ரேணுகா ஹோட்டல் தேனிலவுக் கொலையில் புதிய திருப்பம் !
லண்டனில் இருந்து இலங்கை சென்ற பெண் (சுதர்ஷினி கஹீலா) சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் உள்ள ரேணுகா ஹோட்டலில் சடலமாக மீட்க்கப்பட்டார் என்ற செய்தி யாவரும் அறிந்ததே. இதேவேளை இது தொடர்பாக மேலதிகச் செய்திகளும் சில திருப்பங்களும் தற்போது வெளிப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து கொழும்பு சென்ற தமிழ்ப் பெண்ணான சுதர்ஷினி மெற்றோ பொலிடன் பொலிசில் வேலைபார்த்ததாக பிரித்தானியா தற்போது உறுதிசெய்துள்ளது. 47 வயதுடைய இப் பெண் ஏன் இலங்கை சென்றார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஏற்கனவே விவாகரத்தான இவர், இலங்கை சென்று தங்கியிருந்தவேளை கொள்ளுப்பிட்டியில் சின்னத்தம்பி ஞானச்சந்திரன் என்பவரைக் காதலித்து திடீரெனப் பதிவுத்திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இவர்கள் இருவரும் தேனிலவுக்காக பதிவுசெய்த அறையில் பின்னர், இப் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இதுதொடர்பாக நடந்த வழக்கில் சில திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது. சந்தேக நபரான சின்னத்தம்பி ஞானச்சந்திரன் சார்பில் ஆஜராகி வாதாட பிரபல கிரிமினல் வக்கீல் நளின் வீரக்கோன் வந்திருந்தார். நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல சந்தேக நபருக்கு மன நிலை சரியில்லாமல் இருக்கலாம் என வாதாடப்பட்டது (இவ்வாறு இந்த வழக்கு திசை திருப்பப்படும் என்பதனை அதிர்வு இணையம் ஏற்கனவே எழுதிவிட்டது). அவர் ஏற்கனவே மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார் எனவும், அவரை சிறைச்சாலைக்குள் இருக்கும் மருத்துவ மனைக்கு மாற்றுமாறும், நளின் வீரக்கோன் வாதாடினார். இலங்கைப் பொலிசாரின் பலத்த ஆதரவு சந்தேக நபருக்கு இருப்பதும் அதிர்வு இணையத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இறந்த பெண்ணின் சகோதரர் ஒருவர் சாட்சியமளிக்கையில் அவர் எத் தகவல்களையும் மேலதிகமாகக் கூறவில்லை. அத்தோடு ஹோட்டல் ரேணுகாவில் உள்ள பாதுகாப்பு கமராவின் கேசட்டுகள் அழிக்கப்படலாம் இல்லையேல் அவை சீர்திருத்தப்படலாம் என்ற சந்தேகங்களை அரச தரப்பு வழக்கறிஞர் எடுத்துரைத்துள்ளார். ஹோட்டல் ரேணுகாவில் உள்ள பாதுகாப்புக் கமராவில் கொல்லப்பட்ட பெண் மற்றும் சின்னத்தம்பி ஞானச்சந்திரன் ஆகியோர் உருவங்கள் தெளிவாகப் பதிவாகியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனைப் பொலிசார் சிலவேளைகளில் சீர்திருத்திவிடலாம் என்ற சந்தேகங்களும் உள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்தே ஹோட்டல் அறையில் தங்கியுள்ளதும் பதிவாகியுள்ளது.
லண்டனில் இருந்து, இலங்கை சென்ற சுதர்ஷினி கஹீலா, லண்டன் மெற்றோ பொலிடன் பொலிசில் வேலைபார்த்தவர், 47 வயதுடைய இவர் நிச்சயம் ஒரு அனுபவசாலியாக இருப்பார். இவர் எவ்வாறு மனநலம் குன்றிய ஒருவரோடு காதல் வயப்பட்டிருப்பார் என்று சொல்லமுடியும் ? அப்படியே காதல் வயப்பட்டிருந்தாலும் ஒரு தரணத்திலாவது சுதாரித்திருப்பார். எது எவ்வாறு இருந்தாலும் கொலைசெய்துவிட்டு, கொலையாளிகள் இலகுவாகத் தப்பிக்க வழமையாகப் பாவிக்கப்படும் பதம் அவர் மனநிலை சரியில்லாதவர் என்று, இல்லையேல் மன அழுத்தம் உள்ளவர் என்பதாகும். இக் கொலைக்கு பல முக்கிய காரணங்கள் பின்னணியில் இருக்கலாம் எனக் கருத்தப்படுகிறது. இக்கொலை தொடர்பாக பிரித்தானியத் தூதரகம் அசாதாரண மெளனம் சாதித்துவருவதும், அவர் பொலிசில் வேலைபார்த்ததும் இன்னும் பல சந்தேகங்களைக் கிளறியுள்ளது.
இது தொடர்பான மேலதிகச் செய்திகள் அதிர்வு இணையத்தில் வெளிவரும். அதுவரை அதிர்வு இணையத்துடன் இணைந்திருங்கள்.
No comments:
Post a Comment