Translate

Tuesday 10 April 2012

டில்லியின் செயற்பாடுகளால் கடும் அதிருப்தியில் கொழும்பு; கோத்தபாய அசோக்காந்தா முக்கிய பேச்சு


இலங்கை குறித்த புதுடில்லியின் அண்மைக்காலச் செயற்பாடுகளால் மஹிந்த அரசு கடும் ஆத்திரமும் அதிருப்தியும் அடைந்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.புதுடில்லி மீதான கொழும்பின் அதிருப்தி இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா இலங்கைப் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. இந்தச் சந்திப்பில் இந்தியாவின் போக்குக்குறித்து இந்தியத் தூதுவருடன் கடும் தொனியில் பேசியிருக்கிறார் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ.


ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடை யிலான உறவில் இறுக்கம் ஏற்பட்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ள தற்போதைய சூழ்நிலையில், இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் தொடர்பிலான முக்கிய பேச்சுகளை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தாவுடன் நடத்தியிருக்கிறார் என்று உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் நேற்று உதயனிடம் தெரிவித்தன.
ஜெனிவாத் தீர்மானம் தொடர்பில் இந்தியாவின் வகிபாகம், அதன்பின்னர் இந்தியாவின் உயர்மட்ட உறுப்பினர்கள் வெளியிட்டுவரும் கருத்துகள் உட்படப் பலவிடயங்கள் தொடர்பிலான இலங்கையின் அதிருப்தியை இந்தச்சந்திப்பின் போது பாதுகாப்புச் செயலாளர் வெளியிட்டிருக்கிறார் என மேற்படி வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
“இறுதிப் போருக்குப் பின்னரும், முன்னரும் இலங்கையின் நிலைவரங்கள் குறித்து புதுடில்லிக்கு அவ்வப்போது அறிவுறுத்தி வந்தோம். போருக்குப் பின்னரான வடபகுதி அபிவிருத்தி, மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு முயற்சிகள் என்பன குறித்து இந்தியா அறிந்தே வைத்திருந்தது.
ஆனால், ஜெனிவாத் தீர்மானம் மற்றும் அதற்குப் பின்னரான இலங்கை தொடர்பில் இந்தியா பின்பற்றி வரும் அணுகுமுறை ஆரோக்கியமானதாக இல்லை” என்று பாதுகாப்புச் செயலாளர் இந்தியத் தூதுவரிடம் சுட்டிக்காட்டினார் எனப் பெயர் குறிப்பிடவிரும்பாத மூத்த இந்திய இராஜதந்திரியொருவர் உதயனிடம் தெரிவித்தார்.
இந்தப் பேச்சின்போது பாதுகாப்புச் செயலர்கடும் கோபமடைந்த நிலையில் இந்தியத் தூதுவருடன் பேசியதாக அந்த அதிகாரி மேலும் கூறினார். இதற்கிடையில், இலங்கை விவகாரம் தொடர்பில் இந்தியா தற்போது மேற்கொண்டுவரும் கொள்கைகள் குறித்தான கொழும்பின் அதிருப்தி அரச உயர்மட்ட அதிகாரி ஒருவரின் ஊடாக இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.

No comments:

Post a Comment