Translate

Monday 23 April 2012

இலங்கை அரசை நம்ப முடியாது: நாடாளுமன்றக் குழுவில் சேர தமிழ் தேசிய கூட்டமைப்பு மறுப்பு


இலங்கை அரசை நம்ப முடியாது:

கொழும்பு: இனப் பிரச்சனைக்கு தீர்வு காண இலங்கை அரசு அமைக்கும் நாடாளுமன்ற குழுவில் சேர தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுத்துள்ளது. 

இலங்கையில் நிலவி வரும் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண அதிபர் ராஜபக்சே தலைமையிலான அரசு நாடாளுமன்றத் குழு ஒன்றை அமைக்கிறது. இந்த குழுவில் சேர தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சமீபத்தில் இலங்கை சென்று திரும்பிய இந்திய எம்.பிக்கள் குழுவும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இதுதொடர்பாக கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. 

இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தமிழ் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், 

இனப் பிரச்சனையை தீர்க்க இலங்கை அரசு அக்கறை காட்டுகிறது என்று உலகை நம்பவைக்கவே நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைக்கிறார்கள். இது ஏமாற்று வேலையாகும். இதற்கு முன்பு அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் குழுக்கள், ஆணையங்கள் ஆகியவற்றைப் பார்க்கையில் இந்த முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கிறது. 

வரும் நவம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கை மனித உரிமை நிலை குறித்த விவாதம் நடக்கிறது. அப்போது இனப்பிரச்சனைகளைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, அதனால் மனித உரிமைகள் விஷயத்தில் காலஅவகாசம் வேண்டும் என்று கேட்கத் தான் இந்த குழு அமைக்கப்படுகிறது. 

இந்த குழுவில் சேருமாறு இலங்கை வந்த இந்திய எம்.பி.க்கள் குழு தலைர் சுஷ்மா ஸ்வராஜ் கோரிக்கை விடுத்தார். ஆனால் வாக்குறுதிகளை மீறுவதையே வழக்கமாக வைத்திருக்கும் இலங்கை அரசை நம்ப முடியாது என்பதால் தான் அவரது கோரிக்கையை ஏற்க முடியவில்லை. 

1990களில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது குறி்த்து மங்கள மூனிசிங்க தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்வுக்குழு 100க்கும் மேற்பட்ட முறை கூடி விவதாதித்ததே தவிர அதன் பரிந்துரைகள் எதுவும் அமல்படுத்தப்படவில்லை. அதன் பிறகு அமைக்கப்பட்ட இன்னொரு நாடாளுமன்றத் தேர்வுக்குழு தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் சாசன வரைவைத் தயார் செய்து கொடுத்தது. ஆனால் நாடாளுமன்றத்தில் அந்த வரைவை எதிர்கட்சியினர் எரித்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டுவிட்டது. 

ராஜபக்சே அதிபரான பிறகு அதிகாரப் பகிர்வு அளிப்பது குறித்து நிபுணர் குழுவின் உதவியுடன் செயல்படும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைகளும் அமல்படுத்தப்படவில்லை. 

கடந்த 2010ம் ஆண்டில் அமைக்கப்பட்ட போர்ப் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையம் அளித்த அறிக்கையை முழுமையாக அமல்படுத்த முடியாது என்று அமைச்சர்கள் ஜி.எல்.பெரீஸ், நிமல் ஸ்ரீபல டி சில்வா ஆகியோர் தெரிவித்தனர். 

கடந்த ஜனவரி மாதம் இலங்கை வந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவிடம் தமிழர்களுக்கு நிச்சயம் அதிகாரப் பகிர்வு அளிப்போம் என்று ராஜபக்சே உறுதியளித்தார். ஆனால் கிருஷ்ணா நாடும் திரும்பும் முன்பே தான் அப்படி ஒரு வாக்குறுதியை அளிக்கவில்லை என்று அவர் மறுத்துவிட்டார். 

இதையடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைத்து ஒப்புதல் பெறலாம் என்று ராஜபக்சே தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு மாறாக அரசு தானாக பேச்சுவார்த்தையில் இருந்து விலகிக் கொண்டது. இவ்வாறு கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் காப்பாற்றாத அரசை நம்பி எப்படி அந்த குழுவில் சேர முடியும். 

இந்திய எம்.பி.க்களின் கோரிக்கையை ஏற்று நாங்கள் நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் சேர்ந்தால் இலங்கைத் தமிழர்கள் எங்களை ஜோக்கர்கள் என்று தான் நினைப்பார்கள் என்றார். 

No comments:

Post a Comment