத்தில் கூத்தாடியவர்கள் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் அல்லவா? ஏனிந்த  இரட்டை வேடம்?

இந்த ஓட்டெடுப்பில் பிரதமர் மட்டுமல்ல தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மற்றும் ஞானதேசிகன் சுதர்சன நாச்சியப்பன் ஆகியோரும் சபையில் இருந்து திருத்தத்திற்கு எதிராக ஓட்டு போட்டுள்ளனர். இவ்வாறு மைத்ரேயன் கூறினார்.

No comments:

Post a Comment