Translate

Wednesday 25 April 2012

நமது உற்பத்திகள் தனித்துவ அடையாளங்களுடன் பெயர் பெறவேண்டும்: பா.உறுப்பினர் சி. சிறீதரன்


லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் பரோபகாரியான கோபாலகிருஸ்ணன், தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வு மேம்பாட்டை கருத்திற் கொண்டு, கிளிநொச்சியில் இராமநாதபுரம் கல்மடுநகர், அம்பாள்குளம், கிராஞ்சி போன்ற பிரதேசங்களில் அகிலன் தையல் பயிற்சி நிலையங்களை நிறுவி இலவச தொழில் பயிற்சியை மேற்கொண்டிருந்தார்.
அப்பயிற்சி நிலையங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய, இராநாதபுரம் கல்மடுநகர் அகிலன் தையல் பயிற்சி நிலையத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் தையல் பயிற்சிகளை பயின்று நிறைவு செய்துள்ளனர்.

இதன் வளர்ச்சியாக பற்றிக் பயிற்சி, போரினால் பாதிக்கபட்ட பெண்களால் தயாரிக்கபடும் கற்பகா புடவையகம் என்பன உருவாக்கம் பெற்றுள்ளன. இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வுகள் இராமநாதபுரம் கல்மடுநகர் அகிலன் தையல் பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு தையல் பயிற்சி நிலையத்தின் தலைவி சந்திரா தலைதாங்கினார். அகிலன் அறக்கட்டளை நிலைய நிறுவுனர் கோபாலகிருஸ்ணன், பா.உறுப்பினர் சிறீதரன் உட்பட கரைச்சி பிரதேச சபை தலைவர் குகராசா, உறுப்பினர்களான பொன்னம்பலநாதன், சிவச்செல்வன், குமாரசிங்கம் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
செல்லத்துரை மற்றும் பிரமுகர்கள் மாலை அணிவித்து வரவேற்பு நடனத்துடன் அழைக்கப்பட்டனர். அடுத்து கற்பகா புடவையக பெயர் பலகையினை பிரதேசசபை தலைவர் குகராசா திரைநீக்கம் செய்து வைத்தார்.
பின்பு புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள பற்றிக் பயிற்சி மண்டபத்தை அகிலன் அறக்கட்டளை நிலைய நிறுவுனர் கோபாலகிருஸணன் நாடாவை வெட்டி திறந்துவைத்தார்.
அடுத்து அகிலன் தையல் பயிற்சி நிலைய மாணவர்களின் ஆடைக் கண்காட்சி மண்டபத்தினை பா.உறுப்பினர் சி.சிறீதரன் திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து மண்டப நிகழ்வுகள் இடம்பெற்றன.
அங்கு பயிற்சி ஆசிரியர் மற்றும் மாணவர்கள் விருந்தினர்களால் கௌரவிக்கப்பட்டனர். அத்தோடு கோபாலகிருஸ்ணன் பா.உறுப்பினர் சி.சிறீதரன் ஆகயோர் பொன்னாடை அணிவித்து மதிப்பளிக்கப்பட்னர்.
இங்கு கலந்துகொண்ட பா.உறுப்பினர் சிறீரதரன் உரையாற்றும்போது,
புலம்பெயர் தமிழர்களின் பெருமைகளில் ஒருவராக கோபால் அண்ணன் எம்மிடையே இருக்கிறார். ஏனெனில் பேரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வு மேம்பாட்டுக்காக ஒரு கோடிக்கு மேல் இம்மாவட்டத்தில் உதவி செய்துள்ளார்.
அதனொரு அங்கமாக இந்த அகிலன் தையல் பயிற்சி நிலையம் வளர்ச்சி பெற்று வருகின்றது. இன்று இது பலருக்கு தொழில் ஆதாரத்தை வழங்கியுள்ளது. ஆயினும் இது ஒரு தொழிற்பேட்டைக்கான அடிப்படையை பெற்றுள்ள நிலையில், நாம் தனித்துவமான தரத்துடன் ஆடைகளை உருவாக்க முனைப்புக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
பல ஊர்கள் அங்கு செய்யப்படும் உற்பத்திகளாலேயே பெயர்பெற்றுள்ளன. அந்த நிலை இந்த இராம நாதபுரம் அகிலன் தையல் பேட்டைக்கும் சாத்தியமாகவேண்டும். இங்கு ஒரு சிறுபொறியாக இது ஊற்றெடுத்து வியாபிக்க வேண்டும்.
இது உங்களின் கைகளிலேயே உள்ளது. இன்று பல்வேறுபட்ட அடக்கு முறைக்குள்ளாகவே நாம் வாழ்க்கை நடாத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். இவற்றை எதிர்கொண்டு வாழ்க்கை வெற்றிகரமான திசையில் கொண்டு நடத்த வேண்டும்.
முன்பு இம் மண்ணில் சுயதொழில்களும் வேலைவாய்ப்புகளும் தாராளமாக இருந்தன இன்று அந்த நிலை இல்லை. வறுமையும் வேலைவாய்ப்பு இன்மையும் நம்மிடையே தலைவிரித்து ஆடுகின்றது.
அரசாங்கத்தால் செய்யப்படும் அபிவிருத்தி மாயைக்குள் எமது சுயமுயற்சிகளுக்கு இடமில்லை. எமது பிரதேசங்களில் எவன் எவனோ பணம் உழைத்து போகின்றான்.
நாம் பொருளாதார ரீதியிலும் அடிமைகளாக வாழ திணிப்புகள் நடக்கின்றன. எனவேதான் இத்தகைய தொழில் முயற்சிக்கான மூலதாரங்களை நீங்கள் பொருதாரம் நோக்கிய திட்டங்களுடன் பயன்படுத்த வேண்டும். இன்று எமது மக்களின் சேதி சர்வதேச அரங்கில் முக்கிய இடம்பெற்றுள்ளன.
அந்த அடிப்படையில் இருந்து ஒரு சரியான உரிமையுடன் கூடிய ஜனநாயக சூழலை கட்டியெழுப்ப தமிழர்கள் உலகளாவிய ரீதியில் பாடுபடுகின்றார்கள்.
ஏனெனில் இந்த நாட்டில் தமிழர்களில் எதிர் காலத்தை இருளுக்குள் தள்ளும் ஆபத்து நிறைந்த திட்டங்கள் விதைக்கப்படுகின்றன. பேச்சுச் சுதந்திரம் கூட மறுக்கப்படும் நிலைதான் இந்த நாட்டில் நிலவுகின்றது.
ஏனெனில் எத்தகைய அதலபாதாளத்தில் வாழ்கிறோம் என்பதை உணரமுடியும். எனவே சிறுகசிறுக பல முயற்சிகளில் ஈடுவதன்மூலம் ஒட்டுமொத்தமான விளைவு எமது இனத்திற்கு நன்மை தருவதாக அமையும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment