Translate

Monday, 16 April 2012

இலங்கை நெருக்கடியில் சர்வதேசத் தலையீடுகளும் தமிழர் அரசியலின் எதிர்காலமும் : தினகுரல் ஆசிரியர் தனபாலசிங்கம்


இலங்கை இன்று எதிர்நோக்குகின்ற நெருக்கடிகள் இரண்டு தளங்களில் தீவிரமடைந்து காணப்படுகின்றன. ஒன்று உள்நாட்டுப் போரின் முடிவிற்குப் பின்னரும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு முன்னெடுக்கப்படவேண்டியிருக்கின்ற செயன்முறைகள் பற்றி கிஞ்சித்தேனும் அக்கறையின்றி இருக்கின்ற அரசாங்கத்தின் பொறுப்பற்ற போக்கின் விளைவாக மூண்டிருக்கின்ற பிரச்சினைகள். மற்றையது நாட்டு மக்களை இன, மத, பேதமின்றி படுமோசமாகத் திணறடித்துக்கொண்டிருக்கின்ற முன்னென்றுமில்லாத வகையிலான பாரதூரமான பொருளாதாரப் பிரச்சினைகள்.

இந்தப் பொருளாதார நெருக்கடியின் விளைவான இடர்பாடுகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கு இனநெருக்கடியுடன் தொடர்புடைய சர்ச்சைகள் அரசாங்கத்திற்கு தாராளமாக உதவிக் கொண்டிருக்கின்றன. இது விடயத்தில் அரசாங்கம் பெருமளவுக்கு அதன் நோக்கங்களில் வெற்றிகண்டிருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
சிங்கள மக்களின் அமோகமான ஆதரவைப் பெற்றிருக்கும் ஒரு தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இனநெருக்கடிக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு முன்னெடுக்க வேண்டிய முயற்சிகளுக்கு சிங்கள மக்களின் சம்மதத்தைப் பெறக்கூடிய ஒரு அனுகூலமான நிலையில் இருக்கிறார் என்று பல அரசியல் தலைவர்களும் அவதானிகளும் கூறிவந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களின் கருத்துக்களை இலங்கையின் யதார்த்தபூர்வமான அரசியல் நிலைவரங்களை முறையாகப் புரிந்துகொண்டதன் வெளிப்பாடுகளாகக் கருதுவதற்கில்லை.
சிங்கள மக்களின் அமோக ஆதரவைப் பெற்று ஆட்சியதிகாரத்திற்கு வந்திருக்கக்கூடிய இலங்கையின் எந்தவொரு ஆட்சியாளருமே இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தணிப்பதற்கோ, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான குறைந்தபட்ச அக்கறையைத்தானும் காட்டுவதற்கோ முயற்சித்ததில்லை. அத்தகைய சூழ்நிலையே தொடர்கிறது. இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கெனக் கூறிக்கொண்டு முன்னெடுக்கப்பட்டிருக்கக்கூடிய இதுவரையான செயற்பாடுகள் யாவுமே காலத்தை இழுத்தடிப்பதற்கான மூலோபாயங்களாக அமைந்தன என்பதே எமது இன நெருக்கடியின் வரலாறாகும்.
இதன் விளைவாக இலங்கைத் தமிழ், முஸ்லிம் மக்களும் மலையகத் தமிழ் மக்களும் ஒருங்குசேர்த்தே ஓரங்கட்டப்பட்டு ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். அவர்களைச் சமத்துவமான பிரஜைகளாக நோக்குவதில் அரசாங்கங்கள் காட்டி வந்திருக்கும் கர்வத்தனமான அலட்சியமே இறுதியில் உள்நாட்டுப் போரை மூள வைப்பதற்கு பிரதான காரணமாகியது. அந்தப் போர் சுமார் மூன்று தசாப்தங்களாக நீடித்து மூன்று வருடங்களுக்கு முன்னர் முடிவிற்கு வந்த போதிலும், நீறுபூத்த நெருப்பாக இருக்கும் இன நெருக்கடி இலங்கையைத் தொடர்ந்தும் வருத்திக் கொண்டேயிருக்கிறது. இத்தகையதொரு பின்னணியிலேயே இன்றைய இலங்கையின் ஒட்டுமொத்த அரசியல் நிலைவரத்தையும் ஆட்சியாளர்கள் சர்வதேச ரீதியில் எதிர்நோக்க வேண்டியிருக்கின்ற சவால்களையும் பார்க்க வேண்டியிருக்கிறது.
இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை வெளியுலகிலிருந்து அரசாங்கத்திற்கு வரக்கூடிய நெருக்குதல்களே தங்களது மீட்சிக்கான ஒரு பாதையைத் திறந்துவிடுமென்று தொடர்ந்தும் நம்பிக்கொண்டிருக்கவேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலை. அரசாங்கத்தைப் பொறுத்தவரையிலும் கூட, அத்தகையதொரு நம்பிக்கையிலிருந்து தமிழ் மக்கள் விடுபடக்கூடியதான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு அக்கறைகாட்டுவதற்குத் தயாராக இல்லை.
உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து சுமார் 3 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் கூட, தேசிய நல்லிணக்கத்தை நோக்கிய பயனுறுதியுடைய எந்தவொரு அரசியல் சமிக்ஞையையும் தமிழ் மக்களுக்குக் காட்டாமல் இருந்துவரும் அரசாங்கத்திற்கு விடுதலைப் புலிகளின் இடத்திற்கு புதிய எதிர்நிலைச் சக்தியொன்று தேவைப்படுகிறது.
சோவியத் யூனியனின் தகர்வையடுத்து முடிவுக்கு வந்த கெடுபிடி யுத்தத்திற்குப் பிறகு உலகின் ஒரேயொரு வல்லரசாக விளங்கிய அமெரிக்கா உலகின் மீதான அதன் மேலாதிக்க வேட்கையைத் தொடருவதற்காக புதியதொரு எதிரியைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. 2001 செப்டெம்பர் 11 ஆம் திகதி நியூயோர்க்கிலும் வாஷிங்டனிலும் இடம்பெற்ற இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்களையடுத்து அமெரிக்காவுக்கு வசதியான ஒரு எதிரி கிடைத்தான். பயங்கரவாதத்திற்கெதிரான உலகளாவிய போர் என்ற போர்வையில் கடந்த ஒரு தசாப்த காலமாக உலக மேலாதிக்கத்திற்கான தனது வியூகங்களை அமெரிக்கா வகுக்கக்கூடியதாக இருந்தது. ஆனால், அதே வியூகங்களின் விளைவான நெருக்கடிகளின் சகதிக்குள் இருந்து எவ்வாறு கௌரவத்துடன் வெளியேறுவது என்றே வாஷிங்டன் இப்போது திணறிக்கொண்டு நிற்கிறது.
அதேவேளை, புதிய உக்திகளை வகுத்து முன்னெடுப்பதில் அமெரிக்கா தொடர்ந்தும் அக்கறை காட்டிக்கொண்டே இருக்கிறது. அதனடிப்படையிலேயே அதன் ஆசியபசுபிக் பாதுகாப்புத் திட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. அதற்கான எதிரிகளையும் நண்பர்களையும் இனங்கண்டு வகைப்படுத்தும் கைங்கரியங்களில் வாஷிங்டன் ஈடுபட்டிருக்கின்றது. அது வேறு விடயம்.
அதேபோன்றே இலங்கையின் உள்நாட்டு போரின் முடிவிற்குப் பிறகு அரசாங்கத்திற்கு அதன் பேரினவாத நிகழ்ச்சித் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு வசதியாக ஒரு எதிரியைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. அந்த எதிரியை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இருக்கக்கூடிய விடுதலைப் புலிகளின் ஆதரவுச் சக்திகளின் வடிவில் அரசாங்கத்தினால் கண்டுபிடிக்கக்கூடியதாக இருந்தது.
அந்தச் சக்திகளினால் முன்னெடுக்கப்படுகின்ற அரசியல் செயன்முறைகள் நீண்ட கால நோக்கில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எத்தகைய பயன்களைக்கொண்டுவரக்கூடியதாக இருக்குமென்பது விவாதத்திற்குரியதாக இருக்கின்ற போதிலும் அரசாங்கத்தைப் பொறுத்தவரை வசதியான ஒரு எதிரியாக அவை அமைந்துவிட்டதை யாரும் மறுதலிக்கமாட்டார்கள்.
இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்கள் இதுகாலவரையில் முன்னெடுக்கப்பட்டுவந்த முறைமைகளைப் பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கக்கூடிய பிரிவினரும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இருக்கின்ற போதிலும் கூட ஒட்டுமொத்தமாக புலம்பெயர் தமிழர்களை எதிரிகளாகச் சிங்கள மக்களுக்குக் காட்டுவதன் மூலமாக அரசாங்கத்தினால் அரசியல் ஆதாயத்தைப் பெறக்கூடியதாக இருக்கிறது.
இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களைப் பொறுத்தவரை முக்கியமான பிரச்சினை கடந்த பல வருடங்களாக அவர்கள் மத்தியில் கட்டுறுதியான ஒரு அரசியல் சமுதாயம் ஆரோக்கியமான சிந்தனைகளின் அடிப்படையில் செயற்பட முடியாமல்இருந்து வரும் நிலைவரமாகும். உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகு தமிழ் மக்கள் தங்கள் மத்தியில் வலுவான அரசியல் சமுதாயமொன்று இல்லாதவர்களாக வெற்றிடமொன்றிலேயே விடப்பட்டிருந்தார்கள். இந்த அரசியல் வெற்றிடத்தைத் தோற்றுவிக்கும் பணி உள்நாட்டுப் போரின் ஒரு கணிசமான இடைக்கட்டத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட்டிருந்தது என்பதை தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்கள் வழிநடத்தப்பட்டு வந்திருக்கக்கூடிய மார்க்கங்களை நன்கு நிதானத்துடன் திரும்பிப்பார்ப்பதற்கு மனம் கொண்டவர்களினால் விளங்கிக்கொள்ளக்கூடியதாக இருக்குமென்பது எனது உறுதியான நம்பிக்கை.
சுமார் மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்கள் வழிநடத்தப்பட்ட முறைகளில் இருக்கக்கூடிய மிகவும் நடைமுறைச் சாத்தியமற்றதவறான அணுகுமுறைகளே தமிழ் மக்களை இத்துணை தியாகங்களுக்கும் இழப்புகளுக்கும் பின்னரும் கூட அரசியல் அநாதைகளாக்கி நாட்டின் எல்லைகளுக்கப்பாலிருந்து ஏதாவது அசரீரி வருகிறதா என்று ஏக்கத்துடன் ஒவ்வொரு நாளையும் கழிக்க வேண்டிய அவல நிலையைத் தோற்றுவித்தது. இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லாத எவருமே தமிழ் மக்களைச் சரியான பாதையில் மீண்டும் வழிநடத்துவதற்கான பக்குவத்தைக் கொண்டிருக்க முடியாது என்பதும் எனது அபிப்பிராயம்.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் சகல அம்சங்களிலுமே ஆயுதமேந்திய இயக்கத்தின் வன்முறைக் கலாசாரம் ஆதிக்கம் செலுத்துவதற்கு இடமளிக்கப்பட்டதன் விளைவாகவே ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குப் பிறகு அந்தப் போராட்டம் ஆரோக்கியமான தடத்தில் செல்ல முடியாமல் போனது. தென்னாபிரிக்காவில் வெள்ளையரின் இன ஒதுக்கல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகப் போராடிய ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அதன் நூற்றாண்டுப் பூர்த்தியை இரு மாதங்களுக்கு முன்னர் கொண்டாடியது. அப்போது தென்னாபிரிக்க கறுப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்தின் வெற்றியைச் சாத்தியமாக்கிய கறுப்பினத் தலைவர்களின் தூரநோக்குடனான செயற்பாடுகள் பற்றி சர்வதேச ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்ட பல அரசியல் அவதானிகள் அன்று ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவர்கள் மத்தியில் ஆயுதப் போராட்டத்தில் தீவிர முனைப்புக்காட்டியவர்களை விடவும் அந்தப் போராட்டத்தின் சகல அம்சங்களிலும் ஆயுதமேந்திய கெரில்லா இயக்கத்தின் செல்வாக்கு மேலாதிக்கம் செலுத்தாது இருப்பதை உறுதி செய்யக்கூடிய அரசியல் துணிச்சலும் விவேகமும் கொண்டவர்கள் பலம்பொருந்தியவர்களாக விளங்கியதை பிரத்தியேகமாகச் சுட்டிக்காட்டியிருந்தனர். இந்த இடத்திலே தான் நம் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் போராட்டங்களின் கொள்கைகள், தந்திரோபாயம் ஆகியவை எவ்வாறானவையாக அமைந்திருந்தன என்பது பற்றிய சுய பரிசீலனை அவசியமாகிறது.
எமது கடந்த காலத்தை அக உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு திரும்பிப் பார்ப்போமாக இருந்தால் இதுவிடயத்தில் இருக்கக்கூடிய மறுதலிக்க முடியாத உண்மையை புரிந்துகொள்வதில் எவருக்கும் சிரமமிருக்க முடியாது.
இனிமேலும் கூட கண்ணாடியில் நிலாவைக் காட்டும் அரசியலைத் தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்கக்கூடாது . அந்த மக்கள் மத்தியில் கட்டுறுதியான ஒரு அரசியல் சமுதாயத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய பணி வேறு யாருக்கும் உரியதல்ல. அதற்கென ஆகாயத்திலிருந்து யாருமே குதிக்கப் போவதுமில்லை. இன்று எஞ்சியிருக்கக்கூடிய தமிழ்க் கட்சிகளும் குழுக்களுமே கடந்த ஆறு தசாப்த கால போராட்டங்களில் இருந்து பெறக்கூடியதாக இருக்கும் கசப்பானதும் அதேவேளை கனதியானதுமான அனுபவங்களிலிருந்து முறையான படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு தற்போதைய நிலைவரங்கள் வேண்டி நிற்பதற்கு இசைவாக கொள்கைகளையும் தந்திரோபாயங்களையும் வகுக்க வேண்டும்.
போரின் முடிவுக்குப் பின்னரான கடந்த மூன்று வருட காலத்தில் தமிழ்க் கட்சிகளும் குழுக்களும் அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியைச் செய்வதில் தங்களுக்கு இருக்கக்கூடிய பொறுப்பை உணர்ந்து மானசீகமாக அக்கறைகாட்ட வில்லை என்பதே உண்மையாகும். எவர் மீதும் வசைபாட வேண்டுமென்பதற்காகவோ அல்லது குறைகூற வேண்டுமென்பதற்காகவோ இதை நான் கூறவில்லை. ஆயுதப் போராட்டமோ போரோ முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால், அதேபோராட்டங்களுக்கு அடிப்படைக் காரணியாக அமைந்த தேசிய இனப் பிரச்சினை இன்னமும் முடிவுக்கு வரவில்லை. நீறு பூத்த நெருப்பாகவே அந்தப் பிரச்சினை எம்முன் விரிந்து கிடக்கின்றது.
வன்னியில் முல்லைத்தீவின் கரையோரத்தில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த அரசாங்கப் படைகள் தேசிய இனப்பிரச்சினையையும் சேர்த்தே அங்கு கடற்கரை மணலில் புதைத்துவிட்டதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கடும் போக்கு சிங்கள பௌத்தவாத அரசியல் சக்திகள் பிரகடனம் செய்ததை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். கடந்த மூன்று வருட காலத்தில் இலங்கையின் அரசியல் நிகழ்வுப் போக்குகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது அந்தக் கடும் போக்குச் சக்திகள் மாத்திரமல்ல, தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தின் பெரும் பகுதியும் தேசிய இனப் பிரச்சினை முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்டுவிட்டது என்ற மனோபாவத்திலேயே இருக்கிறது என்று தான் கூற வேண்டியிருக்கிறது.
இலங்கைத் தமிழ் மக்கள் அவர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்காக துணிவாற்றலுடன் குரல் கொடுக்கக்கூடிய அரசியல் தலைமைத்துவத்தை மீண்டும் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலை உருவாக வேண்டுமென்பதற்காக தமிழ் ஊடகங்கள் குறிப்பாக தனியார் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ்ப் பத்திரிகைகள் இடையறாது பல்வேறுபட்ட நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் குரல் கொடுத்து வருவதை நீங்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
வரலாற்றுப் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நிலைவரங்களுக்கு ஏற்ற முறையில் உரிமைப் போராட்டத்தை வேறு வடிவங்களில் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. போராட்டமொன்று முடிந்துவிட்டதாக எவராவது கருதுவாரேயானால் அவர் வரலாறு பற்றி அறியாதவர் என்பதே அர்த்தமாகும். போராட்டம் முடிந்துவிட்டது என்பது அல்ல அவர் போராட்டத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டார் என்பதே உண்மையாகும். பிரிட்டிஷாரிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான முதல் மூன்று தசாப்தங்களில் தமிழ் மிதவாதத் தலைவர்களினால் முன்னெடுக்கப்பட்ட அமைதிவழிப் போராட்டங்களில் இருந்தும் அடுத்த மூன்று தசாப்தங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டங்களிலிருந்தும் படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு கடந்த காலத்தைய வக்கிரத்தனமான அரசியல் குரோதங்களிலிருந்து விடுபட்டு தமிழ்க் கட்சிகளும் குழுக்களும் புதிய பாதையில் செல்வதற்கு முன்வரக்கூடுமென்று எதிர்பார்த்த தமிழ் மக்களுக்கு பலத்த ஏமாற்றமே மிஞ்சியது.
என்னதான் தங்களுக்குள் பழைய குரோதங்கள் இருந்தாலும் தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வென்று வரும்போது ஒன்றுபட்டு கருத்தொருமிப்பின் அடிப்படையில் குரல்கொடுக்க தற்போதைய தமிழ்க் கட்சிகளும் குழுக்களும் முன்வந்திருக்க வேண்டும். ஆரம்ப நடவடிக்கையாக இராணுவமயமாக்கலை அகற்றி மனித உரிமைகளை மதிக்கும் ஜனநாயக சூழ்நிலையைத் தோற்றுவிக்கக்கூடிய செயன்முறைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென்றும் சிவில் நிர்வாகத்தின் சீரமைப்பை உறுதிப்படுத்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுப்பதில் ஐக்கியப்பட்டு நின்றிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாதிருந்ததன் மூலமாக அவை புதிய அரசியல் பருவ நிலையில் தங்களின் பொருத்தப்பாட்டை தாங்களாகவே கேள்விக்குள்ளாக்கியிருந்தன என்று தான் கூற வேண்டியிருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள்
போரின் முடிவுக்குப் பிறகு நடைபெற்றிருக்கக்கூடிய சகல தேர்தல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே தங்களது பிரதான அரசியல் பிரதிநிதிகளாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தெரிவு செய்திருப்பதால் அக்கூட்டமைப்பின் தலைவர்கள் கடந்த மூன்று வருட காலத்திலும் கடைப்பிடித்துவந்திருக்கும் அணுகுமுறைகளின் தார தம்மியங்கள் பற்றி இச்சந்தர்ப்பத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் சார்பில் எந்த அரங்கில் என்றாலும் ஏகபிரதிநிதிகளாக பேசக்கூடிய தகுதியைக்கொண்டவர்களாக இருந்தார்கள் என்ற நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் எடுத்ததற்கான காரண காரியங்களை இக்கட்டத்தில் அலசப்புறப்படுவது அவசியமற்ற ஒன்று.
ஆனால், கடந்த மூன்று வருட காலத்திலும் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தேர்தல்களில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் என்ன காரணத்திற்காக தங்களுக்கு வாக்களித்தார்கள் என்பதை கூட்டமைப்பின் தலைவர்களில் சிலர் புரிந்துகொண்டிருக்கிறார்களா என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது.
2010 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது பதவிக்காலத்திற்கு மக்களின் ஆணையைக் கேட்டுநின்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகா உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்திற்குத் தலைமை தாங்கியவர் என்பதைக் கூட கருத்தில் எடுக்காமல் வடக்கிலும் கிழக்கிலும் மலையகத்திலும் கூட தமிழ் மக்கள் அதிகப் பெரும்பான்மையாக அவரை ஆதரித்தார்கள். இறுதிக் கட்டப் போர் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில் அநேகமாக 2008 பிற்பகுதியில் என்று நினைக்கிறேன், பொன்சேகா கனடிய பத்திரிகையொன்றிற்கு அளித்த பேட்டியில் இலங்கையில் சிறுபான்மையின மக்கள் வேண்டுமானால் வாழ்ந்துவிட்டுப் போகலாம், ஆனால், பிரத்தியேகமான உரிமைகள் என்று எதனையும் கோருவதற்கான அருகதை அவர்களுக்கு இல்லை. இது சிங்களவர்களின் நாடு என்று கூறியிருந்தார். அத்தகைய ஒருவரை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டியேற்பட்டமை உண்மையிலேயே அவர்களை வரலாறு வஞ்சித்த ஒரு இருண்ட சந்தர்ப்பமாகவே நான் பார்க்கிறேன்.
அரசியல் ரீதியில் தங்களை நலமடித்தவர்கள் யார் என்பதை தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டதன் வெளிப்பாடாக மாத்திரமே ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் வாக்களித்த பாணியை நோக்கவேண்டுமேயன்றி வேறு எந்தவிதத்திலும் அல்ல.
அடுத்து வந்த தேர்தல்களில் அது பாராளுமன்றத் தேர்தல்களாக இருக்கலாம், உள்ளூராட்சி சபைகளுக்கு கட்டங்கட்டமாக நடத்தப்பட்ட தேர்தல்களாக இருக்கலாம், வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பெரும்பான்மையாக வாக்களித்ததற்கு பிரதான காரணம் அரசாங்கம் போரின் முடிவிற்குப் பிறகு தங்களது பிரச்சினைகள் தொடர்பில் கடைப்பிடித்து வந்திருக்கக்கூடிய கயமைத்தனமான அணுகுமுறைகள் பற்றிய தங்களின் உணர்வுப் பிரதிபலிப்புகளை கொழும்புக்கும் சர்வதேச சமூகத்திற்கும் வெளிக்காட்ட வேண்டுமென்பதற்காகவேயாகும். எந்தவிதமான துடிப்பான அரசியல் செயற்பாடுமே முன்னெடுக்கப்பட முடியாதிருந்த வேளையில், அதுவும் குறிப்பாக தேர்தல்களில் வாக்களிக்கக்கூடிய மனநிலையில் கூட அவர்கள் இல்லாதிருந்த வேளையில் தங்களை மீண்டும் தமிழ் மக்கள் ஆதரிக்க முன்வந்ததன் அடிப்படைக் காரணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் புரிந்துகொண்டிருக்க வேண்டும்.
எது எவ்வாறிருப்பினும் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே தேர்தல்கள் மூலமாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் பிரதான அரசியல் பிரதிநிதிகளாக விளங்குகிறார்கள். இலங்கை மீது நெருக்குதல்களைக் கொடுக்கின்ற சர்வதேச சமூகத்தின் வல்லாதிக்க நாடுகள் குறிப்பாக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் கூட தற்போதைய சூழ்நிலையில் தேசிய நல்லிணக்கத்தை நோக்கிய செயற்பாடுகளாக இருந்தாலென்ன, இன நெருக்கடிக்கான அரசியல் இணக்கத் தீர்வைக் காண்பதற்கான வழிவகைகளாக இருந்தாலென்ன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டியதே முக்கியமானதென்று அரசாங்கத்தை வலியுறுத்தி வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
இத்தகைய பின்புலத்திலே தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் அவர்களின் உரிமைகளுக்காக பயனுறுதியுடைய முறையில் துணிவாற்றலுடன் குரல் கொடுக்கக்கூடிய அரசியல் சமுதாயமொன்றைக் கட்டியெழுப்பும் பணியில் எந்தளவுக்குத் தங்களால் பங்களிப்பைச் செய்யக்கூடியதாக இருந்திருக்கிறது என்பதைப் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருகணம் பின்னோக்கிப் பார்ப்பதற்கு தார்மீக ரீதியான கடப்பாட்டைக் கொண்டவர்கள். இதையே அவர்களுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் அவர்களிடம் இப்பொழுது எதிர்பார்க்கிறார்கள்.
தனியார் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய தமிழ்ப் பத்திரிகைகளைப் பொறுத்தவரை போரின் முடிவுக்குப் பின்னரான அவற்றின் அணுகுமுறைகள் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது இனிமேல் வலுவானதாக இல்லாமல் சிதறுண்டதாக இருக்க வேண்டுமென்ற நோக்குடன் ஆட்சியதிகாரக் கட்டமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்ற சூழ்ச்சித்தனமான செயல்முறைகளுக்கான எதிர்வினையாகவே அமைந்துவந்திருக்கின்றன. இதுவே தமிழ்ப் பத்திரிகைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளவு கடந்த ஆதரவாகச் செயற்படுகின்றன என்ற தோற்றப்பாட்டைக் காட்டியது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டங்களின் வரலாற்றில் இன்றைய காலகட்டம் உண்மையில் சிக்கலானது மாத்திரமல்ல, தமிழ் மக்களுக்கான எதிர்கால வாய்ப்புக்கள் எத்தகையவையாக அமையப் போகின்றன என்பதைத் தீர்மானிக்கக்கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அர்ப்பணிப்புடனான பணியை தமிழ் அரசியல்வாதிகளிடம் வேண்டி நிற்பதுவுமாகும்.
இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னகப்படுத்தியிருக்கும் “அரசியல் வெளி’ இரு முனைகளிலும் கூரான ஆயுதத்தைப் போன்றதாகும். அண்மைக்காலத்தில் எம்மால் காணப்படக்கூடியதாக இருந்த தமிழ்க் கூட்டமைப்பின் அங்கத்துவ அணிகளுக்கிடையிலான முரண்பாடுகள் தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. இதை தமிழ் ஊடகங்கள் உணர்ந்திருக்கின்ற அளவுக்கு கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்கள் உணர்ந்திருக்கிறார்களா என்ற ஒரு சந்தேகம் இயல்பாகவே எழுகிறது.
எந்தவொரு அரசியல் பிரச்சினையிலும் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய பாத்திரங்களை அரவணைப்பதும் எதிர்ப்பதும் மக்கள் சமூகத்தின் பொது நலன்களை அடிப்படையாகக் கொண்டு அந்தந்த காலகட்டத்தின் சூழ்நிலைகள் வேண்டிநிற்கின்ற பிரதிபலிப்புக்களைப் பொறுத்தவையாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சகல அணுகுமுறைகளையும் ஆதரித்துத் தான் ஆக வேண்டுமென்று எந்த விதியும் தமிழ் மக்களுக்கும் தமிழ் ஊடகங்களுக்கும் இல்லை. ஆனால், இன்றைய காலகட்டத்தில் அக்கூட்டமைப்பைச் சிதறடிக்கக்கூடிய எந்தவிதமான ஒரு செயன்முறையினாலும் தமிழ் மக்களுக்கு பயனேற்படப்போவதில்லை.
இராஜதந்திர விவேகத்துடனான அணுகுமுறைகளைக் கடைப்பிடிப்பதே தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமானதாக இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகின்றது என்பதில் சந்தேகமில்லை. அதுவே கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருக்கிறது என்றால் அதுபற்றி சாதாரண தமிழ் மக்களுக்கு முறையான விளக்கப்பாடு ஏற்படக்கூடியதாகவே கூட்டமைப்பின் சகல தலைவர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் கருத்து வெளிப்படுத்தல்கள் அமைய வேண்டும். ஆனால், உண்மை நிலை அவ்வாறானதாக இல்லை. தமிழ் மக்களினால் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்ற காரணங்களுக்காக கூட்டமைப்பின் தலைவர்கள் முரண்பட்ட அறிக்கைகளை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்கள். இது தமிழ் மக்களை பெருமளவுக்கு குழப்ப நிலைக்குள்ளாக்கியிருக்கிறது. தங்களை தமிழ் மக்கள் நிராகரிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படாதிருப்பதை உறுதி செய்ய வேண்டிய விவேகமான அரசியல் அணுகுமுறையைக் கருத்தொருமிப்பு அடிப்படையில் கடைப்பிடிக்க வேண்டியது கூட்டமைப்பின் தலைவர்களின் பணியாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்கள் தங்களது அணிகளைத் தனித்தனியாக பலப்படுத்துவதற்கு அண்மைக்காலமாக முன்னெடுத்து வருகின்ற செயற்பாடுகள் கூட்டமைப்பின் சஞ்சலமான ஐக்கியத்திற்கு மேலும் ஆபத்தைத் தோற்றுவிக்கக்கூடியவையாக இருக்கின்றன என்பதை இக்கட்டத்தில் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. அத்தலைவர்கள் தங்கள் கட்சிகளின் தனித்துவங்கள் பற்றி எத்தகைய மாயையும் மருட்சியையும் கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி தமிழ் மக்கள் உண்மையிலேயே கிஞ்சித்தும் அக்கறைப்படுவதாக நான் நினைக்கவில்லை. ஐக்கியப்பட்ட அணுகுமுறை மூலம் தங்களது அரசியல் அபிலாசைகளுக்காக குரல் கொடுக்க வல்ல ஒரு அமைப்பே தங்களுக்கு இன்று தேவை என்பதில் தமிழ் மக்கள் மிகுந்த தெளிவாக இருக்கிறார்கள் என்பதை இத்தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமானதாகும்.
இந்தியா பற்றிய நோக்கு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் அணுகு முறைகளைப் பற்றி ஆராய்கின்றபோது இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை தொடர்பிலான இந்தியாவின் நிலைப்பாடுகள் பற்றி கவனத்தில் எடுக்க வேண்டியது அவசியமாகும்.
இந்தியாவின் பங்கும் ஈடுபாடும் இல்லாமல் இனப் பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதென்பது முடியாத காரியமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நம்பிக்கை கொண்டிருப்பதை விளங்கிக் கொள்வதில் எவருக்கும் சிரமமிருக்க முடியாது. அரசாங்கத் தலைவர்கள் கூட இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியாவின் பங்களிப்பு அத்தியாவசியமானது என்று இடையறாது கூறிக்கொண்டிருக்கின்ற போதிலும் அத்தகைய தீர்வைக் காண்பதில் இனிமேலும் காலம் தாழ்த்தக் கூடாது என்று இந்தியத் தரப்பினரால் வலியுறுத்தப்படுகின்ற சந்தர்ப்பங்களில் முகத்தைச் சுழித்துக் கொண்டே பிரதிபலிப்புகளை வெளிக்காட்டி வந்திருக்கிறார்கள்.
ஆனால், இந்தியாவின் அணுகுமுறைகள் தொடர்பில் முறையான விளக்கத்தைப் பெறுவதற்கு சில அடிப்படை உண்மைகளைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். இலங்கை இன நெருக்கடியுடன் தொடர்புடைய விவகாரங்களில் இந்தியாவின் அணுகு முறைகள் தொடர்பில் கடந்த பல தசாப்தங்களில் பெறக்கூடியதாக இருந்த அனுபவங்களை இலங்கைத் தமிழர்கள் மாத்திரமல்ல தமிழ் நாட்டுத் தமிழர்களும் இனிமேலும் கவனத்தில் எடுக்காமல் இருப்பது முறையானதல்ல. இது மிக மிக அவசியமான ஒரு விடயமாகும்.
இந்தியாவின் இலங்கைக் கொள்கையை வகுக்கும் செயன்முறைகளில் தமிழக அரசியல் சக்திகள் ஒருபோதுமே செல்வாக்குச் செலுத்தியதில்லை. இலங்கையில் தமிழ் மக்கள் அனுபவிக்க வேண்டியேற்படுகின்ற அவலங்கள் தொடர்பில் தமிழக மக்கள் வெளிக்காட்டியிருக்கக்கூடிய உணர்வுகளை ஓரளவுக்கேனும் மதித்து புதுடில்லி அதன் இலங்கைக் கொள்கையை வகுத்துக்கொண்டதில்லை.
ஆனால், இந்திய நலன்களுக்கு எதிராகச் செயற்பட்டிருக்கக்கூடிய இலங்கை அரசாங்கங்களை வழிக்குக் கொண்டுவர வேண்டுமென்று புதுடில்லி சிந்தித்திருக்கக்கூடிய காலகட்டங்களில் தேவையேற்பட்ட போது தமிழக அரசியல் சக்திகளையும் தலைவர்களையும் பயன்படுத்துவதில் மாத்திரம் அக்கறை காட்டப்பட்டிருக்கிறது. தமிழக மக்களின் உணர்வுப் பிரதிபலிப்புக்கள் இந்தியாவில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஆபத்து இருக்கிறது என்று புதுடில்லி கூறியிருக்கக்கூடிய சந்தர்ப்பங்களில் கூட, அந்தத் தாக்கங்கள் வெறுமனே இந்தியாவின் வியூகங்களுக்கு நியாயப்படுத்தல்களைத் தேடுவதற்கான ஒரு சாக்குப் போக்காகவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது வெளிப்படையானது.
இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நலன்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுடன் கொஞ்சிக் குலாவிய ஜே.ஆர்.ஜயவர்தன அரசாங்கத்திற்கு ஒரு பாடம் புகட்ட வேண்டுமென்று அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி தீர்மானித்த போது புதுடில்லியின் வியூகங்களுக்கு தமிழ் நாடு தவிர்க்க முடியாத வகையில் ஒரு தளமாக அமைந்தது. அந்த மாநிலத்தில் ஆட்சியிலிருந்த எம்.ஜி.ஆரைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் புதுடில்லிக்கு ஏற்பட்டது.
ஆனால், அதற்குப் பிறகு நிலைவரங்களில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிய போது தமிழ் நாட்டை இலங்கைக்கெதிராகப் பயன்படுத்துவதனால் தங்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை புதுடில்லி கொள்கை வகுப்பாளர்கள் புரிந்துகொண்டு புதிய அணுகுமுறைகளை வகுக்க ஆரம்பித்தனர். கால் நூற்றாண்டுக்கு முன்னர் ஜயவர்தனவுடன் சமாதான உடன்படிக்கையைச் செய்வதற்கு கொழும்பு வந்த போது எம்.ஜி.ஆரினால் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படும் விசனங்களை அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கவனத்தில் எடுக்கத் தயாராயிருக்கவில்லை. இலங்கைஇந்திய சமாதான உடன்படிக்கையின் பின்னரான புதுடில்லியின் அணுகுமுறைகள் பற்றி இங்கு விளக்க வேண்டியது அவசியமில்லை. அது நாமெல்லோரும் கடந்துவந்த அண்மைக்கால வரலாறாகும்.
இங்கு நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்ற விடயம் என்னவென்றால் இலங்கை தொடர்பான புதுடில்லியின் கொள்கைகளைப் பொறுத்தவரை தமிழகத்தின் அரசியல் உணர்வுகள் ஒருபோதும் செல்வாக்குச் செலுத்தவில்லை என்பதேயாகும்.
ஆனால், ஜெனீவாவில் கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்த இந்தியாவின் செயல் தமிழக அரசியல் சக்திகளினால் இலங்கை தொடர்பான புதுடில்லியின் கொள்கையில் செல்வாக்கைச் செலுத்தக்கூடிய நிலைவரமொன்று தோன்ற ஆரம்பித்திருக்கிறது என்ற தோற்றப்பாட்டைக் கொடுக்கப்பார்க்கிறது. ஆனால், அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டியேற்பட்ட சூழ்நிலைகளின் இயங்கியல் பற்றி விரிவாக ஆராய்ந்தால் உண்மை நிலைவரத்தைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது.
இது விடயத்தில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை தொடர்பிலான தமிழக அரசியல் சக்திகளின் அக்கறைகளுக்கும் புதுடில்லியின் தீர்மானங்களுக்கும் இடையில் இருக்கக்கூடிய தொடர்பின்மையை சரித்திர நிகழ்வொன்றுடன் தொடர்புபடுத்திக்காட்டுவது இச்சந்தர்ப்பத்தில் பொருத்தமானதாக இருக்கும்.
இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் கொழும்பு அரசாங்கத்தின் அனுசரணையுடன் கட்டவிழ்த்துவிடப்பட்ட முதலாவது இனவாத வன்முறைக்குப் பிறகு 1958 ஜூன் 22 ஆம் திகதி தமிழகமெங்கும் அண்ணா தலைமையில் “இலங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்புத் தினம்’ திராவிட முன்னேற்றக் கழகத்தினால் அனுஷ்டிக்கப்பட்டது. தி.மு.க.வினர் தங்களது கூட்டத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றியிருந்தனர். அன்று அண்ணாதான் தி.மு.க. வின் தலைவராக இருந்தார்.
“இலங்கையைத் தாயகமாகக் கொண்டுள்ள தமிழர்களுக்கு நியாயமாக அளிக்கப்பட வேண்டிய ஜனநாயக உரிமைகளை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இலங்கை அரசாங்கத்தை இணங்க வைக்கும் முறையில் தங்களுடைய நல்லெண்ணத்தையும் செல்வாக்கையும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டுமென்று இந்திய அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம். அந்த வகையில் இந்திய அரசாங்கத்தைச் செயற்படத் தூண்டுவதற்கு ஆவன செய்யுமாறு சென்னை அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சுமுக நிலை ஏற்பட வேண்டுமென்பதில் தி.மு.க. எந்தளவுக்கு அக்கறையும் விருப்பமும் கொண்டிருக்கிறது என்பதை இந்தத் தீர்மானத்தின் வாசகங்கள் உணர்த்தும். புதுடில்லியும் சென்னையும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு இதுநாள் வரையில் எவ்வளவு தான் துரோகம் செய்திருந்தாலும் இனியேனும் கொஞ்சம் சிரத்தை கொள்ள வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கிறோம்’ என்று அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதுடில்லியிலும் சென்னையிலும் அன்று காங்கிரஸ் தான் ஆட்சியில் இருந்தது. அதற்குப் பின்னரான காலகட்டத்தில் சென்னையில் காங்கிரஸ் ஆட்சி இல்லாமற் போய் திராவிட இயக்கக் கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்திருக்கின்ற போதிலும் கூட நிலைமைகளில் மாற்றம் ஏற்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியிலிருந்த சென்னை தான் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகமிழைத்தது என்றால் அண்ணாவின் தம்பிகளின் ஆட்சிகளில் சென்னையினால் என்ன வித்தியாசமாகவா செயற்பட முடிந்திருக்கிறது?
இலங்கையின் உள்நாட்டுப் போரின் முழுக்காலகட்டத்திலும் இந்தியாவின் அணுகுமுறைகளையும் செயற்பாடுகளையும் உன்னிப்பாக அவதானித்து வந்திருக்கக்கூடியவர்களுக்கு இது விடயத்தில் தடுமாற்றம் ஏற்படுவதற்கு இடமிருக்காது.
கடந்த வாரத்தைய ஜெனீவா தீர்மானத்தை ஆதரிப்பதற்கு முன்னதாக இந்தியாவினால் வெளிக்காட்டப்பட்டிருக்கக்கூடிய தடுமாற்றங்கள் இலங்கை நெருக்கடியைப் பொறுத்தவரை புதுடில்லி கடைப்பிடித்து வந்த தூரநோக்கற்ற கொள்கைகளின் விளைவானவையேயாகும். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எந்த ஒரு நாட்டின் பெயரைப் பிரத்தியேகமாகக் குறிப்பிட்டுக் கொண்டுவரப்படக்கூடிய தீர்மானங்களை ஆதரிப்பதில்லை என்பதே இந்தியாவின் கொள்கை என்று கூறப்பட்டது.
அத்தகைய உறுதியான கொள்கையொன்றையும் மீறி தமிழக மக்களினதும் அரசியல் கட்சிகளினதும் உணர்வுகளுக்கு மதிப்பளித்ததுபோன்று காட்டிக்கொண்டு மன்மோகன் சிங் அரசாங்கம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டியேற்பட்டதற்கு அடிப்படைக் காரணம் அந்த அரசாங்கத்தின் இருப்புக்கு அச்சுறுத்தலைத் தோற்றுவிக்கக்கூடியதாக உள்நாட்டு அரசியல் நிலைவரங்கள் மாறியமையேயாகும்.
உள்நாட்டு அரசியல் நிர்ப்பந்தங்கள் தான் மன்மோகன் சிங் அரசாங்கத்தை இத்தடவை இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றும் உறுதியான நிலைப்பாட்டிலிருந்து சிறிது இடறவைத்தது. அதை புரிந்து கொண்ட முறையிலேயே ஜெனீவா வாக்கெடுப்புக்கு பின்னதாக தென்னிலங்கை பிரதான அரசியல் சக்திகளின் இந்தியா பற்றிய விமர்சனங்கள் அமைவதை காணக்கூடியதாக இருக்கிறது. தங்களது விரல் எவ்வளவுக்கு வீங்கும் என்பதை புரிந்து கொள்ளாமல் தகுதிக்கும் செல்வாக்கிற்கும் பொருத்தமில்லாத அளவிற்கு பெரிதாக பேசுகின்ற அல்லது வேண்டுமென்றே பேசவைக்கப்படுகின்ற சிங்கள கடும் போக்கு அரசியல் கட்சிகள் சிலவற்றின் கருத்துக்களை இது விடயத்தில் பொருட்படுத்த தேவையில்லை. அவ்வாறு பேசாவிட்டால் அவர்களுக்கு அரசியலில் இடமிருக்காது.
இலங்கைக்கு சந்தர்ப்பவசமாக ஒரு அநியாயம் செய்யவேண்டி ஏற்பட்டுவிட்டதே என்ற உணர்வின் அடிப்படையிலேயே இந்திய அரசாங்கத்தின் பிரதிபலிப்புக்களை கடந்த சில நாட்களாக அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
தமிழகத்தின் பிரதான திராவிட இயக்கக் கட்சிகள் குறிப்பாக கருணாநிதியின் தி.மு.க. வும் ஜெயலலிதாவின் ஆளும் அண்ணா தி.மு.க. வும் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டுமென்று ஒருமித்த குரலில் வலியுறுத்தியதைப்பற்றி பெரிதாக நம்மவர்கள் பேசிக்கொண்டார்கள். ஆனால், தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஏட்டிக்குப் போட்டியாக வக்கிரத்தனமாக விடுத்துவருகின்ற அறிக்கைகள் எந்த அளவுக்கு ஆரோக்கியமற்ற உணர்வுகளின் அடிப்படையில் அவர்கள் எமது பிரச்சினையை அணுகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மீண்டும் ஒரு தடவை அம்பலப்படுத்தியிருக்கின்றன.
ஜெயலலிதாவிற்கு எதிராகப் பயன்படுத்தமுடியுமென்றால் எந்த பிரச்சினையையும் கருணாநிதி தவறவிடமாட்டார். அதேபோன்றே கருணாநிதிக்கு எதிராகப் பயன்படுத்த முடியுமென்றால் எந்த பிரச்சினையையும் ஜெயலலிதா ஒரு போதுமே தவறவிடமாட்டார். இந்த எழுதப்படாத விதிக்கு இலங்கை தமிழர்களின் அவலங்களும் கூட விதிவிலக்கானதாக இல்லை.
மத்தியிலுள்ள காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர்களைப் பொறுத்தவரை இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தாங்கள் கடைப்பிடிக்கின்ற அணுகுமுறைகள் தமிழ் நாட்டில் காங்கிரஸின் செல்வாக்கை மேலும் படுமோசமாக அரித்துவிடும் என்று அவர்கள் பெரிதாகக் கவலைப்படுவதில்லை. ஏனென்றால், தமிழகத்தில் காங்கிரஸின் செல்வாக்கு சரிந்தாலும் கூட பாராளுமன்றத் தேர்தல்களில் மாநிலத்தின் லோக்சபா ஆசனங்களைக் கைப்பற்றுகின்ற திராவிட இயக்கக் கட்சிகள் மத்தியில் ஆட்சியதிகாரத்தில் பங்கேற்பதற்கு கிடைக்கக்கூடிய எந்தவொரு சந்தர்ப்பத்தையுமே தவறவிடத் தயாரில்லை. இது காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு மாத்திரமல்ல பாரதிய ஜனதா கட்சி தலைவர்களுக்கும் நன்கு தெரியும். கடந்த இரு தசாப்தங்களில் பிரதான திராவிட இயக்கக் கட்சிகளின் நடத்தைகள் இதற்கு பிரகாசமான சான்றாகும்.
எனவே அவர்கள் இலங்கை நெருக்கடி தொடர்பில் புதுடில்லியின் அணுகுமுறைகளின் விளைவாக தமிழகத்தில் தேர்தல் வாய்ப்புகளில் ஏற்படக்கூடிய ஏற்றத் தாழ்வுகள் பற்றி பெரிதாகக் கவலைப்படப் போவதில்லை. இந்த யதார்த்த நிலையைப் புரிந்துகொள்ளாமல் தமிழகத்தின் உணர்வுப் பிரதிபலிப்புகள் குறித்து இனிமேலும் நாம் அதீத நம்பிக்கையை வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கக்கூடாது. ஜெனீவா விவகாரத்திலான ஒரு இடறுபாடு தமிழ் மக்களுக்கு வீணான நம்பிக்கைகளை மீண்டும் ஏற்படுத்துவதற்கு எமது தமிழ் அரசியல் சக்திகளினால் பயன்படுத்தப்படக் கூடாது.
எனது இந்தக் கருத்துக்களை இலங்கைத் தமிழர்களின் கஷ்டங்கள் தீர வேண்டுமென்பதற்காக இதயசுத்தியுடன் குரல்கொடுக்கின்ற தமிழகத்தில் இருக்கக்கூடிய சந்தர்ப்பவாத நோக்கற்ற, நேர்மையான அரசியல் சக்திகளினதும் தமிழக மக்களினதும் உணர்வுகளை அவமதிப்பதாக எந்தவிதத்திலும் அர்த்தப்படுத்த வேண்டியதில்லை. யதார்த்த நிலைமைகளைப் புரிந்து கொள்ளாமல் வெறுமனே உணர்ச்சிப் பரபரப்புகளினால் அள்ளுப்பட்டு போகாமல் இருக்க இனிமேலாவது கற்றுக்கொள்வோம்.
அடுத்ததாக இலங்கை நெருக்கடியில் சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகள் குறிப்பாக, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் காட்டிவருகின்ற அக்கறைகள் தொடர்பில் கவனத்தைச் செலுத்துவோம்.
நான்காவது ஈழப்போர் என்று வர்ணிக்கப்படுகின்ற எமது உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய படுமோசமான மனித உரிமை மீறல்கள், சர்வதேச சட்ட விதிமீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புடைமை குறித்த விவகாரங்களில் இந்த வல்லாதிக்க நாடுகள் காட்டுகின்ற அக்கறை அரசாங்கத் தலைவர்களைப் பொறுத்தவரை பெரிய தலையிடியாக மாறியிருக்கிறது. ஆனால், அதேவேளை, அதே தலையிடியையே தலையணையாகவும் மாற்றக்கூடிய பிரசாரத் தந்திரோபாயங்களை முன்னெடுத்து நாடு எதிர்நோக்குகின்ற பாரதூரமான பொருளாதார நெருக்கடி, சட்டத்தின் ஆட்சி சீர்குலைவு மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு ஏற்பட்டிருக்கின்ற ஆபத்து போன்ற பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவும் அரசாங்கத்தினால் இயலுமாக இருக்கிறது.
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா இலங்கைக்கெதிராகக் கொண்டுவந்த தீர்மானத்தைத் தோற்கடிப்பதற்கான இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுப்பதற்காக பெருவாரியான அமைச்சர்கள் மற்றும் இராஜதந்திரிகளை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவை பெரும் பொருட் செலவில் அனுப்பி வைத்துவிட்டு, உள்நாட்டில் அமெரிக்காவிற்கும் மேற்குலகிற்கும் எதிராக மக்களை வீதிகளில் அரசாங்கம் இறக்கியது.
கடந்த மூன்று வருட காலத்திலும் சர்வதேச சமூகத்திடமிருந்து வந்திருக்கக்கூடிய இராஜதந்திர ரீதியான நெருக்குதல்களைப் பயன்படுத்தி அரசாங்கத்தினால் சிங்கள மக்கள் மத்தியிலான அதன் ஆதரவை மேலும் விரிவுபடுத்திப் பலப்படுத்தக்கூடியதாக இருந்திருக்கிறது என்பதை நீங்கள் சகலரும் அறிவீர்கள். உள்நாட்டுப்÷ பாரில் அரசாங்கத்தின் நடத்தைகள் குறித்து கிளப்பப்பட்டு வந்திருக்கக்கூடிய ஒவ்வொரு பிரச்சினையையும் இலங்கையின் இறைமைக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டிற்கும் வருகின்ற அச்சுறுத்தலாக சிங்கள மக்களுக்குக் காண்பித்து அவர்கள் மத்தியில் ஏனைய சமூகங்களின் நியாயபூர்வமான அபிலாசைகளை முற்றாக மறுதலிக்கின்ற குணாம்சத்துடனானவக்கிரத்தனமான ஒரு தேச பக்தியை வளர்ப்பதற்கு அரசாங்கத்தினால் இயலுமாக இருக்கிறது.
நான்காவது ஈழப்போரின் ஒவ்வொரு கட்டத்திலும் அரசாங்கப் படைகளினால் அடையக் கூடியதாக இருந்த வெற்றிகளை ஒவ்வொரு தேர்தல்களிலும் சிங்கள மக்கள் மத்தியில் வாக்குகளை வாரியள்ளும் மந்திரக் கருவிகளாக மாற்றுவதில் ஜனாதிபதி ராஜபக்ஷ அரசாங்கம் பெரு வெற்றி கண்டிருந்தது. அதன் உச்சங்களாக அமைந்தவை 2010 ஜனாதிபதித் தேர்தலும் பாராளுமன்றத் தேர்தல்களும் ஆகும். தற்போது கூட ஜெனீவா சூட்டோடு சர்வஜன வாக்கெடுப்பை அல்லது இடைக்கால பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டுமென்று பேச்சொன்று வந்திருப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.
போர் வெற்றிக் களிப்பில் சிங்கள மக்களை மிதக்க விடுகின்ற அரசியல் தந்திரோபாயங்களையே அரசாங்கம் இடையறாது முன்னெடுத்து வருகிறது. இலங்கையின் இறைமை என்பதையோ சுயாதிபத்தியம் என்பதையோ நாட்டின் ஆட்சியதிகாரக் கட்டமைப்பின் மீதான சிங்கள, பௌத்த மேலாதிக்கம் என்பதைத் தவிர வேறு எதுவுமாக அதிகப் பெரும்பான்மையான சாதாரண தென்னிலங்கை மக்கள் விளங்கிக் கொண்டிருப்பதாக நான் நினைக்கவில்லை.
ராஜபக்ஷ அரசாங்கம் தற்போது நிலவுகின்ற படுமோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் கூட செல்வாக்குடன் இருப்பதாகத் தோன்றுவதற்கு ஒரே காரணம் போரில் கண்ட வெற்றியேயாகும். இதன் விளைவாக ஆட்சி நிர்வாகத்தின் சகல துறைகளிலும் இராணுவவாத அணுகுமுறைகளைக் கடைப்பிடிப்பதில் ஆட்சியாளர்கள் பிரத்தியேகமான அக்கறையுடன் செயற்பட்டுக்கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. போர் வெற்றிக்குக் காரணமான பாதுகாப்புப் படைகளே இலங்கையில் சகல தரப்பினராலும் முன்மாதிரியானவர்களாகக் கொள்ளப்பட வேண்டுமென்ற போதனைகள் செய்யப்பட்ட வண்ணம் இருக்கின்றன.
தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தில் முன்னெப்போதையும் விட சிங்கள பௌத்த பேரினவாத உணர்வலைகள் கூடுதலான அளவுக்கு ஆக்கிரமித்து நிற்கும் துரதிர்ஷ்டவசமான நிலைவரம் இலங்கையில் வாழும் ஏனைய சமூகங்களில் எந்தவொரு நியாயபூர்வமான பிரச்சினை தொடர்பிலும் முன்னென்றுமில்லாத அலட்சியப் போக்கை சிங்கள மக்கள் வளர்த்துக்கொள்வதற்கு வழிவகுத்திருக்கிறது.
இன, மத பேதமின்றி நாட்டின் சகல மக்களையும் பாதித்திருக்கின்ற பொருளாதாரப் பிரச்சினைகள் உட்பட பெருவாரியான அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பது குறித்து கிஞ்சித்தேனும் அக்கறை காட்டாத ஒரு அரசாங்கம் மக்கள் செல்வாக்குடையதான தோற்றப்பாட்டை எவ்வாறு கொண்டிருக்க முடிகிறது?
இந்த அரசாங்கத்தின் தன்மை பற்றி கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலாநிதி ரொஹான் எதிரிசிங்க ஒரு தடவை செய்த வர்ணனையை இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமானதாக இருக்குமென்று நினைக்கிறேன். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சில வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற டட்லி சேனநாயக்க நினைவு பேருரை நிகழ்வொன்றில் ஏற்பாட்டாளர்கள் சார்பில் நன்றி தெரிவித்து உரையாற்றிய கலாநிதி எதிரிசிங்க இன்றைய அரசாங்கத்தை ‘கணிணீதடூடிண்t கூணிtச்டூடிtச்ணூடிச்ண கீஞுஞ்டிட்ஞு’ என்று வர்ணித்தார். எனது அறிவுக்கு எட்டியவரை இதை விடப் பொருத்தமான வர்ணனையை இலங்கையில் வேறு எந்த அரசியல் அவதானியும் செய்ததாக நான் அறியவில்லை.
இத்தகையதொரு பின்புலத்திலேயே போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்று சர்வதேச சமூகத்தினால் தெரிவிக்கப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டுகளுக்கான எதிர்வினையை அரசாங்கம் காட்டி வருகிறது. அரசாங்கத்தின் பொறுப்புடைமை தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீமூன் நியமித்த நிபுணர் குழுவிற்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற சாகாத வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடக்கம் அண்மையில் நான்கு வாரங்களாக ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வரை இதை பிரகாசமாகக் காணக்கூடியதாக இருந்தது.
அமெரிக்காவுக்கும் மேற்குலகிற்கும் எதிராக அரசாங்க இயந்திரத்தில் முழுமையான அனுசரணையுடன் முடுக்கிவிடப்பட்டிருக்கின்ற பிரசாரங்கள் ஆரோக்கியமான தளத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை இலங்கையர்கள் மத்தியில் தோற்றுவிக்கவில்லை. மாறாக இனப்பிளவையே அது மேலும் அகலமாக்கிக் கொண்டிருக்கிறது. உள்நாட்டுப் போரின் முடிவிற்குப் பிறகு தான் இலங்கையின் பிரதான சமூகங்கள் மத்தியிலான முரண்பாடுகள் மேலும் கடுமையான அளவுக்குக் கூர்மையடைந்து காணப்படுகின்றன.
தேசிய நல்லிணக்கத்தை நோக்கிய அரசியல் செயன்முறைகளில் அரசாங்கம் அக்கறை காட்டாமல் இருந்து வருவதைத் தவிர இதற்கு வேறு காரணங்களைக் கூற முடியாது. நிகழ்வுப் போக்குகளின் திசை மார்க்கத்தை நோக்கும் போது தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு வெறுமனே சாக்குப் போக்காகவேனும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படக்கூடிய எந்தவொரு முயற்சியும் கூட பெரும்பான்மையினத்தின் “சுய மரியாதைக்கு’ இழுக்காகிவிடக்கூடிய ஒரு செயலாக தென்னிலங்கையில் காண்பிக்கப்படக்கூடிய ஆபத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
ஜெனீவாவில் அமெரிக்காவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. அது பற்றிய உள்நாட்டு விளக்கங்கள், வியாக்கியானங்களை நீங்கள் எல்லோரும் கடந்த சில நாட்களாக அறிந்துகொண்டிருக்கிறீர்கள். இலங்கை மண்ணில் நிலவுகின்ற உண்மை நிலைவரங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது ஜெனீவாத் தீர்மானத்தினால் உடனடியாக எந்தவிதமான குறிப்பிடத்தக்க மாறுதலும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. தானே நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதில் தயக்கமின்றி அக்கறை காட்ட வேண்டிய பொறுப்பை உணர்ந்துகொள்ளாமல், அதை அமெரிக்கா மற்றும் மேற்குலகிற்கும் தனக்குமிடையிலான ஒரு இராஜதந்திரச் சர்ச்சையாக அல்லது பலப்பரீட்சையாக நினைக்கின்ற அரசாங்கம் வரும் நாட்களில் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளில் ஆரோக்கியமானவற்றை நடைமுறைப்படுத்துமாறு இலங்கையைக் கோரும் தீர்மானம் என்னதான் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அரசாங்கம் எடுத்திருக்கின்ற நிலைப்பாட்டைப் பொறுத்தவரை ஆணைக்குழுவின் அறிக்கையை சர்வதேச சமூகத்தின் நெருக்குதல்களுக்குப் பணிந்து எந்தவிதத்திலும் நடைமுறைப்படுத்துவதற்குத் தயாரில்லை என்பது வெளிப்படையானது. சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகளை மேலும் விரோதித்துக்கொள்ளக்கூடாது என்ற அபிப்பிராயம் கொண்ட அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் நெகிழ்ச்சித்தன்மையான அறிக்கைகளை விடுத்துக்கொண்டிருந்தாலும் கூட அவர்களினால் பெரியளவுக்கு நிகழ்வுப் போக்குகளில் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது.
இந்த விவகாரத்தை சர்வதேச சமூகத்துடனான இராஜதந்திரச் சர்ச்சையாகக் காட்டிக்கொண்டு அந்தச் சர்ச்சையை இழுத்தடித்துக்கொண்டு அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கையிலும் இறங்காமல் இருக்கப் போகிறது என்பதற்கான தெளிவான அறிகுறிகளை கடந்த ஒரு சில தினங்களில் காணக்கூடியதாக இருந்தது. ஆணைக்குழு அதன் ஆணையைக் கடந்து செயற்பட்டு விட்டதனால் அதன் விதப்புரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்று இப்போது சிரேஷ்ட அமைச்சர்கள் செய்தியாளர் மாநாட்டைக் கூட்டி அறிவித்திருக்கிறார்கள். ஆணைக்குழு அதன் ஆணையை மீறி விட்டதென்பதைக் கண்டுபிடிப்பதற்கு இந்த அமைச்சர்கள் ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் வரை எதற்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கும் ஏனைய அறிக்கைகளுக்கு நடந்த கதி நேரப்போகிறது என்பதற்காக தெளிவான சமிக்ஞைகள் காட்டப்பட்டிருக்கின்றன.
நல்லிணக்க ஆணைக்குழுவின் கண்டுபிடிப்புகளும் அவதானிப்புகளும் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச சட்ட விதி மீறல்கள் தொடர்பிலும் அது விடயத்தில் அரசாங்கத்திற்கு இருக்கின்ற பொறுப்புடைமை தொடர்பிலும் அரசாங்கம் முன்கூட்டியே எடுத்திருந்த நிலைப்பாடுகளை எல்லை வரையறைகளை எந்தவிதத்திலுமே மீறிவிடக்கூடாது என்பதில் ஆணையாளர்கள் பிரத்தியேகமான அக்கறையுடன் செயற்பட்டிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.
அத்தகைய போதாமைகளுக்கு மத்தியிலும் கூட, தேசிய நல்லிணக்கத்தை நோக்கிய குறைந்தபட்ச செயற்பாடுகளிலாவது அரசாங்கத்தை இறங்க வைப்பதற்கு நெருக்குதல்களைக் கொடுக்க வேண்டிய பணி எதிரணிக் கட்சிகளுக்கு இருக்கிறது. அடிப்படையில் நோக்கும் போது தேசிய நல்லிணக்கத்தை நோக்கியதாக முன்னெடுக்கப்பட வேண்டியவை என்று சர்வதேச சமூகம் அரசாங்கத்தை வலியுறுத்தி வந்திருக்கின்ற விடயங்கள் உண்மையில் உள்நாட்டில் எதிரணிக் கட்சிகளினால் போரின் முடிவிற்குப் பிறகு உடனடியாகவே முன்வைக்கப்பட்டிருக்க வேண்டிய கோரிக்கைகளாகும்.
ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகுதான் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண வேண்டுமென்றும் அரசாங்கத்தைக் கேட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. மறு புறத்திலே நல்லிணக்க ஆணைக்குழுவின் அவதானிப்புகளையும் கண்டுபிடிப்புகளையும் நிராகரித்து அறிக்கை விடுத்த பிரதான தமிழ் அரசியல் அணி அதே ஆணைக்குழுவின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் ஜெனீவாத் தீர்மானத்தை வரவேற்றிருப்பதையும் காண்கிறோம்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளை ஏற்றுக்கொள்வதோ எதிர்ப்பதோ என்பது வேறு விடயம். ஆனால், இன்று இலங்கை மண்ணில் நடந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது வெளியுலகின் கவனத்தை ஈர்த்திருக்கும் ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தை செயற்பட வைப்பதற்கு நெருக்குதல்களைக் கொடுப்பதற்கான ஜனநாயக ரீதியான அரசியல் போராட்டங்களுக்கு மக்களை அணி திரட்டி வெகுஜன இயக்கமொன்றை முன்னெடுக்க வேண்டிய தலையாய பணி எதிரணியைக் காத்திருக்கிறது. ஜெனீவாவிற்குப் பிறகு அரசாங்கத்தினால் அடுத்த நகர்வுகள் எத்தகையவையாக இருக்குமென்பதே உள்நாட்டிலும் வெளியுலகிலும் கிளம்பியிருக்கின்ற முக்கியமான கேள்வி.
ஜெனீவாவில் தீர்மானமொன்றைக் கொண்டு வருவதைத் தவிர, இலங்கையை இணங்க வைப்பதற்கோ அல்லது வழிக்குக் கொண்டுவருவதற்கோ வேறுமார்க்கம் இல்லையென்று சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகள் கண்டதன் பின்னரே, நல்லிணக்கத்திற்கான செயன்முறைகளுக்கு கால அவகாசம் தேவையென்ற வாதம் அரசாங்கத் தரப்பினால் முன்வைக்கப்பட்டது. ஆணைக்குழுவினால் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்தினால் அக்கறை காட்டப்படவில்லையென்ற கவலையை ஆணையாளர்கள் தங்கள் இறுதி அறிக்கையில் வெளியிட்டிருப்பதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது எந்த முகத்துடன் அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் கால அவகாசம் கோருகிறது என்ற கேள்வியைக் கேட்க முடியாமல் இருக்கவில்லை.
மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போர் தவிர்க்க முடியாத வகையில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சர்வதேச பரிமாணமொன்றைக் கொடுத்திருக்கிறது. இந்த உண்மைக்கு முகங்கொடுக்கத் தயாரில்லாமல் தீக் கோழி மனோ பாவத்தை வளர்த்துக்கொண்டதன் விளைவாகவே இன்று அரசாங்கம் சர்வதேச ரீதியாக பாரதூரமான இராஜதந்திர நெருக்குதல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.
இலங்கையில் இடம்பெறுகின்ற நிகழ்வுப் போக்குகள் தொடர்பில் கொழும்பினால் அளிக்கப்படக்கூடிய விளக்கங்களும் வியாக்கியானங்களும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெறவில்லையென்ற உண்மையை அரசாங்கத்தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமானதாகும்.
போர் மூண்டதற்கான அடிப்படைக் காரணிகள் போரின் முடிவுடன் இல்லாமற் போய்விடவில்லை.போருக்குப் பின்னரான கால கட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோமே தவிர முரண்பாடுகள் தீர்க்கப்பட்டுவிட்ட காலகட்டத்தில் அல்ல. அபிவிருத்தியையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று அரசாங்கம் தன் மனம் போன போக்கில் கூறிக்கொண்டிருக்கிறதே தவிர கடந்த வருடம் அந்த அபிவிருத்திச் செயன்முறைகளில் கூட தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளை சம்பந்தப்படுத்துவதில் அரசாங்கம் அக்கறைகாட்டுவதாக இல்லை.
அரசாங்கம் கூறுகின்ற அபிவிருத்தி ஒருபோதுமே அரசியல் தீர்வுக்குப் பதிலீடாகிவிட முடியாது. தேசிய இனப்பிரச்சினையை 30 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலையில் தற்போது பார்க்கவும் கூடாது. கடந்த மூன்று தசாப்தங்களில் அந்தப் பிரச்சினைக்கு புதிய பரிமாணங்கள் சேர்ந்து புதிய சிக்கலான தன்மைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்த புதிய அணுகுமுறைகளையே நெருக்கடியில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது.
தமிழ் பேசும் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு மானசீகமான அரசியல் துணிச்சலை வெளிக்காட்டக்கூடிய விவேகமும் முதிர்ச்சியும் அரசாங்கத் தலைவர்களுக்கு இருந்திருந்தால், உள்நாட்டில் தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியதாக அவர்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் ஊடாட்டங்களை முன்னெடுப்பதில் அக்கறை காட்டியிருந்தால் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இலங்கை நெருக்கடியை மையமாகக் கொண்ட செயற்பாடுகளுக்கு பெருமளவுக்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.
இதைச் செய்வதற்கு தங்களை தயார்படுத்த வேண்டியதே அரசாங்கத் தலைவர்கள் முன்னால் இருந்த பாரிய பொறுப்பாகும். அதை அலட்சியம் செய்ததன் விளைவாகவே சர்வதேச சமூகத்திடமிருந்து நெருக்குதல்களை அரசாங்கம் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.
ஜெனீவாவுக்குப் பிறகு அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து எப்போது, என்ன பேசப் போகிறது? பாராளுமன்றத் தெரிவுக்குழுவே அரசியல் தீர்வைக் காண்பதற்கான பயனுறுதியுடைய ஒரே மார்க்கம் என்று கூறிவந்த அரசாங்கம் அந்தத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்வதற்கு மறுப்புத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகளையும் நிறுத்தி விட்டது.
பாராளுமன்றத் தெரிவுக்குழு மூலமாக ஆறு மாதங்களில் அரசியல் தீர்வொன்றை வகுக்க முடியுமென்று அரசாங்கத் தலைவர்கள் கூறி ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன. அந்தத் தெரிவுக்குழுவை அமைக்கும் பணிகளிலாவது அரசாங்கம் அக்கறை காட்டக்கூடிய மனோ நிலையில் தற்போது இல்லையென்றே தோன்றுகிறது. இந்த இலட்சணத்தில் இனிமேல் அரசியல் அமைப்புக்கான 13 ஆவது திருத்தம் பற்றிய அல்லது 13 + பற்றிய பேச்சுக்களின் கதியை உங்களால் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்குமென்று நினைக்கிறேன்.
சிங்கள மக்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை விளங்கிக் கொள்ளக்கூடியதாக, அரசியல் தீர்வொன்றைக் காண வேண்டிய அவசியத்தை உணர்ந்துகொள்ளக்கூடியதாக அவர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு அவர்கள் மத்தியில் இருக்கக்கூடிய நியாய சிந்தை படைத்தவர்களுடனும் முற்போக்கு சக்திகளுடனும் தமிழ் மக்களும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் இணைந்து செயற்பட வேண்டுமென்ற கருத்தை முன்வைப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், தமிழ் பேசும் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடிய அல்லது புரிந்துகொள்ளக்கூடிய முற்போக்கு சக்திகள் இன்று சிங்கள மக்கள் மத்தியில் இருக்கின்றனவா? அவ்வாறு இருந்தாலும் கூட அவர்களினால் அரசியல் செயற்பாடுகளில் எந்தளவு தூரத்திற்கு சிங்கள சமுதாயத்தின் அடி மட்டத்திற்குச் சென்று செயற்படக்கூடியதாக இருக்கிறது? சிங்கள மக்கள் மத்தியில் முற்போக்கு சக்திகளை வளர்த்தெடுக்கும் பணியை தமிழ் அரசியல் சக்திகளா செய்ய வேண்டும்? எது எவ்வாறிருப்பினும் சிங்கள மக்கள் தற்போது படிப்படியாக இழந்துவருகின்ற ஜனநாயக மற்றும் குடியியல் சுதந்திரங்களை மீட்டெடுப்பதற்கு அரசியல் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கால கட்டமொன்று நிச்சயம் வந்தே தீரும். அந்த நேரத்தில் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள அரசியல் சக்திகளுக்கு அந்தப் போராட்டத்தில் இணைவதில் ஒரு பிரதான வரலாற்றுப் பங்கு இருக்கவே செய்யும். அத்தகைய ஒரு போராட்டம் முழு இலங்கைக்கும் ஜனநாயகத்தை மீட்டுக்கொண்டு வரும் பொழுதுதான் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய சக்திகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு சிங்கள மக்கள் மத்தியில் வளர்ந்தெழக்கூடியதாக இருக்கும்.
இந்நிலையில், ஒன்றை மட்டும் உறுதியாகக் கூற முடியும். எமது இன நெருக்கடியில் இருக்கக்கூடிய சர்வதேச பரிமாணத்தை அரசாங்கம் முற்றுமுழுதாக அலட்சியம் செய்வதும் அரசாங்கம் மீதான சர்வதேச நெருக்குதல்களை மாத்திரம் முற்றுமுழுதாக அடிப்படையாகக் கொண்டு தமிழ் அரசியல் சக்திகள் அவற்றின் தந்திரோபாயங்களையும் அணுகுமுறைகளையும் வகுத்துக்கொள்ள முயற்சிப்பதும் சம அளவுக்கு அவரவருக்குக் கெடுதியானது.
வரலாற்றிலிருந்து பாடங்களைப் படிக்க வேண்டும். ஆனால், நாமெல்லோரும் இதுவரையான வரலாற்றிலிருந்து படிக்கக்கூடியதாக இருக்கும் பாடம் எவருமே வரலாற்றிலிருந்து பாடங்களைப் படிக்க முயற்சிப்பதில்லை என்பதேயாகும்.

No comments:

Post a Comment