ஜெனீவா போகாமலே ஜெயித்துக் காட்டுவோம்..
ஜெனீவா போகாமலே ஜெயித்துக் காட்டுவோம் என்றவாறு தமிழர் கூட்டமைப்பு வீறாப்பாக நடந்து வருவதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன :
ஜெனீவா போகாமலே ஜெயித்துக் காட்டுவோம் என்றவாறு தமிழர் கூட்டமைப்பு வீறாப்பாக நடந்து வருவதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன :
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஐ.நா. மனித உரிமைகள் சபை சரியாகச் செயற்படத் தவறின் பொறுப்புக்கூறும் கடமையிலிருந்து இலங்கை அரசு இலகுவாகத் தப்பிவிடும் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜெனிவாவில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்த கருத்து அப்பட்டமான பொய்யென்றும் இக்கூற்று சர்வதேசத்தைப் பிழையாக வழி நடத்துக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.
ஜெனிவாவில் மஹிந்த சமரசிங்க ஆற்றிய உரை தொடர்பில் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு: இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசினால் தீர்வு வழங்கப்படும் என்றும், மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் இலங்கை அரசு இதுவரை காலமும் சர்வதேசத்திற்கு வழங்கிவந்த உறுதிமொழிகள் அனைத்தையும் அது மீறிவிட்டது.
இலங்கையின் அரசமைப்பைப் பாதுகாப்போம் என்று அரச அதிகாரிகள், நீதித்துறை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட போதிலும், அந்த அமைப்பின் ஒரு பகுதியான 13 ஆம் திருத்தச்சட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதில் உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைப் பரவலாக்கும் ஏற்பாடுகளும் வேண்டுமென்றே மீறப்பட்டன.
அரசியல் தீர்வு, மனித உரிமைகள் மற்றும் அரசின் பொறுப்புக்கூறல் தொடர்பாக உள்நாட்டிலும் சர்வதேச மட் டத்திலும் எடுக்கப்பட்ட முயற்சிகள் 13 ஆம் திருத்தச்சட்டம் நடை முறைப்படுத்தப்படும் என்றும், இலங்கையில் நிலையான சமாதானத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்த அனைத்துத் தமிழ்க் கட்சிகளுடனும் விரிவான பேச்சுகள் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2009 மே 26 ஆம் திகதி ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுடனான சந்திப்பின்போது வாக்குறுதியளித்தார். அவர்கள் இருவரும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் தீர்வு யோசனையைத் தயாரிப்பதற்காக ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு மூன்று வருடங்களாக 128 தடவைகள் கூடி ஆராய்ந்து தீர்வு யோசனை ஒன்றைத் தயாரித்து ஜனாதிபதியிடம் ஒப்படைத்தது. அந்த அறிக்கை வெளிப்படுத்தப்படவில்லை. சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டங்களுக்கு நாம் அழைக்கப்படவுமில்லை.
2011 மே மாதம் இந்தியாவுக்கு பயணம் செய்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் 13 ஆம் திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் அதிகாரப்பகிர்வு வழங்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது என்று இந்திய அரசிடம் கூறினார்.
2012 இலும் இந்திய அரசுக்கு இலங்கை இதுபோன்றதொரு வாக்குறுதியை மீண்டும் அளித்தது. இணைத்தலைமை நாடுகளுக்கும் இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் தீர்வு தொடர்பாக அரசும் தமிழ்க் கட்சிகளும் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளன என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க இப்போது தெரிவித்துள்ளார். எமது கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்குமிடையில் 2011 ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட பேச்சு எந்தவித முன்னேற்றமுமின்றி ஒருவருடமாகத் தொடர்ந்தது.
இந்தப் பேச்சுகளில் எட்டப்படும் இணக்கப்பாடுகள் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு சமர்ப்பிப்பது என்றும், அந்த இணக்கப்பாடு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்துகொள்வது என்றும் இருதரப்புகளுக்குமிடையிலான கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.
பேச்சைத் தொடர்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பிரதிநிதிகளை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு நியமிக்கவேண்டும் என்று முன்நிபந்தனை ஒன்றை விதித்து அரசு ஏற்கனவே எட்டப்பட்ட இணக்கப்பாட்டை மீறி ஜனவரி 2012 இல் பேச்சில் இருந்து பின்வாங்கியது.
மேற்கொள்ளப்பட்ட அரசின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் பார்க்கும்போது அரசு அர்த்தமுள்ள எந்தவொரு நிலையான அரசியல் தீர்வையும் முன்வைப்பதற்கு முயற்சிக்கவில்லை என்பது தெரிகின்றது.
ஆகவே, அரசியல் தீர்வை முன்வைப்பதற்காக இலங்கை அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருப்பதில் எந்தவொரு உண்மையுமில்லை. இக்கூற்று சர்வதேச சமூகத்தைப் பிழையாக இட்டுச்செல்கின்றது.
அதேபோல், மனித உரிமைகளைப் காப்பது தொடர்பிலான அரசின் உறுதிமொழியும் அவ்வாறேதான் உள்ளது.
திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்டமை மற்றும் மூதூரில் தொண்டு நிறுவனப் பணிப்பாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக “உதலாகம’ ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது.
அனைத்துவிதமான மனித உரிமை மீறல்களும் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் நீதிமன்றில் நிறுத்தப்படுவார்கள் என்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியும், ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கான இலங்கைப் பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினருமான கயந்த கொடகொட 2008ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி மனித உரிமைகள் சபையிடம் உறுதியளித்தார்.
ஆனால், இந்த விசாரணை முடிவுகள் பகிரங்கப்படுத்தப்படவோ, குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவோ இல்லை. அத்தோடு, அந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் முழுமை பெறாது முடிவுக்கு வந்தது. அந்த விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதா இல்லையா என்றும் தெரியாது.
2006இல் கொழும்பில் தமிழர்கள் கடத்தப்படுவதும் கப்பம் பெறுவதும் அதிகரித்திருந்தது. இதை விசாரணை செய்வதற்காக மஹானாம திலகரட்ன ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது. அந்த ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவிருந்தது. அந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்படவுமில்லை. குற்றவாளிகள் ஒருவரேனும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவுமில்லை.
நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால சிபாரிசுகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 17 மற்றும் 18ஆவது கூட்டங்களில் இலங்கை அரசு உறுதியளித்தது. அந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், கடந்த 5 மாதங்களாக 32 பேர் காணாமல் போயுள்ளனர் அல்லது கடத்தப்பட்டுள்ளனர். பத்து சடலங்கள் பொதுஇடங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. வடக்கில் அதிகமான பெண்கள் துணை ஆயுதக்குழுக்களால் நடத்தப்படும் விபசாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு, கிழக்கின் மொழி மற்றும் கலாசாரம் ஆகியவற்றை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளில் அரசும், அரச படையும் ஈடுபட்டுள்ளன. இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டு புத்தரின் சிலைகள் எழுப்பப்படுகின்றன.
இந்நிலையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த அரசுக்குப் போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை என்று அரசு கூறுகின்றது. அரசு போதிய கால அவகாசத்தைக் கோருவது வடக்கு, கிழக்கின் ஜனநாயக நிலைமையை இல்லாது செய்யும் நிகழ்ச்சிநிரலை நடத்திச்செல்வதற்கே தவிர, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அல்ல.
ஆகவே, ஐ.நா. மனித உரிமைகள் சபை இந்த விடயத்தில் சரியாகச் செயற்படத் தவறின், இலங்கை தமது பொறுப்பிலிருந்து மிக இலகுவாகத் தப்பித்துவிடும். இலங்கையில் நீதி, நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை நிலைநாட்ட மனித உரிமைப் பேரவையில் தனது 19ஆவது கூட்டத்தொடரில் எடுக்கும் நடவடிக்கைக்கு எமது கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment