Translate

Monday 30 April 2012

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் லண்டன் நகரின் மையப்பகுதியில் நடைபெறும் ஏக மனதாக தீர்மானம்.


முள்ளிவாய்க்கால் நினைவு தினம் லண்டன் நகரின் மையப்பகுதியில் நடைபெறும் ஏக மனதாக தீர்மானம்.
ஜேர்மனியை ஆண்ட ஹிட்லர், பல்லாயிரம் யூத இனத்தவர்களை நச்சுப் புகையூட்டிக் கொன்றொழித்தார். சிறை பிடித்த பல ஆயிரக்கணக்கான யூதர்களை தடுப்பு முகாமில் வைத்து சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி பின்னர் நச்சு வாயுவை பாவித்து அவர்களை கொன்றார் என்பது வரலாறு.


இதேபோலவே முள்ளிவாய்க்காலிலும் எம் மின மக்களை இலங்கை இராணுவம் பல்லாயிரக்கணக்கில் கொன்றது. இதனை நினைவு கூரும் நாளான மே மாதம், முள்ளிவாய்க்கால் தினத்தில் � வேற்றின மக்கள் ஒன்றுகூடும், லண்டன் நகரின் மையப்பகுதியில் நினைவு தினத்தை நடத்த பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) முடிவெடுத்துள்ளது. இதனை நேற்றைய தினம்(29) நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் முன்மொழிய, மக்கள் அதற்கான ஆதரவினை நல்கியுள்ளனர் !

தமிழர்கள் செரிந்து வாழும் பகுதியில், இந் நிகழ்வை ஏன் நடத்தக்கூடாது ? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டது. அதாவது ஒரு இனத்தின் அழிவை, குறிப்பிட்ட அந்த இன மக்களுக்குள் மட்டும் மட்டுப்படுத்த முடியாது. தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்டதை, தமிழர்கள் மட்டும் ஒரு இடத்தில் கூடி நின்று, மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செய்வதால் என்ன பயன் ? இந்த இன அழிப்பு வேற்றின மக்களுக்கு தெரியப்படுத்தப்படவேண்டியதொன்று ! தமிழர் அல்லாத பல்லின மக்கள், முள்ளிவாய்க்காலில் எம்மின மக்கள் கொல்லப்பட்டதை அறியவேண்டும். துடி துடித்து இறந்த தமிழ் கர்பினிகள், குழந்தைகள் மற்றும் முதியோர்களின் நிலை பற்றி அறியவேண்டும். எனவே முள்ளிவாய்க்கல் நினைவு தினத்தை வேற்றின மக்கள் பார்க்கும் வகையில், லண்டன் நகரின் மையப்பகுதியில் நடத்தவேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது !

இந்த அழைப்பை தமிழர்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டதாக நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யூதர்கள் தமது இனவழிப்பு நாளை எவ்வாறு ஹோலகாஸ்ட் என்று கூறுவார்களோ, அதேபோல முள்ளிவாய்க்கால் என்றால் அது தமிழர்களின் இன அழிப்பு நாளாக பிரகடனப்படுத்தவேண்டும் என பிரித்தானிய தமிழர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இச் சொல்லானது(முள்ளிவாய்க்கால்) ஐக்கியராட்சிய ஆங்கில அகராதியில் சேர்க்கப்படவேண்டிய சொல் என்பதனையும் தமிழ் மக்கள் முன்னெடுக்கவுள்ளனர். இந் நாளில், பிரித்தானியாவின் பல முன்னணி அரசியல்வாதிகளும், மனித உரிமைச் செயல்பாட்டாளர்களும், செயல்பாட்டாளர்களும், புத்திஜீவிகளும் மற்றும் பல பொதுமக்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் தினத்தில் நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு, வேற்றின மக்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லவேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவையினர் வேண்டுகோள் விடுக்கின்றனர். எம் இனம் ஒற்றுமையாக நின்று வேற்றின மக்களுக்கு எமது பலத்தை நிரூபிக்கவேண்டும் என அவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment