சென்னை, மார்ச் 21: சர்வதேச அரங்கில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான நிலையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கை இறுதிப்போரின் போது தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற கொடுமைகள், மனித உரிமை மீறல்கள் குறித்து ஊடகங்களில் புதிய ஆதாரங்கள் வெளியாகி உள்ளன. அப்பாவித் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து புகைப்படங்கள், விடியோக்கள் ஆகியவை மிகவும் வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற மனித உரிமை மீறல்கள் கடும் கண்டனத்துக்குரியவை.
இலங்கையில் நடைபெறும் போரில் அப்பாவித் தமிழ் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்கக் கூடாது என்பதையும், சிங்களவர்களுக்கு இணையாக தமிழர்களுக்கு அரசியல் சட்ட ரீதியான அனைத்து உரிமைகளும் இருக்க வேண்டும் என்பதையும் ஆர்.எஸ்.எஸ். எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களின் வேதனைகளைப் புரிந்து கொண்டு, மறுவாழ்வுப் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். தமிழர்களுக்கு பாதுகாப்பும், அரசியல் உரிமையும் உறுதி செய்யப்பட வேண்டும்.
இலங்கைத் தமிழர்களின் பிரச்னைகள் தீர்க்கப்படாத வரை இலங்கையில் உண்மையான அமைதி ஏற்படாது. எனவே, சர்வதேச அரங்கில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான நிலையை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
- இவ்வாறு பையாஜி ஜோஷி அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment